சனி, 3 நவம்பர், 2018

எல்லாம் வல்ல 'அல்லா' கருணை காட்டுவாரா?

மதங்கள் பல. கடவுள் நம்பிக்கை கொண்ட மதம் சார்ந்த மக்கள், வேறு வேறு கடவுள்களை வணங்குகிறார்கள். இஸ்லாமியருக்கு 'அல்லா' கடவுளாவார். 

பாகிஸ்தானில் லாகூர் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஆசியா பீபிக்கும் [கிறித்தவர்]அண்டை வீட்டுப் பெண்களுக்கும்[இஸ்லாம் மதத்தவர்] ஏற்பட்ட தகராறின்போது இறைத் தூதர் முகம்மது நபியை ஆசியா பீபி இழித்துப் பேசியதாக வழக்குத் தொடுக்கப்பட்டு, விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. உயர் நீதிமன்றம் அதை உறுதி செய்தது. ஆசியா பீபி தரப்பில் மேல்முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அடங்கிய குழு தண்டனையை ரத்து செய்தது. இது ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்த செய்தி.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரிப் பாகிஸ்தானின் பெரு நகரங்களில் போராட்டங்கள் வெடித்திருப்பதாக, ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. பயங்கரவாதிகளால் ஆசியா பீபியின் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
#அல்லா, எல்லாம் வல்ல கடவுள்; கருணை வடிவானவர்.

பிரபஞ்சப் பொருள்கள் மட்டுமல்ல, அனைத்து உயிர்கள் மட்டுமல்ல, ஆறறிவு மனிதர்களும் அவரால்  படைக்கப்பட்டவர்களே. தாம் படைத்த தம் பிள்ளைகளைக் காப்பவரும் அவரே# -பிற மதங்கள் போலவே, இறைவன் குறித்த இஸ்லாத்தின் நம்பிக்கையும் இதுவே என்பது நம் நம்பிக்கை.

இறைவன் கருணை வடிவானவன் என்பதால், மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ அவனைப் பழித்துப் பேசினாலும், அவ்வுரைகளால் எவ்வகையிலும் அவனுக்குப் பங்கம் நேராது என்பது அறியத்தக்க உண்மை. இவ்வுண்மையை மறந்துவிட்டதன் விளைவோ என்னவோ, 'ஆசியா பீபி' தூக்கிலிடப்பட வேண்டும் என்று பாகிஸ்தானின் அதீத மதப்பற்றுள்ளவர்கள் போராடுகிறார்கள்.

காரணம் எதுவாக இருப்பினும், சிறுபான்மை இனத்தவரான ஆசியா பீபிக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் மக்களில் மிகச் சிலர்கூடக் குரல் கொடுப்பதாக அறியப்படவில்லை. இந்நிலையில்.....

'அல்லா' மட்டுமே அவரைக் காப்பாற்ற இயலும் என்று தோன்றுகிறது.

அவர் காப்பாற்றுவாரா?
=======================================================================
Indiblogger இன் முகப்புப் பக்கத்தில் இப்பதிவு இடம்பெற்றுள்ளது.