'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Friday, June 17, 2016

அன்று சூரிய உதயம் 05.58க்குக் கடவுள் வந்தார்! பார்த்தீர்களா?

#என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா?” என்பது.
இதற்கு, ‘பைனரி’யாகப் பதில் சொல்ல இயலாத நிலையில், இந்தக் கேள்விக்கு அறிவியல் என்ன சொல்கிறது என்பதை உங்களுடன் சிந்தித்துப் பார்க்க விரும்புகிறேன்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் நான் ‘தேவன் வருகை’ என்னும் தலைப்பில் ஒரு விஞ்ஞானக் கதை எழுதினேன். அதில் கடவுள் ‘ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொது இடத்தில் சூரிய உதயத்தின்போது காட்சி தருகிறேன். அதற்குத் தருணம் வந்துவிட்டது’ என்று உலகெங்கும் அறிவித்துவிடுவார். 

இதை அரசாங்கம் ஏதோ புரளி என்று மறுக்கும். இருந்தும் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவரும் தங்கள் தங்கள் கடவுள்தான் வரப்போகிறார் என்று எதிர்பார்த்து, குறிப்பிட்ட தினத்தன்று அதிகாலை மைதானங்களுக்குப் போய், பரபரப்புடன் ஒரு விதமான மாஸ் ஹிஸ்டீரியாவுடன் காத்திருப்பார்கள். அந்தக் கதையின் கடைசிப் பாரா இதுதான்.....

சூரிய உதயம் ஐந்து ஐம்பத்தெட்டுக்குக் கடவுளின் காட்சி.

மணி ஐந்து ஐம்பத்தேழு. ஆரவாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி எங்கும் மௌனம் நிலவியது. மிக மிக மௌனம்.

தூரத்தில் மெதுவாக, சோலையை அலைக்கும் காற்று கேட்டது. உறங்கி எழுந்த பட்சிகளின் உற்சாகக் குரல்கள் கேட்டன. எல்லோரும் எதிரே தனியாக உருவாக்கப்பட்டிருந்த அந்தக் காலியிடத்தை எதிர்நோக்கியிருந்தார்கள்.

ஐந்து ஐம்பத்தெட்டு.....

ஆறு மணிக்கு அவர்கள் வீடு திரும்பினார்கள்.

என முடித்திருந்தேன்.

பலர் என்னிடம், “என்ன விளையாடுகிறாயா?” என்று கோபப்பட்டு எழுதியிருந்தார்கள். அந்தக் கதையில் நான் சொல்ல விரும்பியது, ‘கடவுள் அப்படி வந்திருந்தால், அவரை என் போன்ற அற்ப ஜந்துவால் வர்ணிக்க முடியாது. முடிந்திருந்தால் அவர் கடவுளே அல்ல’ என்பதே#
======================================================================
நன்றி: சுஜாதாவின், ‘கடவுள்’; இரண்டாம் பதிப்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை.
No comments :

Post a Comment