கடவுள் என்பவரின் தேவை என்ன? அவர் எப்போது, எங்கே எப்படித் தோன்றினார் என்பன போன்ற கேள்விகளுக்கு கடவுளுக்குச் சமமாக வைத்துப் போற்றுகிற அவதாரங்களிடமிருந்தோ ஆன்மிகவாதிகளிடமிருந்தோ சரியான பதில் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை.
//கடவுளுக்குத் தோற்றமோ அழிவோ இல்லை; அவர் எப்போதும் இருந்துகொண்டே இருப்பவர்// கடவுள் நம்பிக்கையாளரின் அனுமானத்தைத் தகர்க்கும் விதமாக, என்றும் இருத்தலான நிலை அவருக்கு எப்படி வாய்த்தது? அந்நிலையை உருவாக்கியவர் யார்? என்றெல்லாம் சிந்தனையாளர்கள் எழுப்பும் வினாக்களுக்கும் இன்றளவும் விடை தரப்படவில்லை.
//பிரபஞ்ச வெளியில் உலா வரும் கோள்களும், நட்சத்திரங்களும் பிறவும் வடிவமைக்கப்பட்ட விதமும், உயிர்களின் உடலமைப்பும் அவற்றின், ஓர் ஒழுங்குக்கு உட்பட்ட இயக்கமும் எத்தனை அதிசயமானது! இந்த அதிசயம் தானாக நிகழ்ந்திருக்க முடியாது. இதை நிகழ்த்த ஒருவர் தேவை. அவரே கடவுள்// என்று கடவுள நம்புவோர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த ‘அதிசயக் கடவுளை’த் தோற்றுவித்தது யார் என்ற கேள்விக்கு இந்நாள்வரை பதில் இல்லை; 'புரியவில்லை’ என்று ஒப்புக் கொள்ளும் நேர்மையும் இல்லை.
கடவுளோ வேறு எதுவோ, அனைத்திற்கும் மூலகாரணமான ‘ஒன்றின்’ தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற வினாவுக்கு விடை காணும் சாத்தியம் இல்லையென்றாலும், இந்த பிரமாண்ட ‘வெளி’யில் வகைவகையான பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் இயக்கங்களையும் காண முடிகிறது.
இவை எப்படியோ தோன்றிவிட்டன. இவற்றின் 'இருப்பு’ உண்மை.
இந்த உண்மையைக் கடவுள் நம்பிக்கையாளர், மறுப்பாளர் என அனைவரும் ஒப்புக் கொள்வர்.
இதைத் தமக்குச் சாதகமாக்கி, ஏன், எப்படி போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாவிட்டால் என்ன? கோள்களும் உயிர்களும் பிறவும் இருப்பது உண்மை எனின், அவற்றைத் தோற்றுவித்த ஒருவர் இருப்பது சாத்தியம்தானே? அவர்தான் கடவுள் என்று கடவுள் குறித்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட முயல்கின்றனர் கடவுளைப் போற்றுவோர்.
அத்தகையோரிடம் நாம் முன்வைக்கும் வினா இதுதான்.....
மையப்புள்ளி இல்லாத, நீளம் அகலம் சுற்றளவு விளிம்பு என்று எந்தவொரு அளவுகோலுக்கும் உட்படாத அதிசயிக்கத்தக்க அதிபிரமாண்டமான ‘வெளி’யில் இடம் கொண்டிருக்கும் அத்தனை பொருள்களுக்கும் உயிர்களுக்கும் மூலமாக இருப்பது கடவுள் என்னும் ஒரு ‘நபர்’தான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
அனைத்திற்கும் 'ஒன்றே’ அல்லது ‘ஒருவரே’ மூலகாரணம் என்று தீர்மானிப்பதற்கான அடிப்படை என்ன?
பல கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் எழுந்த போட்டியால்...மூண்ட பெரும் போரால் ஏனையோர் அழிந்துவிட ஒருவர் மட்டுமே மிஞ்சினாரா?
இதற்கு மிகச் சரியான பதிலை எவராலும் தர இயலாது. “தெரியாது” என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்ளவும் கடவுளை அனுமானித்தவர்களின் ‘கவுரவம்’ இடம் தருவதில்லை.
எத்தனை எத்தனை யுக காலங்கள் முயன்றாலும், மனித அறிவால் அளந்தறிய முடியாத [கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று முணுமுணுப்பது வீண் வேலை] ’வெளி’யில் இடம் கொண்டுள்ள அனைத்திற்கும் மூலகாரணம் பேரறிவு சான்ற அணுக்களே என்று ஏன் சொல்லக் கூடாது?
பெரும் எண்ணிக்கையிலான அணுக்களைக் கட்டுப்படுத்த ‘ஒருவர்’ அதாவது, ‘கடவுள்’ தேவையாயிற்றே என்ற ஐயம் எழுவது இயல்பு.
ஒரு கடவுள் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு நியதியின்படி செயல்படுவாரென்றால், அது அணுக்களுக்கும் பொருந்தும்தானே?
ஒவ்வொரு அணுவும் சில நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, பிரபஞ்சப் பொருள்களையும் உயிர்களையும் உருவாக்குவதும் இயக்குவதுமான செயல்களைச் செய்கிறது எனக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
படைப்புக்கான அணுக்கள்; உயர் பண்புக்கான அணுக்கள்; பல்வகை உணர்ச்சிகளுக்கான அணுக்கள்; நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் அணுக்கள்; தீய உணர்வுகளை உருவாக்கும் அணுக்கள் என்றிப்படி வகை வகையான அணுக்கூட்டங்கள் வெளியில் நிறைந்து கிடக்கின்றன. அவையே அனைத்திற்கும் மூல காரணம்; கடவுள் என்னும் ஒற்றை நபர் அல்ல என்று நாம் அனுமானிக்கலாம்.
இது வெறும் அனுமானம்தான். கடவுள் என்று ஒருவரை ஆன்மிகவாதிகள் அனுமானம் செய்தது போல.
காலப் போக்கில் எது உண்மை எது பொய் என்பதை அறிவியல்தான் நிரூபிக்க வேண்டும். அதுவரை, புரிந்து கொள்ள முடியாத எதையும், “புரியவில்லை” என்று ஒப்புக்கொள்வது அறிவுடையோர்க்கு அழகு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++