வியாழன், 1 நவம்பர், 2018

'மண முறிவு'[Divorce] வரவேற்பு விழா!!

இது நடந்த கதையல்ல; 'நடந்தால் நல்லது' என்னும் நல்ல எண்ணத்தால் உருவான கதை. படியுங்கள். முற்றிலும் மாறுபட்டதொரு படைப்பை வாசித்த அனுபவத்தைப் பெறுவீர்கள்!

“சரண்யா, அசோக் வீட்டுப் பிரிவு உபச்சார விழாவுக்குப் போகணுமே. நேரமாச்சு. கிளம்பு.”

“நீங்க மட்டும் போனால் போதாதா?”

”சேச்சே...அசோக், சுனிதா ரெண்டு பேரும் வீடு தேடி வந்து அழைச்சாங்க. நாம ரெண்டு பேரும் போகணும்.”

“சரிங்க.”

அடுத்த அரை மணி நேரத்தில், சரண்யாவும் அவள் கணவன் கார்த்திக்கும் 'கரூர்-திண்டுக்கல்' சாலையிலிருந்த ஒரு விழா மண்டபத்தில் நுழைந்தார்கள்.

அசோக், சுனிதா ஜோடிக்கு ஓர் ஆண்டு முன்பு திருமணம் நடந்த அதே மண்டபம். அதே கிழமை. அதே முதல் தேதி. நேரம் மட்டும் மாறியிருந்தது. கல்யாணம் நடந்தது காலை நேர சுபமுகூர்த்தம். இப்போதைய நிகழ்வு இருள் சூழும் ஒரு மாலைப் பொழுதில்.

கெட்டி மேளம்; மங்களப் பொருட்கள்; இன்னிசைக் கச்சேரி; வீடியோ; ஃபோட்டோ; மேடை அலங்காரம்.....என்று அப்போது மண்டபம் களை கட்டியிருந்தது. இன்று மெல்லிசை ஒலிபரப்பு மட்டும்.

மேடையில் ஒரு மேசை. அதன் மீது ஒரு மைக்.

மண்டப முகப்பில் அசோக்கும் சுனிதாவும்; புன்னகை தவழும் முகங்களுடன் எல்லாரையும் வரவேற்று விருந்துண்ண அனுப்பி வைத்தார்கள்.

விருந்துக்குப் பிறகு விழா ஆரம்பமானது.

மேடையில் அசோக்கும் சுனிதாவும் மட்டும்.

அசோக்கின் தந்தை, மேடையேறி வரவேற்புரை ஆற்றிவிட்டு இறங்கினார்.

அசோக் எழுந்தான்.

“விடைபெறு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இதே மண்டபத்தில் ஓராண்டுக்கு முன்பு எங்கள் திருமணம் நடந்தது. நீங்கள் எல்லோரும் வந்திருந்து நாங்களமெங்களை வாழ்த்தினீர்கள். அதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.....

எடுத்துக்காட்டான தம்பதியராய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று எங்களிடம் வேண்டுகோள் வைத்தீர்கள். அதை நிறைவேற்ற இயலாமைக்கு வருந்துகிறேன்;  வருந்துகிறோம்.

எதிர்பாராத விதமாக, எங்களிடையே சிக்கல்கள் முளைத்துவிட்டன. எவ்வளவோ முயன்றும் அவற்றைச் சரி செய்ய இயலவில்லை.

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்ட போதும் ஒருவரையொருவர் அநாகரிகமாகத் தூற்றிக் கொள்ளவில்லை. ஆரோக்கியமான முறையில் கலந்து பேசி, பிரிவது என்று முடிவெடுத்தோம்.  பிரிகிறோம்.

சேரும்போது அழைத்தோம். பிரியும்போதும் அழைப்பதுதானே நாகரிகம். அழைத்தோம் வருகை புரிந்தீர்கள். அனைவருக்கும் மனப்பூர்வ நன்றி.”

பேசி முடித்தான் அசோக்.

சுனிதா எழுந்தாள்.

“அசோக் மிகவும் நல்லவர். வாழ்க்கைப் பாதையில் இவருடன் இணைந்து செல்ல இயலாமைக்கு வருந்துகிறேன். இவர் உயரிய பண்பாளர். ஆடவர்களுக்கு முன்னுதாரணம்.

அனைவருக்கும் நன்றி.”

இருவர் கண்களிலும் நீர்த்துளிகள் அரும்பியிருந்தன. வலிந்து செய்த புன்னகையுடன் கையசைத்தார்கள்.

மண்டப முகப்பிற்கு வந்து நின்று, கரம் கூப்பி அனைவரையும் வழியனுப்பி வைத்தார்கள்!
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000