திங்கள், 28 அக்டோபர், 2013

‘சுப்புடுவும் நாய்களும்’ அனுமதிக்கப்படமாட்டார்கள்!!!

‘குமுதம்’ இலவச இணைப்பாக[30.09.2002 இல்], கர்னாடக இசை விமர்சகர் சுப்பிரமணியம் என்கிற ‘சுப்புடு’, ‘வெற்றிக்கு வயது தடையில்லை’ என்ற தலைப்பில் ஓர் அனுபவக் கட்டுரை வழங்கியிருந்தார். அதில்.....

துணிவுதான் விமர்சனத் துறையில் தன்னை முன்னுக்குக் கொண்டு வந்ததாகக் குறிப்பிடும் சுப்புடு.........., “என் விமர்சனப் பாதையில், சொல்லொணாத துன்பங்கள்...வக்கீல் நோட்டீஸ்...அடி உதை...தொலைபேசி வசவுகள்...‘சுப்புடுவும் நாய்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்ற அட்டை விளம்பரங்கள்... திருவையாற்றில், ‘சுப்புடு திரும்பிப் போ’ என்று சைமன் கமிஷன் மாதிரி வரவேற்பு...இவற்றையெல்லாம் சகித்து, தாண்டி, இந்த 86 வயதில் [சுப்புடு 2007 இல் காலமானார்] நான் துள்ளு நடை போடுகின்றேனே... சாதனைக்கு வயது ஒரு குறுக்கீடு அல்ல என்பதற்கு என்னைவிட வேறு சாட்சி என்ன வேண்டும்?” என்று கேட்டு நம்மை மலைக்க வைக்கிறார்!

கர்னாடக இசையை வெறுத்தவர்கள்கூட சுப்புடுவின் விமர்சன எழுத்து நடைக்குத் தம் மனதைப் பறி கொடுத்தார்கள்; அவர் விமர்சனங்களைத் தொடர்ந்து படித்தார்கள்.

கீழே இடம்பெறுவது அவருடைய இசை விமர்சனம் அல்ல; 1942 ஆம் ஆண்டில், ஜப்பான்காரனின் குண்டுவீச்சுக்கு அஞ்சி, பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளில் ஒருவராக இருந்த சுப்புடுவின் அனுபவப் பகிர்வு இது [இலவச இணைப்புக் கட்டுரையின் இறுதிப் பகுதி]...........

எந்தவொரு இடத்திலும் கை வைக்காமல் [பெரிய பத்திகளை மட்டும் சிறு சிறு பத்திகளாகப் பிரித்திருக்கிறேன்], வரிக்கு வரி அப்படியே தந்திருக்கிறேன்:


‘நான் ஜப்பானியரால் விரட்டப்பட்டு, 1942 ஆம் வருஷம் இந்தியாவுக்குப் பாதயாத்திரை செய்தேன். நான் மட்டுமல்ல; இன்னும் 4,00,000 [நான்கு லட்சம்] அகதிகள்; 480 மைல் கால்நடைப் பயணம்.

ஆறு நதிகள்; ஏழு மலைகள் தாண்ட வேண்டும். நீங்களே யோசித்துப் பாருங்கள்...நடக்க முடியுமா? அதில் ஒரு லட்சம் பேர் மாண்டு போனார்கள். அது கிட்டத்தட்ட ஒரு பிரளயம்.

1942, ஜூன் மாதம் 2ஆம் தேதி என்று ஞாபகம். அந்தத் தேதி நள்ளிரவில் நாங்கள் சிரபுஞ்சி மலையின் உச்சியில் இருக்கிறோம். எட்டு நாளாகக் கொட்டும் மழை! இடி மின்னல்...நான்கு நாட்களாக அன்ன ஆகாரம் கிடையாது. கொலைப் பட்டினி!

‘போதாததுக்குப் பொன்னியம்மா குறை’ என்பது போல அந்த மலைப் பிரதேசத்தில் அட்டைகள் உறிஞ்சி உறிஞ்சி கால்கள் எல்லாம் சூம்பிப் போய்விட்டன.

அப்போது அந்த மழையில் மின்னல் தாக்கி ஒரு மரமே எரிந்துவிட்டது. இப்போது நினைத்துப் பார்த்தாலும் தேகம் நடுங்குகிறது. அந்தக் கொட்டும் மழையில் மின்னல் தாக்கி ஒரு மரம் எரிய வேண்டும் என்றால் அந்தப் பயங்கரத்தை உங்களால் நினைத்துப் பார்க்க முடியாது.

மரங்கள் வேரோடு பெயர்க்கப்பட்டு மலைச் சரிவில் கீழே போய்க்கொண்டிருந்தன.

எங்களுக்கு வழித்துணையாக ஒரு நாகா கூலி ஆள் இருந்தான். எங்களுடன் வந்த பாபு ஐயர் என்பவருக்கு அட்டை உறிஞ்சி கால்கள் செயலற்றுப் போய்விட்டன! அவரைக் கூடையில் வைத்து முதுகில் கட்டிக்கொண்டு அந்த நாகா எங்களுக்குத் துணையாய் வந்தான்.

அவன் பாஷை எங்களுக்குத் தெரியாது. எங்கள் மொழி அவனுக்குத் தெரியாது. எல்லாம் சைகை பாஷைதான். அவன் சொன்னான்: “இனி இங்கு இருப்பது ஆபத்து. எந்த நிமிஷமும் நாமெல்லாம் அடித்துச் செல்லப்படலாம். அதோ தெரிகிறதே ஒரு மலை, அதில் ஒரு விளக்குத் தெரிகிறது பாருங்கள்...அங்கே போய்விடலாம்” என்று அவன் ஜாடையில் சொன்னதை நாங்கள் சிரமப்பட்டுப் புரிந்துகொண்டோம்.

எங்களுக்கெல்லாம் பயம். ஏனெனில், நாகாக்கள் நரமாமிசப் பட்சிகள் என்று எங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. இவனை நம்பிப் போனால் ஸ்வாஹாதான் என்று என் சகாக்கள் அனைவருமே வர மறுத்துவிட்டார்கள்.

நான் அந்த நாகாவிடம் சைகை பாஷையில் சொன்னேன்: “நாங்கள் வரத் தயார். நீ எங்களைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?”

அப்போதுதான் அது நடந்தது. அந்த நாகன், தன் பனியனுக்குள் கைவிட்டு, ஏசுநாதரின் சிலுவையை எடுத்துக் காட்டினான்.

அசந்து போனோம். அவனைத் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் தள்ளாடி நடந்தோம்.

அங்கே ஒரு கிறிஸ்தவ தேவாலயம்; மரத்தூண்களால் வேயப்பட்டது. அங்கு சென்றதும், தன் கைகளைக் கூப்பி நாக மொழியில் ஏதோ உரக்கச் சொன்னான்.

அப்போது நள்ளிரவு.

அந்த ஆலயத்திலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பாதிரியார் கையில் அரிக்கேன் விளக்குடன் குடை பிடித்துக்கொண்டு வந்து கேட்டைத் திறந்து, “கமான் ஜெண்டில்மேன்” என்று அகமும் முகமும் மலர அன்புடன் எங்களை வரவேற்றார்.

நான் அங்கு தெய்வத்தைக் கண்டேன். நாங்கள் என்ன ஜாதி...என்ன மதம்...மூச்!...ஒரு கேள்வி கிடையாது. அங்கு மனிதநேயம் பிரகாசித்துக்கொண்டிருந்தது.

எங்களை அமரச் சொல்லிவிட்டு, ஒரு 40 கஜம் கைத்தறித் துணியை எங்கள் முன் வைத்து, “உங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு இதை அணியுங்கள்” என்று கூறிய கையோடு தேனீர் தயாரித்துக் கொடுத்தார்.

முழுப் பட்டினி. கேட்கவா வேண்டும்? தேனீரை அண்டா அண்டாவாகக் குடித்தோம்.

அவர் சொன்ன செய்தி எங்களைத் திகைக்க வைத்தது. “எனக்கு முன் இங்கு வந்த சாமியாரை யாரோ சமைத்துச் சாப்பிட்டுவிட்டார்கள். நான் வந்து 40 - 50 வருடங்கள் போல் ஆகிறது. எங்கும் போவதில்லை. நாகா மொழியைக் கற்று பைபிளை மொழிபெயர்த்து இவர்களை நல்வழிக்குத் திருப்பியிருக்கிறேன். அருகிலேயே ஒரு மருத்துவமனை, ஒரு பள்ளி, ஒரு கைத்தறி ஆலை எல்லாம் அமைத்து இவர்களுக்கு இசையும் பயிற்றுவித்து வருகிறேன்.”

வயதான நிலையிலும், அடர்ந்த காட்டில், மனிதக் கறி தின்னும் மலைவாசிகளுக்குச் சேவை செய்கிறார் பாதிரியார் என்பதை யோசித்த போது.....

சேவைக்கும் சாதனைக்கும் வயது ஒரு தடையில்லை என்பது புரிந்தது.’

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo