செவ்வாய், 6 நவம்பர், 2018

100% பெண்ணையும் புகழையும் வெறுத்த அதிசய அறிஞர்!!

பருவ வயதிலிருந்தே பெண்ணையும் பொன்னையும் பொருளையும் வெறுத்தவர் இவர். ஆனாலும், ஒரு துறவியாக ஆவதை விரும்பாமல் விஞ்ஞானி ஆக விரும்பினார் இவர்.

அறிவியல் அறிஞர்கள் குறித்தும், அவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்தும் இவர் கற்றவை ஏராளம். ஆராய்ச்சியாளராக மாறி மிகக் கடினமாக உழைத்தார். கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.

வாயுக்கள் அமிலத்திலிருந்து வெளிவருவதில்லை; உலோகங்களிலிருந்து அவை வெளியாகின்றன என்று கண்டறிந்தவர் இவர்தான். காற்று, உயிர்வாயு, ஹைட்ரிஜன் ஆகியவை குறித்தும் ஆராய்ந்தார்.

இரண்டு பங்கு ஹைட்ரிஜனும் ஒரு பங்கு ஆக்சிஜனும் இணையும்போது நீர் உண்டாகிறது என்பன போன்ற பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திப் பெரும் புகழ் ஈட்டியவர் இவர். இவர்தான் ஹென்றி காவெண்டிஷ். 
இவரைப் பற்றி நிறையவே அறிந்திருப்பீர்கள். 

இந்தப் பதிவின் நோக்கம் இவரைப் பற்றி விவரிப்பதல்ல; இந்த அறிவியல் அறிஞர் உலகம் கண்டறியாத விசித்திர குணம் படைத்தவர் என்பதைப் பதிவு செய்வதுதான்.


70 வயதுவரை வாழ்ந்த இவருக்கு இளம் வயதிலிருந்தே பெண்களை[எத்தனை சிறந்த அழகியாயினும்] அறவே பிடிக்காதாம்.

பெண்கள் குழுமியிருக்கும் இடங்களில் இவரைப் பார்க்கவே முடியாது. இவரை அடைவதற்கு அரும்பாடுபட்டுத் தோற்ற பேரழகிகள் கணக்கிலடங்கார். தமக்கு வரும் மடல்களில் உள்ள எழுத்து ஒரு பெண்ணினுடையது என்பது தெரிந்தாலே அதைக் குப்பைத்தொட்டியில் வீசிவிடுவாராம்.

பணியாட்கள் மட்டுமே இவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்கள். தப்பித் தவறியும்கூட, பணிப்பெண்கள் இவரின் எதிரே வருதல் கூடாது. அப்படி வந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

தேடிவந்த புகழையும் வெறுத்த வேடிக்கை மனிதர் இவர்.

ஒரு சமயம் ஒரு நண்பரின் வீட்டு விருந்துக்குச் சென்றிருந்தார் ஹென்றி காவெண்டிஷ்.

விருந்துக்கு வந்திருந்த அயல்நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலம், இவர் சிறந்த விஞ்ஞானி என்பதை அறிந்து, இவருடன் உரையாட விரும்பினார். விருந்தளித்த நண்பர் தடுத்தும்கூட ஆர்வ மிகுதியால் இவரை எதிர்கொண்டு புகழ ஆரம்பித்தபோது.....

எதையோ நினைவுபடுத்திக் கொண்டவர் போல் நடித்து, அவசர வேலை இருப்பதாகச் சொல்லி, புகழ்மொழியைத் தவிர்த்து, விருந்தையும் புறக்கணித்து அங்கிருந்து அகன்றார் இந்தப் புதிர் மனிதர்.

அழகிய பெண்ணுக்கு மயங்காதவரோ புகழுக்குக் கிறங்காதவரோ எவருமில்லை என்னும் நிலையில், நாடிவந்த கவர்ச்சிப் பெண்களையும் தேடிவந்த புகழையும் அறவே வெறுத்து, முழுக்க முழுக்க அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இவரைப் போன்ற ஓர் அதிசய மனிதரை இவ்வுலகம் கண்டதே இல்லை; இனி, காணப்போவதும் இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------
உதவிய நூல்:
மணிமேகலைப் பிரசுரத்தின் 'விஞ்ஞானிகளின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்'; முதல் பதிப்பு: 1990.
------------------------------------------------------------------------------------------------------------------