'படிப்பினை'க் கதை! வாசிக்கத் தவறாதீர்!!
துருவங்கள்[கதை]
ஓராண்டுக்கும் மேலாகக் காதலித்து மணந்துகொண்டவர்கள் அனிதாவும் அன்பரசுவும். ஒரு குழந்தை பிறந்த ஆறேழு ஆண்டுகளிலேயே இருவரும் மணவிலக்குக் கோரி நீதிமன்றம் சென்றது சொந்தபந்தங்களுக்கும் அண்டை அயல் வீட்டாருக்கும் புரியாத புதிராக இருந்தது.
அது புதிரல்ல; இருவரும் கட்டிக்காத்த ரகசியம் என்பது வழக்கு விசாரணை தொடங்கியபோது அம்பலமானது.
அனிதா பக்திப் பரம்பரையில் வந்தவள்; வளர்ந்தவள். அன்பரசு பக்கா நாத்திகன்.
காதலுக்குத்தான் கண் தெரியாதே. காதலித்துக் கல்யாணம் ஆகும்வரை இருவருக்குமே இது விசயத்தில் தாங்கள் இருவேறு துருவங்கள் என்பது தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.
ஆனால், திருமணம் முடிந்து இருவரும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட நேர்ந்தபோதெல்லாம், அவன் சாமியை வழிபடாமல் கைகட்டி நின்ற கோலம் அவள் மனதில் சந்தேகத்தைத் தோற்றுவித்தது; பின்னர் விசாரிக்கலாம் என்று அமைதி காத்தாள்.
காதல் மனைவியுடன் சுற்றுலாச் செல்வதில் காட்டிய ஆர்வத்தை, அவளுடன் கோயில் குளங்களுக்குச் செல்வதில் அன்பரசு காட்டவில்லை. அவளுக்கு ஒரு துணையாக உடன் சென்றானே தவிர பக்தி உணர்வை வெளிப்படுத்தியதில்லை.
"மனசுக்குள்ள மட்டுமே சாமி கும்பிடுவீங்களா?" என்று அனிதா தன் சந்தேகத்தை ஒரு இணக்கமான சூழ்நிலையில் வெளிப்படுத்தியபோது, தான் நாத்திகன் என்பதை அன்பரசு ஒப்புக்கொண்டான். "இதைப் பத்தி நாம் விவாதிக்க வேண்டாமே" என்று அவன் கேட்டுக்கொண்டபோது அவள் மௌனம் சுமந்திருந்தாள். அவளின் மௌனம் சம்மதத்தின் அடையாளமா என்பதை அவனால் அறிய இயலவில்லை.
நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. பக்தி விசயத்தில் இருவருக்கும் சமரசம் ஏற்படவில்லை. இருந்தும், கலைச்செல்வி பிறந்து சில ஆண்டுகள்வரை குடும்பத்தில் அமைதியே நிலவியது. தன் மகள் தன் கணவனைப் போலவே நாத்திகவாதியாக ஆகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அடிக்கடி அவளைக் கோயில்களுக்கு அழைத்துப் போனாள் அனிதா. அவள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் ஒரு பேழை நிறையப் பக்தி நூல்களை வாங்கிவந்து அடுக்கினாள். ஒரு நல்ல நாள் பார்த்துப் பஜனை வகுப்புக்கு அனுப்பினாள்.
இது அன்பரசுவை உசுப்பிவிட்டது. "இவளை நீ கோயில்களுக்குக் கூட்டிட்டுப் போறே. படிக்கிறதுக்குப் பக்திப் புத்தகங்கள் கொடுக்கிறே. அதையெல்லாம் நான் தடுத்ததில்ல. பஜனைக்கு அனுப்புறது அதிகபட்ச முட்டாள்தனம். நான் அனுமதிக்க மாட்டேன். என் கிட்ட கடவுள் மறுப்புத் தொடர்பான புத்தகங்கள் இருக்கு. அதுகளையும் இனி இவள் படிக்கணும். எதையும் கட்டாயப்படுத்தித் திணிக்க வேண்டாம். அவள் போக்கில் வளரட்டும். சுயமா சிந்திக்க ஆரம்பிச்சா, எது தப்பு, எது சரின்னு அவளுக்குத் தெரிஞ்சுடும்" என்றான் அன்பரசு.
"பக்திதான் மனசைப் பண்படுத்தும். நாத்திகம் மனுசனை மிருகமாக்கும்" என்றாள் அனிதா.
“மூடநம்பிக்கையின் ஆணிவேரே பக்திதான்" என்று பதிலடி தந்தான் அன்பரசு. வாக்குவாதம் தொடர்ந்தது. இருவருமே அவரவர் பின்பற்றும் கொள்கையில் பிடிவாதம் காட்டினார்கள். ஒரு கட்டத்தில், அவன் வைத்திருந்த நூல்களை அவள் தீயிட்டுக் கொளுத்தினாள். பதிலுக்கு அவனும், அவள் சேமித்து வைத்திருந்த பக்தி நூல்களை அள்ளி எடுத்துப்போய் ஆற்று வெள்ளத்தில் வீசிவிட்டு வந்தான்.
நிலைமையின் விபரீதம் புரிந்ததால் மணவிலக்குக் கோரி இருவருமே நீதிமன்றத்தை அணுகினார்கள்.
ஒருமித்த மனநிலையில் மணவிலக்குக் கோரியதால், உரிய காலக்கெடுவுக்குப் பிறகு பிரிந்து வாழ அனுமதி அளித்தார் நீதிபதி; தன் விருப்பம்போல் தாய்தந்தையர் இருவருடனும் கலைச்செல்வி இருந்துகொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்; தன்னுடைய அறைக்குச் சென்றார்.
சற்று நேரம் கழித்து, "உங்க ரெண்டு பேர்கிட்டேயும் தனிப்பட்ட முறையில் பேச நினைக்கிறார் நீதிபதி. விருப்பம் இருந்தா நீங்க அவரை அவர் வீட்டில் நாளைக் காலையில் சந்திக்கலாம்" என்று சொல்லி, அன்பரசுவிடமும் அனிதாவிடமும் நீதிபதியின் இல்ல முகவரியைக் கொடுத்துவிட்டுப் போனார் நீதிமன்ற அலுவலர் ஒருவர்.
மறு நாள் காலையில் அனிதாவும் அன்பரசுவும் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அவருடைய வீட்டில் சந்தித்தார்கள்.
தனக்கு எதிரே அமர்ந்திருந்த அவர்களைப் பார்த்து நீதிபதி பேசினார்.
"நேற்று நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்" என்றவர், இருவர் மீதும் பரிவு செறிந்த பார்வையைப் படரவிட்டவாறு சொன்னார். "உங்களுக்குச் சொன்னதுதான் என்னுடைய கடைசித் தீர்ப்பு. பக்தி விசயத்தைத் தவிர மற்ற வகையில் மனம் ஒத்து வாழ்ந்த உங்களைப் பிரிச்சதில் எனக்கு ரொம்பவே வருத்தம். உங்களில் ஒருத்தர் ஆத்திகவாதி. இன்னொருத்தர் நாத்திகவாதி. அவங்கவங்க கொள்கையில் பிடிவாதமா இருக்கீங்க. நல்லது. ஆனா....."
சற்றே தாமதித்துப் பேசலானார் நீதிபதி. "இதுவரை கடவுள் உண்டுன்னு சொன்ன யாரும் அதுக்கான ஆதாரங்களை வெளியிட்டதில்லை. எல்லாம் அனுமானம்தான். கடவுள் இல்லேன்னு சொல்லுறவங்களும் கடவுளை நம்ப முடியாதுன்னு சொல்லுறாங்களே தவிர, கடவுள் இல்லேன்னு ஆதாரத்தோடு நிரூபிச்சதில்ல. இது முற்றுப் பெறாத விவாதம். இப்போ இது நமக்கு வேண்டாம். நான் உங்களுக்குச் சொல்ல நினைக்கிறதைச் சொல்லிடுறேன்.....
பிறந்து வாழுற அத்தனை பேரும் செத்துப்போறது உறுதி. செத்ததுக்கப்புறம் என்ன ஆகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. இப்படி ஆவோம் அப்படி ஆவோம்னு நம்பிக்கை அடிப்படையில் சொல்லப்படுறதையெல்லாம் நம்பி, நிகழ்கால வாழ்க்கையை வீணடிக்கிறது பைத்தியக்காரத்தனம்.....
ஆத்திகமோ நாத்திகமோ, வாழுற கொஞ்சம் நாட்களையும் அமைதியாகவும் சந்தோசமாகவும் கழிக்க அது உதவணும். கடவுள், பக்தி, பகுத்தறிவுன்னு எல்லாமே நமக்காகத்தான். மக்கள் இணைஞ்சு வாழ இதுகளெல்லாம் உறுதுணையா இருக்கணுமே தவிர பிரிக்கிறதுக்காக அல்ல.
சட்டப்படி, பிரிஞ்சி வாழ உங்களை அனுமதிச்சேனே தவிர உங்களைப் பிரிக்கிறது என் விருப்பம் அல்ல. உங்களைச் சேர்த்து வைக்கத்தான் இங்கே வரவழைச்சேன். நல்ல முடிவோடு மறுபடியும் இங்கே வருவீங்கன்னு நம்புறேன்" என்று சொல்லி வழியனுப்புவது போல் எழுந்து நின்றார் நீதிபதி.
"நாங்க சேர்ந்து வாழ்வோம். நம்புங்க" என்று சொல்லி, அன்பரசுவும் அனிதாவும் இணைந்து நீதிபதியை வணங்கினார்கள்; எழுந்து நின்று மனம் நெகிழ்ந்து தழுதழுத்த குரலில் நன்றி சொன்னார்கள்.
============================================================================================