செவ்வாய், 26 நவம்பர், 2013

இந்தக் காட்டுமிராண்டியா கடவுள்???!!! [ஒரு மீள் பதிவு]

ஒரு காடு.

 ஒரு மான், தான் ஈன்ற குட்டிக்குப் பால் தந்து கொண்டிருக்கிறது. கொடிய விலங்குகளால் ஆபத்து நேருமோ என்ற இயல்பான அச்சத்துடன் பார்வையை அலைய விடுகிறது.

அதைக் குறி வைத்திருந்த ஒரு சிறுத்தை, அசுர வேகத்தில் சீறிப் பாய்கிறது.

எதிர்ப்பட்ட ஆபத்தைக் குட்டிக்கு உணர்த்திவிட்டு, எகிறிப் பாய்கிறது மான்.

மான் தப்பியது. குட்டி சிறுத்தையிடம் சிக்கியது. அகப்பட்ட மான் குட்டியைத்  தன் குட்டிகளிடம் சேர்க்கிறது சிறுத்தை.

ஓடப் பார்க்கும் மான் குட்டியைச் செல்லக் கடி கடித்தும், முன்னங் காலால் இடறிவிட்டுக் கீழே தள்ளியும் அவை விளையாடுகின்றன. தாய்ச் சிறுத்தையும் கூட, அதைக் கொல்லுவது போல் பாசாங்கு செய்து குலை நடுங்க வைக்கிறது. நீண்ட நேரம் இப்படி வதை செய்த பிறகுதான் அதை அவை இரையாக்கிக் கொள்கின்றன.

உயிரைக் காத்துக் கொள்ள நடத்தும் போராட்டத்தில், அந்த மான் குட்டி படும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா? அது அனுபவித்த துன்பம் எத்தனை கொடூரமானதாயிருக்கும். அதைவிட, நாம் பட்ட வேதனை குறைந்ததா என்ன?

இந்தக் கொடூரக் காட்சியை நீங்கள் ‘டிஸ்கவரி’ சேனலில் பார்த்திருப்பீர்கள்.

இதற்கான உண்மை நிகழ்வைக் கடவுளும் பார்த்திருப்பார்தானே?

வேடிக்கை பார்த்துக் கொண்டு அவரால் எப்படிச் ’சும்மா’ இருக்க முடிந்தது?

அவர் மனம் என்ன கல்லா?

இம்மாதிரி எத்தனை எத்தனை கொடூரங்கள் அவர் படைப்பில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன?!

இவரையா, “அன்னையும் நீயே அப்பனும் நீயே”என்று புகழ்ந்து போற்றி வழிபடச் சொல்லுகிறார்கள்!!

“இதற்கெல்லாம் கடவுள் காரணமல்ல; பூர்வ ஜென்மத்தில் [கடந்த பிறவிகளில்] உயிர் செய்த பாவம் காரணம்” என்று மனம் கூசாமல் கதைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் மனிதப் பிறவிகளா?!

இந்தப் பிறவியில் நேரும் துன்பத்திற்குப் போன பிறவியில் செய்த பாவம் காரணம் என்றால், அதைச் செய்ய அந்தப் பிறவியில் தூண்டியது யார்? [உயிர் தானாக எதையும் செய்யாதே. முதல் முறை செய்வதற்குக் கற்றுக் கொடுப்பவர் கடவுள் அல்லவா?]

இது பற்றிச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் கேள்வி எழுப்பிய போது, “கடவுள் ஒரு போதும் தூண்ட மாட்டார். அவர் கருணையின் வடிவம். உயிர் வேறு ஆன்மா வேறு. வினை உயிரோடு சம்பந்தப்பட்டது. ஆனால், வினையின் பயனை  அனுபவிப்பது ஆன்மா. உயிர் அழியும். ஆன்மா அழியாது. அது இறைவனின் அங்கம்......” இப்படிப் புரியாத தத்துவங்களைச் [?] சொல்லிக் குழம்பி, கேள்வி கேட்பவரின் மூளையையும் குழப்பிச் சமாளித்தார்கள் ஆன்மிகவாதிகள்.

நாம்  கேட்கிறோம்: “இந்த மான் குட்டி கடந்த பிறவிகளில் தானாகவே பாவங்கள் செய்ததா?”

பதில் “ஆம்” என்றால்,  கருணைக் கடலான கடவுள் அச்செயலைத் தடுக்கவில்லையே, ஏன்?’

‘அதைச் செய்; இதைச் செய்யாதேன்னு யாரும் கடவுளுக்கு உத்தரவு போட முடியாது” என்கிறார்கள்.

“கடவுள் தானாகவே தடுத்திருக்க வேண்டும். , ஓர் உயிர் பாவம் செய்தால், அதற்கான தண்டனையை, அடுத்த பிறவியில் அறிவு வளர்ந்து மனமும் பக்குவப்பட்ட நிலையில் அனுபவித்தால் தவறில்லை. பிஞ்சுப் பருவத்திலேயே தண்டிப்பது அநியாயமில்லையா? இந்த அக்கிரமத்தைச் செய்யும் கடவுள், அல்லது அதை வேடிக்கை பார்க்கும் கடவுள் அரக்க குணம் கொண்டவரா? இல்லை, காட்டுமிராண்டியா?”

பதில் தருவார் யார்?

“இன்னும் ஒரே ஒரு கேள்வி. ஒரு பிறவியில் செய்யும் பாவத்திற்கு அந்தப்
பிறவியிலேயே தண்டனை கொடுத்தால், செய்த பாவத்தைப் புரிந்து கொண்டு உயிர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறது. அடுத்த பிறவியில் என்றால் அது சாத்தியம் இல்லையே. இது கூடவா கடவுளுக்குத் தெரியவில்லை?..........”

என்றெல்லாம் ‘மனித இனம் வாழணும்’ என்று நினக்கிற நாம் கேள்வி கேட்டால், ‘கடவுள் வாழணும்’என்று நினைக்கிற அவர்கள்........

“எதை எப்போது எங்கே செய்வது என்று அவருக்குத் தெரியும். நீ அற்ப மனிதன்; அரைவேக்காடு; கூமுட்டை; அகங்காரன்; ‘ஹிட்ஸ்’ வெறியன்’ என்று வாய் வலிக்க வசை பாடிக்கொண்டே இருக்கிறார்கள். ‘மட்டுறுத்தல்’ செய்தாலும் மனம் போனபடி ஏசி நம் மனம் நோக வைக்கிறார்கள்.

அறிவு பூர்வமான கேள்விகளுக்குப் பதில் தெரியாத போது இப்படிப் பேசிச் சமாளிப்பது ‘அவர்களுக்கு’க் கைவந்த கலை. இன்றும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். செய்யட்டும்.

நாமும் நம் கடமையைச் செய்துகொண்டே இருப்போம்.

****************************************************************************************************************