புதன், 10 ஜனவரி, 2024

பத்திரிகை நடத்தும் ‘படித்த’ முட்டாள்கள்!!!

'திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் திருவள்ளுவர் அவென்யூவில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் உள்ள பழைமையான வேப்ப மரத்திலிருந்து பால் வடிகிறது.

2 நாட்களாக வடிந்துகொண்டே இருதுக்கிறதாம்.

இப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் அந்த வேப்ப மரத்தைச் சுற்றிலும் மஞ்சள் போன்றவற்றைத் தெளித்து, மரம் முழுவதும் சந்தனத்தைப் பூசி, குங்குமமும் வைத்து, ஊதுபத்தி, கற்பூரம் எல்லாம் ஏற்றி அதீதப் பக்தியுடன் வழிபடுகிறார்கள்.'

இது செய்தி.

செய்தி வெளியான இதழ் ‘தமிழ்[ச்] சமயம்’[https://tamil.samayam.com/].
மக்களில் பலர் பால் வடியும் மரத்தைச் சாமியாக்கிக் கும்பிடுகிறார்கள் என்றால், அப்படிக் கும்பிடுபவர்கள் படிக்காதவர்களாகவோ, படித்த முட்டாள்களாகவோ இருப்பதுதான் காரணம்.

இதற்கான அறிவியல் விளக்கம், ‘வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு(புளோயம்) பாதிக்கப்படும்.  அவ்வாறு பாதிக்கப்படும்போது, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே(அதைப் பிளந்துகொண்டு) பால் போல வடியும்’என்பதுதான்.

பத்திரிகை அலுவலகங்களில் பணி செய்யும் அனைவருமே[நிருபர்கள், துணையாசிரியர்கள், ஆசிரியர்] மெத்தப் படித்தவர்கள்தான்; ஓரளவுக்கேனும் அறிவியல் அறிவு வாய்க்கப்பெற்றவர்கள்தான்.

மேற்கண்டதும், இவர்கள் அறிந்திருக்க வேண்டிய சாதாரணத் தகவல்தான். ‘தமிழ்ச் சமயம்’ பத்திரிகைக்காரர்களுக்கு[இது விசயத்தில் எல்லாப் பத்திரிகைகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்]த் தெரியாமலிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.

“வெறுமனே செய்தியை மட்டும் வெளியிடாமல்[இது, அவ்வப்போது வெளியாகிற செய்தி], மரத்தில் பால் வடிவதற்கான காரணத்தையும் செய்தியுடன் சேர்க்கலாம். ஏன் செய்வதில்லை?” என்று வினவினால்.....

“நாங்களும் படித்த முட்டாள்களே” என்பதுதான் இவர்களின் பதிலாக இருக்குமோ?
*   *   *   * *