திங்கள், 13 ஜூன், 2016

நாத்திகர்கள் நல்லவர்களா?

‘நாத்திகன் என்றாலே கடவுளை நிந்திப்பவன்; பாவச் செயல் புரிய அஞ்சாதவன்; சமுதாயக் கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்பவன்’ என்பதான நம்பிக்கைகளை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதித்து வைத்திருக்கிறார்கள் ஆன்மிகவாதிகள். இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றச் செயல் என்பதை இப்பதிவு உணரவைக்கும்.

ங்கர்சால் ஒரு நாஸ்திகன் என்று சிலர் சொல்கிறார்கள். இருக்கலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், அவன் ஓர் அறிஞன்; சுயமாகச் சிந்திக்கிற சக்தியுடையவன்; அப்படித் தான் சிந்தித்தவற்றைத் தைரியமாக வெளியிலே சொல்லும் ஆற்றலுடையவன் என்பதில் யாருக்கும் எவ்வித அபிப்ராயபேதமும் இருக்க முடியாது.

இங்கர்சால், 21 வயதிற்குள் வக்கீல் பரீட்சையில் தேறி ஒரு நியாயவாதியாகத் தன்னைப் பதிவு செய்துகொண்டான். இவனுடைய நாவன்மை இவனை வக்கீல் தொழிலில் முன்னணிக்குக் கொண்டுவந்தது. அமெரிக்காவிலேயே இவன் ஒரு சிறந்த நியாயவாதி[நேர்மையாகத் தொழில் புரிபவன்] என்று எல்லோரும் பாராட்டினார்கள்.

1868-ம் வருஷம் இவன், இல்லினாய் மாகாணத்துக் கவர்னர் பதவிக்கு அபேட்சகனாய் நின்றான். ஆனால், நாஸ்திகன் என்ற காரணத்தால் தோல்வியடைந்தான்.

இங்கர்சாலின் பிரசங்கங்களைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு செல்வது அமெரிக்காவில் சர்வசாதாரணச் சம்பவம். இவன் பேச்சை மக்கள் பணம் கொடுத்துக் கேட்டார்கள். வருசந்தோறும் இவனுக்குப் பிரசங்கம் மூலமாக மட்டும் வந்துகொண்டிருந்த வருமானம், அமெரிக்க ஜனாதிபதியின் வருட வருமானத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமானது.

அமெரிக்காவில், மிகச் சிறந்த பிரசங்கிகளான இருபத்தைந்து பேர் ஒரே சமயத்தில் எவ்வ்ளவு சம்பாதிப்பார்களோ அவ்வளவு வருமானம் இவனுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது.

இங்கர்சால் பணத்தால் பெருமை கொள்ளவில்லை. சம்பாதித்த பணத்தையெல்லாம் மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்துவிட்டான். காரணம், மக்கள் துன்பப்படுவதை வேடிக்கை  பார்த்துக்கொண்டிருக்க இவனால் முடியவில்லை...

மேற்கண்டது, ‘மானிட ஜாதியின் சுதந்திரம்’ என்னும் நூலில்{இரண்டாம் பதிப்பு: 1999[முதல் பதிப்பு: 1942]; கலைஞன் பதிப்பகம், சென்னை} அறிஞர் வெ.சாமிநாத சர்மா எழுதிய முன்னுரையில் இடம்பெற்ற வாசகங்கள். 

நூல், இங்கர்சாலின் சொற்பொழிவுத் தொகுப்பான ‘The Liberty of Woman and child' என்பதன் மொழியாக்கம் ஆகும். ஆக்கம் வெ.சாமிநாத சர்மா.

காய்தல், உவத்தல் இன்றி எழுதுவதே ஒரு வரலாற்றாசிரியரின் எழுத்தறமாக அமைய வேண்டும்' என அறைகூவல் விடுத்தவர் இவர். “நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை'' என அறிவித்து, தமது இறுதி மூச்சு உள்ளவரை எழுதிக் குவித்தார்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வெங்களத்தூர் என்னும் சிற்றூரில், 1895-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17-ஆம் தேதி, முத்துசுவாமி ஐயர்-பார்வதி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்புவரை கல்வி பயின்றார். "உண்மையில் பள்ளிக் கூடத்தை விட்ட பிறகுதான் என் படிப்பு ஆரம்பமாயிற்று'' என்று தமது கல்வி வளர்ச்சியைப் பற்றிச் சொல்லிக் கொண்டவர். 
"தாய் மொழியில் பயிற்சி இல்லாதவன், தாய் நாட்டுக்குச் சேவை செய்ய முடியாது. மொழியின்றி நாடு இல்லை. நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்கள், முதலில் மொழிச் சுதந்திரத்திற்காகவே பாடுபட்டார்கள்'' என்று தம்  தாய்மொழிப் பற்று குறித்துப் பதிவு செய்துள்ளார்.
கடித இலக்கியம், குறுநாவல், சிறுகதைகள், வாழ்வியல், இதழியல், மொழிபெயர்ப்பு எனப் பல்துறை வழியே தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் சாமிநாத சர்மா, 1978-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இந்த அறிஞர் பற்றிக் கவியரசு கண்ணதாசன்:

உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி, தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இவரைப்போல் எவரும் முயன்றதில்லை.

எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் இருக்கிறது. அதுதான் வெ. சாமிநாத சர்மா.

கதைப் புத்தகங்கள்கூட இரண்டாயிரத்துக்கு மேல் விற்காத காலத்தில் அறிவியல் நூல்கள் எழுதி அவஸ்தைப்பட்டவர் அவர்.

நான் பெற்ற பொது அறிவில் இருபது சதவீதம் திரு.சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.

பஞ்சாங்கம் எழுதியிருந்தால் நல்ல ராயல்டி வந்திருக்கும். அவரோ விஞ்ஞானம் எழுதினார்.

சீனாவில் சியாங்கே ஷேக் ஆட்சி வந்தபோது, ‘புதிய சீனா’ எழுதினார்; ‘பிரபஞ்ச தத்துவம்’ எழுதினார். பொது மேடையில் தோன்றி, ஒரு மாலைகூட வாங்கிக்கொள்ளாமல் காலமாகிவிட்டார்.
======================================================================



1 கருத்து: