ஞாயிறு, 5 ஜூன், 2016

‘காக்கா’ பிடிக்கத் தெரியாத கர்னாடக முதலமைச்சரும் உதவியாளர்களும்!

‘சித்தராமையா’ன்னு ஒரு பெரிய மனிதர்[V.V.I.P]; கர்னாடக மாநிலத்தின் முதலமைச்சர்; நேற்று முன்தினத்திற்கு  முன்தினம்[02.06.2016] கோப்புகளைப் பார்த்து முடித்து வெளியே புறப்படத் தயாரகிறார். அவரும் உதவியாளர்களும் காரை நெருங்கியபோது, காரின் பக்கவாட்டுக் கண்ணாடியில் வந்தமர்ந்தது ஒரு காக்கை[காகம்] .
ஊழியர்கள் அதை விரட்ட முயற்சி செய்தபோதும் இருந்த இடத்தைவிட்டு நகராமல் பத்து நிமிடங்கள் கழித்துத்தான் பறந்து போனதாம் அந்தக் காக்கை.

ஜோதிடர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். சித்தராமையாவுக்கு நேரம் சரியில்லை என்று சொல்கிறார்கள்;  சனீஸ்வரன் கோயிலுக்கோ, ஆஞ்சநேயர் கோயிலுக்கோ  போய் வழிபடவேண்டும் என்று அறிவுரை பகர்கிறார்கள்.

நம்புங்கள், இது நேற்றைய தினமலர் நாளிதழில்[04.06.2016] நான் படித்தது.

காக்கை ஒரு புத்திசாலிப் பறவை; கள்ளத்தனமுள்ள பறவையும்கூட.  அது மனிதருடன் பழகியது போலவும் இருக்கும்; பழகாதது போலவும் இருக்கும். நமக்குள் என்ன நினைப்பு உருவாகிறது என்பதை எளிதில்  கண்டுபிடித்துவிடும்.

நகர்ப்புறத்துக் காக்கை பற்றிச் சொல்லவே வேண்டாம். மனிதர்கள் தனக்குத் தீங்கு செய்யமாட்டார்கள் என்பது அதற்குத் தெரியும். முதலமைச்சரின் காரில் அமர்ந்த காகத்திற்கும் இது தெரியும். முதல்வரின் ஆட்கள் விரட்டியபோது சற்றே தாமதித்து அது பறந்துபோனதற்கு இந்த அனுபவ அறிவே காரணம்.

முதல்வருக்குக் கெட்ட நேரம் என்பதை உணர்த்தத்தான் அது அஞ்சாமல் அங்கு வந்து அமர்ந்து ‘இருந்து’ பறந்தது என்பவர்கள், அது பறக்கும் முன்னரே[அந்தப் பத்து நிமிடத்திற்குள்] அதைப் பிடிக்க முயற்சி செய்திருக்கலாம்; பிடித்து, பறவையின ஆய்வாளர்களுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கலாம்.  முதல்வராவது அதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கலாம். இவற்றில் எந்தவொன்றும் நடைபெறவில்லை.

முதலமைச்சருக்கோ மற்றவர்களுக்கோ ‘காக்கா பிடிக்கும்’ பழக்கம் இல்லைபோலும்!

பலதரப்பட்ட மக்கள் அடங்கிய ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சர், காக்கையின் செயலுக்கான காரணத்தை அறிவு பூர்வமாக ஆராய்வதை விடுத்து ஜோதிடர்களின் உதவியை நாடியது வருந்தத்தக்கது.

காக்கை சனீஸ்வரனின் வாகனம்.  தமக்குரிய வாகனத்தில் கித்தாக அது அமர்ந்திருந்தது தீய சகுனம் என்று கருதிய முதலமைச்சர்,  தனிப்பட்ட முறையில் ஜோதிடரின் ஆலோசனையைக் கோரியிருக்கலாம். அதை விடுத்து, நடந்த நிகழ்வைப் பொதுவில் பகிர்ந்தது[‘இந்தச் சம்பவத்தைச் சில டி.வி.கேமாராமேன்கள் படம் பிடித்து ஒளிபரப்பினார்கள். இதை வைத்துச் சில டி.வி.சேனல்கள் விவாத நிகழ்ச்சிகளை நாள் முழுக்க நடத்தின’ என்பது செய்தி. விவாதம் குறித்த தகவல்களை அறிய இயலவில்லை] மிகவும் கண்டிக்கத்தக்கது.
===============================================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக