செவ்வாய், 28 ஜூன், 2016

அறிஞர் அண்ணா சொன்னது ‘குட்டி’க்கதையா, ‘குட்டு’க் கதையா?!

#ஐரோப்பிய நாட்டில், ‘பிரெட்ரிக் தி கிரேட்’ என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் தீராததொரு மனக்கவலைக்கு ஆளாகியிருந்தான். அவன் மக்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருந்தும்,  மன்னன் பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். அதற்கான காரணம் புரியாததே அவன் வருத்தத்திற்கான காரணமாக இருந்தது.

ஒரு நாள் அமைச்சர்களையும் பிரபுக்களையும் விருந்துக்கு அழைத்தான். “நான் ஏழைகளுக்கு எவ்வளவோ செய்கிறேன். அவர்களோ  தங்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்கிறார்களே ஏன்?” என்று  அவர்களைப் பார்த்துக் கேட்டான்.

அனைவரும் மௌனத்தில் மூழ்கியிருக்க மூத்த அமைச்சர் ஒருவர், “நான் பதில் சொல்கிறேன்” என்றார்.

அவர், தனக்கென விருந்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு ஐஸ் கட்டியைத் தன் அருகிலிருந்த பிரபுவிடம் கொடுத்து, அதை அடுத்தவரிடம் கொடுக்கச் சொன்னார்.

அவர் தனக்கு அடுத்திருந்த பிரபுவிடம் கொடுத்தார். இப்படியாக, ஐம்பது அறுபது கைகள் மாறிப் பயணித்த ஐஸ் கட்டி கடைசியாக மன்னனைச் சென்றடைந்தது. 

ஆனால், அப்போது அது ஐஸ் கட்டியாக இல்லை; இரு சொட்டுத் தண்ணீராக இருந்தது.

“எங்கே ஐஸ் கட்டி?” என்றான் மன்னன்.

“அது ஐஸ் கட்டியாகத்தான் புறப்பட்டது. பல கைகளைக்[தரகர்கள்] கடந்து வந்ததால் உங்களுக்கு மிஞ்சியது இரண்டு சொட்டுதான்” என்றார் மூத்த அமைச்சர்.

தான் செய்த உதவிகள் மக்களைச் சென்றடையாததன் காரணம் மன்னனுக்குப் புரிந்தது[நூல்: ‘அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100’; பதிப்பு: 1964; பாலாஜி பப்ளிகேஷன்ஸ், சென்னை]

அண்ணா சொன்ன குட்டிக் கதைகளைக் ‘குட்டுக் கதைகள்’ என்றும் சொல்லலாம்.

குட்டு யாருக்கு?

ஆட்சியாளர்களுக்குத்தான்! 
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக