வெள்ளி, 11 ஜூன், 2021

'புணர்தலும் உணர்தலும் பிரிதலும்'... துன்பியல் கதை!

ரவுநேரப் பணிக்குச் சென்றிருந்த செங்கோடன், திடீர்க் காய்ச்சல் காரணமாக வீடு திரும்புவதற்கு மேலதிகாரியிடம் அனுமதி பெற்றான்; இருசக்கர வாகனத்தை, தான் வேலை பார்க்கும் சர்க்கரை ஆலையிலேயே விட்டுவிட்டுப் பேருந்தில் பயணித்து, தன் ஊரை ஒட்டியிருந்த மேம்பால நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி நடந்தான்.

செல்வம் தேனீர்க் கடையை நெருங்கும்போது, உடல் சோர்வு அதிகமானதால் கடையிலிருந்த மரப்பெஞ்சில் அமர்ந்து எதிர்த் திசையில் பார்வையை ஓடவிட்டான். நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது போல ஒட்டுமொத்த அவனின் உடம்பும் அதிர்ந்து குலுங்கியது; நடுங்கியது.

நேரம் இரவு பத்துமணியைத் தொட்டுவிட்ட அந்த நேரத்தில், எதிர்த் திசையிலிருந்த தன் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு, அவனுடன் வேலை பார்க்கும் சாரதி வெளியேறுவதையும், வாசல்படியில் நின்றவாறு அவன் மனைவி லட்சுமி அவனுக்குப் 'பை' சொல்வதுபோல் கையசைப்பதையும் வீட்டுக்கு எதிரே இருந்த, பிரகாசமான தெருவிளக்கு காட்டிக்கொடுத்தது. இதயம் தாறுமாறாய்த் துடிக்க எழுந்து நடந்தான் செங்கோடன். 

அவன் வருவதை அறிந்த சாரதி ஓட்டமும் நடையுமாக  ஓடி மறைந்தான்.

கள்ளப் புணர்ச்சியில் ஈடுபட்டுக் கட்டிய புருசனிடம் கையும்களவுமாக அகப்பட்டுக்கொண்ட லட்சுமி, மிரண்டுபோய் வெடவெடத்து நின்றாள்; வெளிறிய முகத்துடன், அத்தனை அவயவங்களும் செயலிழந்த நிலையில், "அது வந்துங்க....." என்று செங்கோடனிடம் ஏதோ சொல்ல முயன்று தோற்றாள்.

அவள் எதிரில் நிற்பதையே உணராதவன் போல் பார்வையை அலைபாயவிட்ட செங்கோடன், மகள் கவிமலர்  முன்னறையில் சிறிய பாயில் உறங்கிக்கொண்டிருப்பதையும், படுக்கை அறையில் படுக்கை விரிப்பும், தலையணைகளும், கசங்கிய மல்லிகைப் பூக்களும் தாறுமாறாய்ச் சிதறிக் கிடப்பதையும் கண்டான்.

தரையில் மண்டியிட்டு அமர்ந்து கவிமலரின் மிருதுவான கன்னங்களில் முத்தங்கள் பதித்தான்; எழுந்தான்; வீட்டிலிருந்து வெளியேறி, சாலையின் எதிர்ப்பக்கம் இருந்த அந்தத் தேனீர்க் கடையை நோக்கி நடந்தான்.

"உங்க நண்பர் சாரதியின் பார்வையே சரியில்லை" என்று செங்கோடனிடம் லட்சுமி  சொன்னபோது, "அவன் ரொம்ப நல்லவன்" என்று சொன்னதோடு, தான் குறிப்பால் உணர்த்த முயன்றதை அவன் புரிந்துகொள்ளத் தவறியதும், "குடியிருக்கச் சொந்த வீடு இருக்கு. கிராமத்தில் பூர்வீக நிலம் கொஞ்சம் இருக்கு. என் அப்பா சீதனமாக் கொடுத்த வீட்டுமனை ஒன்னு இருக்கு. இன்னும் சம்பாதிக்கணும்னு ராத்திரி பகல் பார்க்காம ஓவர்டைம் செஞ்சி உடம்பைக் கெடுத்துக்காதீங்க" என்று அவள் சொன்னதை அவன் அலட்சியப்படுத்தியதும் அவளின் நினைவுக்கு வந்தன. 

"இப்போ எல்லாம் நீங்க என்னைக் கவனிக்கிறது இல்ல" என்று அவள் சொல்ல நினைத்ததும் உண்டு. பெண்ணுக்கே உரிய தயக்கக் குணம் காரணமாகச் சொல்லாமல் தவிர்த்ததையும் நினைத்துப் பார்த்து மனம் மறுகினாள் லட்சுமி; அடங்கிக் கிடந்த  'அந்த' ஆசையைத் தூண்டிவிட்ட, செங்கோடனின் நண்பன் சாரதியின் அர்த்தம் பொதிந்த காமவெறிப் பார்வைக்கும் பேச்சுக்கும் தான் பலியாகிப்போனதை எண்ணிக் கண்ணீர் உகுத்தாள்.

கல்யாணம் ஆன ஆறு வருசத்தில், எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னைக் கடிந்துகொள்ளாத, கெட்ட வார்த்தை சொல்லித் திட்டாத ஒரு நல்ல புருசனுக்குச் செய்த துரோகத்திற்குத் தற்கொலையே சரியான தண்டனை என்று முடிவெடுத்தாள்.

உறங்கிக்கொண்டிருந்த மகளின் நினைவு வரவே, சோர்ந்து தரையில் சரிந்தாள்; தான் இல்லாவிட்டாலும் தந்தையும் தாயுமாக இருந்து மகளைக் கண்ணுங்கருத்துமாக வளர்ப்பான் செங்கோடன் என்று மனம் தேறி, மகளின் கன்னங்களில் பல முத்தங்கள் பதித்து மீண்டெழுந்து, படுக்கை அறையின் மின்விசிறியில் முந்தானையை முறுக்கிச் சுருக்கு வைத்துத் தொங்கினாள்.

அவளின் உயிர் பிரிந்த அதே நேரத்தில், தேனீர்க் கடைக்குப் போன செங்கோடன், வஞ்சக நெஞ்சத்துடன் பழகிய நண்பன் சாரதியை நல்லவன் என்று நம்பியதும், பணம் பணம் என்று அலைந்ததில், கட்டிய பெண்டாட்டியைக் கவனிக்கத் தவறியதும் தான் செய்த குற்றங்கள் என்பதை உணர்ந்தான். 'இந்தக் குற்றங்கள்தான் நல்ல குணவதியான லட்சுமியைக் குற்றவாளி ஆக்கின. தண்டனைக்குரியவன் தான்தான். ஒரு தாயாக மட்டுமல்லாமல் தந்தையாகவும் இருந்து கவிமலரைக் கண்ணுங்கருத்துமாய் வளர்க்க அவள் வாழணும்' என்று முடிவெடுத்த செங்கோடன், சற்றுத் தொலைவிலிருந்த முனியப்பன் கோயிலுக்குச் சென்றான். சென்று..... 

அங்கிருந்த வேப்பமரக் கிளையில், கட்டிய வேட்டியையே முறுக்கிச் சுருக்குக் கயிறாக்கித் தன் உயிரை மாய்த்துக்கொண்டான். 

கவிமலர்?

தான் அனாதை ஆகிவிட்டதை அறியாமல் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

===========================================================================

ஆசிரியர் பெயர் இடம்பெறாத கதை எனின், அது அடியேனின் ஆக்கம் என்பதை அறிந்திடுவீர்! ஹி... ஹி... ஹி!!!