புதன், 29 ஜூன், 2016

‘சவுகத் அலி’...இது ஜாதி, மத வெறியர்களுக்கான ஒரு ‘சவுக்கடி’க் கதை!

“உனக்குப் பித்தம் தலைக்கேறிடிச்சி; மண்டை மூளை கலங்கிடிச்சி.” -சொல்லி முடித்த பின்னரும் சிவராமனின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

எப்போதும் அதிர்ந்து பேசாத அவர், இப்படிக் கோபப்பட்டுப் பேசியது, சமையலறையிலிருந்த அவர் மனைவி மகாலட்சுமியையும் மகள்கள் சுதா, லதா ஆகியோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கணவனையும் அவர் எதிரே குனிந்த தலையுடனிருந்த மகன் செந்திலையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு மகாலட்சுமி கேட்டார்:  “என்ன நடந்தது?”

“உன் மகன், நம்ம பேரனுக்கு..... தப்பு....அவன் மகனுக்கு  ’சவுகத் அலி’ன்னு நாமகரணம் சூட்டப் போறானாம்.” -நெருப்பு வார்த்தைகளை வெறுப்புடன் உமிழ்ந்தார் சிவராமன்.
மகனின் முகவாயைத் தொட்டு நிமிர்த்தி, ‘நிஜமாவா செந்தில்?” என்றார் மகாலட்சுமி.

உடனடியாகப் பதில் தரவில்லை செந்தில்.

“அம்மா கேட்கிறாங்கல்ல. சொல்லுண்ணா” என்றார்கள் தங்கைகள் இருவரும்.

“அப்பா சொன்னது நிஜம்தான்.” -கிஞ்சித்தும் பதற்றமின்றிச் சொன்னான் செந்தில்.

“சாயபுங்க வைக்கிற பேரு நமக்கு எதுக்குப்பா? நமக்குன்னு பேரா இல்ல. நம்ம சாமிகள்ல எதுனாச்சும் ஒன்னோட பேரு வைக்கலாமே. ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தே?”

“அம்மா, போன வருசம்  இந்த டவுன்ல நடந்த மதக்கலவரம் யாருக்கும் மறந்திருக்காது. நகரமே பத்தி எரிஞ்சுது. போக்குவரத்து அடியோட ஸ்தம்பிச்சிது. அந்த நேரம் பார்த்து, டாக்டர்கள் சொன்ன நாளுக்கு முன்னதாகவே உங்க மருமக ரஞ்சிதாவுக்குப் பிரசவ வலி வந்தது. அது அதிகரிச்சி, அவ உயிருக்கே ஆபத்தான நிலையும் உருவாச்சு.......இது உங்களுக்கும் தெரியும்.

.....ஓடிப்போய், டாக்ஸி, ஆட்டோன்னு கண்ணில் பட்ட வாகன ஓட்டிகளிடமெல்லாம் கெஞ்சினேன்; சில பேர் காலிலும் விழுந்தேன். யாருமே உதவ முன் வரல. ஏற்கனவே, மத வெறியர்களால் தாக்கப்பட்டு நெற்றியில் காயம்பட்டிருந்த இந்தச் சவுகத் அலிதான், நம்ம ரஞ்சிதாவை மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்தார். நாம் இந்துமதத்தைச் சேர்ந்தவங்கன்னு தெரிஞ்சிருந்தும் நமக்கு அவர் உதவினார். வற்புறுத்தியதில் தன் பெயரை மட்டும் சொல்லிவிட்டு, “வேலைக்குப் போன என் மகள் இன்னும் வீடு திரும்பல. அவளைப் பத்திரமா அழைச்சிட்டுப் போகணும்” என்று அவசரமாய்ப் புறப்பட்டுப் போனார். இதையும் நான் உங்களிடம் சொல்லியிருக்கேன். மறந்துட்டீங்க போல. இந்தச் சவுக்கத் அலி ஞாபகார்த்தமா அவர் பேரை உங்க பேரனுக்கு வைக்கணும்னு சொல்றேன். இது தப்பா?” என்றான் செந்தில்.

மகாலட்சுமியோ, செந்திலின் தங்கைகளோ மவுனம் வகித்த நிலையில், சிவராமனே வாய் திறந்தார்.  “இந்துவான நீங்க, உங்க வாரிசுக்கு முஸ்லீம் பேரு வெச்சிருக்கீங்களேன்னு காலமெல்லாம் யாராவது கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க.”

”கேட்கட்டும்னுதான் இந்தப் பேரை வைக்க நினைக்கிறேன். காலமெல்லாம் ஒரு மனிதாபிமானியை நன்றியோட நினைவுகூர இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்ல.”

‘நீ ஒரு இந்து. உன்னுடைய இடத்தில் ஒரு முஸ்லீம் இளைஞன் இருந்து, அவனுக்கு ஒரு இந்து  உதவியிருந்தால், அவன் தன் வாரிசுக்கு இந்துவின் பெயரை வைப்பானா? அவர்களின் கடவுள் நம்பிக்கை இதையெல்லாம் அனுமதிக்குமா?”

”அப்பா, கடவுள், மதம் சம்பந்தமான நம்பிக்கைகளைத் திணிச்சி நம் விவாதத்தின் போக்கைத் திசை திருப்ப வேண்டாம். நமக்கு உதவியவர், முஸ்லீமாக இல்லாமல் ஒரு கிறிஸ்தவராகவோ இந்துவாகவோ இருந்திருந்தால் அவர் பெயரை வைக்கணும்னுதான் நான் சொல்வேன். மனுசங்களுக்கான முதல் தேவை மனிதாபிமானம். அப்புறம்தான் ஜாதி, மதம், கடவுள் எல்லாம். இதை  நீங்க புரிஞ்சிக்கணும்.” -சொல்லி நிறுத்தினான் செந்தில்.

மாற்றுக் கருத்து ஏதும் வெளியாகவில்லை..

தொடர்ந்தான் செந்தில்: “மனிதருள்  சிறந்த ஒரு மனிதாபிமானிக்கு மரியாதை செலுத்துவதில் நாம முன்னோடியா இருப்போம். மத்தவங்களும் இதைப் பின்பற்றினா, ஜாதி மதக் கலவரங்கள் குறைஞ்சி வாழ்க்கையில் நிம்மதி பெருகும்னு நான் மனப்பூர்வமா நம்புறேன். எல்லோரும் நல்லா யோசனை பண்ணுங்க. உங்ககிட்டேயிருந்து சாதகமான பதில் இல்லேன்னா, நம்ம பிள்ளைக்கு அறிவரசுன்னோ அன்பழகன்னோ மதச் சார்பு இல்லாத ஒரு பெயரை  வைக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை” என்றான் செந்தில்.

கூடியிருந்தவர்கள், விடுபட இயலாத மவுனத்தில் புதைந்து கிடந்தார்கள்.

============================================================================

இப்பதிவை வாசிப்போர் கவனத்திற்கு.....

மதம் சார்ந்த பெயர்களைப் பொருத்தமுற மாற்றியமைத்தும் படிக்கலாம்.

15 ஆண்டுகளுக்கு முன்பு, ’குங்குமம்’ இதழில் வெளியான ஒரு சிறுகதையைத் தழுவி எழுதப்பட்டது இக்கதை. அதைப் படைத்தவருக்கு நம் நன்றி. உரிய ஆதாரங்களுடன் என் மின்னஞ்சல் முகவரிக்கு அவர் தகவல் தந்தால், நன்றியுடன் அவர் பெயரைக் குறிப்பிடக் காத்திருக்கிறேன்.

கதை வெளியான நாள், பக்கம் முதலானவற்றைக் குறித்து வைக்காதது என் குற்றம்.

இது ஒரு மீள்பதிவும்கூட.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக