வெள்ளி, 3 ஜூன், 2016

தமிழினத்தின் தன்மானமும் தந்தை பெரியார் பட்ட அவமானங்களும்!

மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி மிக மிக ஆபத்தானது என அறிந்திருந்தும், அதன் பொருட்டுத் தம் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டார் பெரியார்; பூனைக்கும் பல்லிக்கும் ராகுகாலத்துக்கும் எமகண்டத்துக்கும் அஞ்சி நடுங்கிய அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அறுபது ஆண்டுகள் ‘சுயமரியாதை அதிர்ச்சி வைத்தியம்’ செய்தார். அதன் விளைவாக, அவர் பட்ட அவமானங்களும் துன்பங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அவற்றின் சிறு தொகுப்பே இப்பதிவு.
மயக்கு மொழியைப் பயன்படுத்தாமல், கடுமையானதும் கசப்பானதும் கொச்சையானதும் பச்சையானதுமான மொழியில் மேடைதோறும் அவர் முழங்கியபோதெல்லாம், தவளை, நீர்ப்பாம்பு, கழுதை, பன்றி போன்றவை அவரின் கூட்டங்களில் விரட்டிவிடப்படுவதுண்டு.

நாய் போல் ளையிட்டும் விசிலடித்தும் எதிரிகள் கலகம் செய்வார்கள்.

பெரியாரின் பேச்சு மக்களின் காதுகளில் விழாமலிருக்கத் தாரை தப்பட்டை அடித்து இடையூறு விளைவிப்பார்கள்.

சின்னாளப்பட்டி என்னும் ஊரில் பகுத்தறிவுப் பரப்புரை செய்தபோது பெரியாரின் மண்டையில் கல்லடி பட்டு ரத்தம் கசிந்தது. அதற்கப்புறம், கற்கள் எறியப்படும்போதெல்லாம் தலையில் முண்டாசு கட்டி முழங்குவார் பெரியார்.

அப்பாவித் தொண்டர்களைக் களத்தில் இறக்கி விட்டு ஆழம் பார்க்கும் அற்பத்தனம் அவருக்கு இல்லை. மற்றவர்க்கு முன்மாதிரியாகத் தானே போராட்டக் களத்தில் இறங்கிவிடுவார். அடி உதைகளைத் தாங்குவதற்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வார்.

தம் சொத்து முழுவதையும் பெரியார் சுயமரியாதை இயக்கத்துக்கு எழுதி வைத்துவிட்டு, மோட்டார் வேனையே வீடாக ஆக்கிக்கொண்டு, சிறையில் தவிர வேறேங்கும் ஓய்வெடுக்காமல், கிடைத்ததைச் சாப்பிட்டு நாட்டுக்காக உழைத்தார்.

உடுத்தும் ஆடை பற்றிக் கவலை சிறிதுமின்றி, தலைவர் என்னும் தருக்கு இல்லாமல் அனைத்து மக்களிடமும் வெள்ளை மனதுடன் பழகினார்.

சிறுநீரகக் கோளாறு உட்பட, எத்தனையோ உடல் தொல்லைகளுக்கு உள்ளானபோதும், மருத்துவர்களின் கட்டளைகளை அலட்சியப்படுத்தி, கூட்டங்களில் பங்கேற்றார்.

மக்களைத் திருத்திட வேண்டும் என்னும் முனைப்புடன், 94 வயதிலும் கட்டிய கைலியுடன் ஓட்டை வேனில் ஊர் ஊராக அலைந்தார்.

பிறரின் கைத்தாங்கலுடன், “அம்மா” என்று முனகிக்கொண்டே மேடை ஏறுவார். ஏறியவுடன், அத்தனை உடல் துன்பங்களையும் மறந்து, உணர்ச்சிவசப்பட்டு முழங்குவார்; மக்களின் அறிவு வளர்ச்சிக்காகப் புதிய புதிய கருத்துகளை வாரி இறைப்பார்.

ஆரியர் படைப்புகளான கடவுள்களுக்கு எந்தவொரு சக்தியும் இல்லை என்று நிரூபிக்க, பிள்ளையார் உருவப் பொம்மைகளை உடைத்தார்; உடைக்கச் செய்தார்; ராமன் படத்தை எரித்தார்; எரிக்கச் செய்தார். இம்மாதிரிப் போராட்டங்களை நடத்தியதால் பலமுறை சிறை சென்றார்.

பெரியாரின் பயன் கருதா மக்கள் பணியை அறிஞர் பலரும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்; போற்றியிருக்கிறார்கள். அவரை மறவாது போற்றி, அவர் வழி நடப்பது நம் அனைவரின் கடமையாகும்.
***********************************************************************************************************************
துணை நூல்: “டார்ப்பிடோ” ஏ.பி.சனார்த்தனம் அவர்களின், ‘பெரியாரே என் தலைவர்’, மனோ பதிப்பகம், சென்னை; முதல் பதிப்பு: அக்டோபர் 1997. 


1 கருத்து: