Wednesday, November 7, 2018

பேடிகள் கோடியில்!!!

இது நடந்து ஆறு மாதம்போல இருக்கலாம்.

அந்தி மயங்கும் நேரத்தில், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகிய பருவப் பெண்ணொருத்தி ரவுடிகளால் கடத்தப்பட்டாள். அப்போது அங்கு நிறையவே இளவட்டங்கள் இருந்தார்கள். கடை வாசல்களில் அதிவேக ‘பைக்’குகள் வரிசை கட்டியிருந்தன. அவள் கடத்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரே ஒரு ‘வாடகைக் கார் நிறுத்துமிடம்’கூட இருந்தது. எல்லாம் இருந்தும்..........

‘விருட்’டென ஒரு வாகனத்தில் அல்லது, வாகனங்களில் சீறிப் பாய்ந்து ரவுடிகளை விரட்டிப் பிடித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதற்குக் கதாநாயகனோ நாயகர்களோ இல்லை என்பது எத்தனை பெரிய அவலம்?

அவள் கடத்தப்பட்ட சில வினாடிகளில் ஒரு மாயாஜாலம் போல நூறுபேர் கூடிவிட்டார்கள். வேறெதற்கு? வேடிக்கை பார்க்கவும் கதை பேசவும்தான்!

“இந்நேரம் ரவுண்டானாவைக்கூடக் கடந்திருக்க மாட்டானுக. பத்து பேர் சேர்ந்து ரெண்டு டாக்ஸி பிடிச்சிச் சேஸ் பண்ணினா அவனுகளை அமுக்கிறலாம்.” யாரோ ஒருவர் யோசனை சொன்னார். சொன்னவர் யாரென்று ஆளாளுக்குக் குரல் வந்த திக்கில் தேடினார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“கார் போற வேகத்தைப் பார்த்தா ரவுண்டானாவைக் கடந்து ரொம்ப தூரம் போயிருப்பாங்க. நாமக்கல், சங்ககிரி, ஓமலூர்னு நாலஞ்சி கிளையா ரோடு பிரியுது. எதுல போனானுகன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?” எதார்த்தமாகச் சொன்னார் ஓர் உள்ளூர் ஆசாமி.

“அப்படியே கண்டுபிடிச்சாலும் நாம வெறுங் கையோட போயி அவனுகளை மடக்குறது அவ்வளவு சுலபமில்லீங்க. அவங்க கையில்  ஆயுதம் இருக்கும். போட்டுத் தள்ளிட்டானுகன்னா நம்ம புள்ள குட்டிகளை யார் காப்பாத்துறதாம்?” சொன்னவர் கடமை உணர்வுள்ள ஒரு குடும்பஸ்தர்.

”பிக்பாக்கெட், வழிப்பறி மாதிரி பொண்ணுகளைக் கடத்துறதும் சர்வ சாதாரணம் ஆயிடிச்சி.”

“கடத்திட்டுப் போயிக் கற்பழிக்கிறது மட்டுமில்ல, துண்டு துண்டா வெட்டிப் போட்டுடறானுக.”

“கிழவிகளைக்கூடத் தூக்கிட்டுப் போயிக் கற்பழிக்கிறாங்க.” சொல்லி முடித்த ஒரு வழுக்கைத் தலையர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் சிரிக்காததால் சீரியஸான முகபாவம் காட்டினார்.

இம்மாதிரியான வீண் பேச்சுகள் தொடர்ந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஒரு ஜோல்னா பையர். “ஆளாளுக்கு வெட்டிக் கதை பேசிட்டிருந்தா எப்படி? செல்ஃபோன் வச்சிருக்கிறவங்க போலீஸுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா” என்றார் உரத்த குரலில். அவரிடம் செல்ஃபோன் இல்லையாம்!

“ஃபோன் பண்றது பெரிய காரியம் இல்ல. ‘நீ யாரு? எங்கிருந்து பேசற? பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்வி மேல கேள்வி கேப்பான் போலீஸ்காரன். கேஸ்ல நம்மை முக்கிய சாட்சியா போட்டுடுவான். சொந்த வேலையை விட்டுட்டுக் கோர்ட்டுக்கு நடையா நடக்கணும். ரவுடிங்களும் நம்மைப் பழி வாங்காம விடமாட்டாங்க. நமக்கு எதுக்கய்யா இந்த வம்பு தும்பெல்லாம்” என்று பேசிவிட்டு இடத்தைக் காலி செய்துகொண்டிருந்தார் ஒரு புத்திசாலி.

அவருடைய எதார்த்தமான பேச்சு எல்லோரையும் பாதித்திருக்க வேண்டும்.

கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது.

நான் நெஞ்சுக்குள் குமுறினேன்.

‘சே, என்ன மனிதர்கள்!’

ஓர் இளம் பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகிறாள். நூறு ஆண்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

ஆண்களா இவர்கள்?

ஆண்மை உள்ளவர்களே ஆண்கள். பெண்ணை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல, உரிய தருணங்களில் அவளின் ‘மானம்’ காப்பதுதான் உண்மையான ஆண்மை.

இந்த மண்ணில் ஆண்மையுள்ள ஆண்களின் எண்ணிக்கை அருகிவிட்டதா?

லட்சத்திற்கு பத்துபேர் தேறுவார்களா?

கோபிக்காதீர்கள்..........அந்தப் பத்தில் நீங்களும் ஒருவரா?

யோசிக்கிறீர்கள்?

ஏதோ கேட்க நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே.

“இந்த அசம்பாவிதம் எப்போது நடந்தது?” என்கிறீர்களா?

ஆறு மாசம் முந்தி.

“எங்கே?”

சேலத்தில்.

“உனக்கு எப்படித் தெரியும்? செய்தித்தாள்ல படிச்சியா?””

இல்லீங்க. நானே நேரில் பார்த்தேன்.

“அட!...வேடிக்கை பார்த்த நூறு பேரில் நீயும் ஒருத்தன்! இல்லையா?”

அது வந்து.......

“என்னய்யா வந்து போயி, பத்தோட பதினொன்னா நீயும் வேடிக்கைதான் பார்த்திருக்கே. அந்தப் பொண்ணைக் காப்பாத்த நினைக்கலே. அப்போ, நீயும் ஒரு பேடிதான். அதாவது, ஆண்மையில்லாதவன். சரிதானே?”

அது வந்து.....அது வந்து.....வந்து.....

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
02.03.2015 ஆம் நாளில் சிறியேன் கிறுக்கியது!!!