புதன், 15 ஜூலை, 2026

'கடத்தலும் கற்பழிப்புகளும்’... ஒப்பாரி வேண்டாம்! உடனடி நடவடிக்கைகள் தேவை மக்களே!!

சூதுவாது அறியாத குழந்தைகளை[மற்ற வயதுப் பெண்களையும்தான், கிழவிகளை வீடு புகுந்து சீரழிப்பது உட்பட]க் கடத்தி வன்புணர்வு செய்து, வதைத்துச் சீரழித்துக் கொன்று, சாக்கடைகளிலும், ஊரின் ஒதுக்குப்புறங்களிலும் வீசுவது அன்றாடக் கொடூர நிகழ்வுகள் ஆகிவிட்டன.

“அய்யய்யோ, என்ன கொடுமைங்க இது. இதைச் செய்த கயவாலிகளை அடித்தே கொல்லணும்; தூக்கிலிடணும். கடவுள் இவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டார்” என்றெல்லாம் நம்மவர்கள் ஒப்பாரி வைத்துப் புலம்புவது வாடிக்கை ஆகிவிட்டது.

இதன் பயன் 0%தான்.

பொது மக்களின் ஒத்துழைப்புடன் இவற்றைத் தடுத்து நிறுத்துவது அரசின் தலையாய கடமை ஆகும்.

இக்கடமையைச் செவ்வனே செய்துமுடிக்க அரசுக்கு நாம் வழங்கும் முக்கியப் பரிந்துரைகள்:

*பள்ளிகளில், முதல் பாடவேளையில், வன்புணர்வு உட்பட மிக முக்கிய நாட்டு நடப்புகள் குறித்த செய்திகளை ஆசிரியர்கள் சுருக்கமாகவேனும் பிள்ளைகளிடம் சொல்லி விழிப்புணர்வூட்டலாம்[இது அரசாணை மூலம் கட்டாயக் கடமை ஆக்கப்படுதல் அவசியம்].

*வீடுதோறும், செய்தித்தாள் வாங்குவதோடு,[ஏழைகளாயினும் இது இயலாத ஒன்றல்ல] பிள்ளைகள் வீட்டுப் பாடங்களைச் செய்வதற்கு முன்பே மேலோட்டமாகவேனும் செய்திகளை வாசிக்கப் பழக்கப்படுத்தலாம். ஊடகங்கள் வாயிலாக அரசு இதை மக்களுக்கு அறிவுறுத்துதல் தேவை.

*ஊர்தோறும் இளம் வயதுப் பிள்ளைகளுக்கான, தற்காப்புக் கலைகளைக் கற்றுத்தருவதும் மிக முக்கியக் கடமை ஆகும். தேவையான அளவுக்குப் பயிற்சி நிலையங்களை உருவாக்குதல் வேண்டும்.

*குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்குதல் முக்கியம்[நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக உலகறியச் செய்யலாம்].

*சமூக ஆர்வலர்கள் அடங்கிய அறிஞர் குழுக்களின் மூலம், மேலும் பல ஆலோசனைகளைப் பெற்றிட அரசு விரைந்து செயல்படுதல் உடனடித் தேவையாகும். 

தவறினால்.....

காலிகளின் வன்புணர்வு அட்டூழியம் தொடரும்! தொடர்ந்துகொண்டே இருக்கும்!!