ஞாயிறு, 6 நவம்பர், 2011

நீங்களும் கடவுள்தான்!


                                             நீங்களும் கடவுள்தான்!

இப்பதிவைப் படிக்கும் நண்பர்களே, உங்களிடம் சில வினாக்கள். உங்களின் பதில்களையும் நாமே அனுமானிக்கிறோம். [’நாம்’எனக் குறிப்பிடுவது பத்திரிகையாளர்கள் பின்பற்றும் மரபு. வேறு காரணம் இல்லை]

உங்கள் கையைத் தொட்டு நாம்: “ இந்தக் கை யாருடையது?”

நீங்கள்: “என்னய்யா கேள்வி? என்னுடையதுதான்.”

நாம்: “ இந்தக் கால்கள்?”

நீங்கள்: “என்னுடையதே.”

“தலை உங்களூடையது. உள்ளே இருக்கும் மூளை?”

 சலிப்புடன்,” அதுவும் என்னுடையதுதான்.” என்கிறீர்கள்.

“ஒட்டு மொத்த இந்த உடம்பு...?”

“சந்தேகம் வேண்டாம். என்னுடையதே.”

“எமக்கு எதிரே இருக்கிற இந்த உருவம்?”

“நான்தான்...நானேதான்”

“’நான்’ என்று உங்களைச் சுட்டுகிற நீங்கள், ‘என் கை...என் கால்கள்...என் மூளை... என் உடம்பு... என்று சொன்னதன் மூலம், பல உறுப்புகளை உள்ளடக்கிய உங்கள் உடம்பு வேறு...நீங்கள் வேறு என்றாகிறது. சரிதானே?”

உங்கள் முகத்தில் சினம் பரவுகிறது.  “ முட்டாள்தனமான கேள்வி இது. என் எழுதுகோள்னு சொன்னா, என் எழுதுகோள் வேறு நான் வேறுன்னு ஆகும். என் உடம்புன்னு சொல்லும்போது, நான் வேறு; என் உடம்பு வேறுன்னு அர்த்தம் பண்ணக் கூடாது. [தற்கிழமை, பிறிதின் கிழமைன்னு இலக்கண நூல்கள் சொல்லும்]. ’நான்’னு நான் குறிப்பிடறது, மூளையையும் மற்ற உறுப்புகளையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்த உடம்பைத்தான். ”

“தவறு. நீங்கள் ‘நான்’ என்று சுட்டியது உங்கள் உடம்புக்குள் ஊடுருவியிருக்கிற 
’ஆன்மா’வை.”

“புரியும்படி சொல்லுங்க.”

“உங்கள் உடம்புக்குள் ஓர் ’ஆன்மா’ ஊடுருவியிருக்கு. நீங்க ‘நான்’ என்றது
அந்த ஆன்மாவைத்தான்.”

“நான் ‘நான்’னு சொன்னது என் ஒட்டு மொத்த உடம்பைத்தான். அப்படிச் சொன்னது என் வாய். சொல்ல வைத்தது என் மூளை. ‘நான் உங்களுடன் வருகிறேன்னு சொன்னா என் உடம்பு வருதுன்னுதான் அர்த்தம். ஒரு ஆன்மா வருதுன்னு அர்த்தம் பண்ணக் கூடாது.”

”நீங்க சொல்றது தப்பு. நீங்க ‘நான்’ என்றது 100% அந்த ஆன்மாவைத்தான்.”

”அப்படீன்னு நீங்க சொல்றீங்களா?”

“இல்ல. ஆன்மிகவாதிகளும் கடவுளின் அவதாரங்களும் சொல்றாங்க.”

“இன்னும் என்னவெல்லாம் சொல்றாங்க?”

”ஆன்மா அழிவில்லாதது; என்றும் இருந்தது; இனி என்றும் இருப்பது; அது கடவுளின் ஒரு கூறு. கடவுளின் கட்டளைப்படி, கரு உருவாகும் போதே அதில்
ஐக்கியமாகி, உடம்பு அழியும்வரை அதில் தங்கியிருந்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, பாவ புண்ணியங்களைச் சுமந்து...உடல் அழியும் போது வெளியேறிவிடும் தன்மை கொண்டது; பல பிறவிகள் எடுத்து, என்றேனும் ஒரு பொழுதில் கடவுளுடன் ஐக்கியமாவது. இப்படி இன்னும் நிறையச் சொல்லலாம்.”

“ கடவுளே ஆன்மா வடிவத்தில் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறாரா?”

“ஆமா.”

“இன்ப துன்பங்கிறது...?”

உடம்பின் இயக்கத்தால்...செயல்பாடுகளால் விளைவது”

“பாவ புண்ணியங்கள்?”

“அவற்றின் விளைவுக்கும் உடம்பே காரணம்.”

“உடம்பை இயக்குவது மூளைதானே?”

“ஆமா”

“மூளையைக் கட்டுப்படுத்தவும், துன்பங்களும் பாவங்களும் சேராமல் தடுக்கவும் ஆன்மாவால் முடியுமே?”

”முடியாது. இன்ப துன்பங்களை ஏற்பதும் பாவ புண்ணியங்களைச் சுமப்பதும் மட்டுமே ஆன்மாவுக்குக் கடவுள் இட்ட கட்டளை. மறுபிறவி எடுக்கும் போது நல்ல உயிரின் [?] உடம்பில் புகுவதும் தீய உயிரின் உடம்பில் நுழைவதும் ஆன்மா சுமக்கும் பாவ புண்ணியங்களின் அளவைப் பொறுத்தது.”

“ஓர் உடம்பு [உயிரும் ஆன்மாவும் ஒன்று என்று சொல்லிக் குழப்புகிறார்கள் அதனால்தான், ‘உயிர்’ என்று குறிப்பிடாமல் மூளையால் இயக்கப்படும் உடம்பு என்கிறோம்] செய்யும் பாவத்தை ,உடம்பில் வெறுமனே தங்கியிருக்கிற ஆன்மாக்கள் சுமந்து தண்டனைக்குள்ளாவது என்ன நியாயம்? கடவுளின் கூறுகளான ஆன்மாக்கள் தண்டிக்கப்படுவது கடவுள் தன்னைத்தானே தண்டித்துக் கொள்வது போல் அல்லவா? இது ஏன்?”

“எல்லாம் அவனின் திருவிளையாடல்.”

ஆம் நண்பர்களே, இப்படிச் சொல்பவர்கள் நம் ஆன்மிகவாதிகளும் அவதாரங்களும்தான். கடவுள் திருவிளையாடல் நிகழ்த்துவதாகச் சொல்லி, நீண்ட நெடுங்காலமாக, இம்மண்ணுலகக் கடவுள்களான இவர்களும் மக்களிடையே விதம் விதமான திருவிளையாடல்களை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை எனக் கொண்டால்........................

இப்போது உரையாடிக் கொண்டிருக்கிற நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் அல்ல; என்றும் அழிவில்லாத ஆன்மாக்கள்! ஆன்மாக்களாகிய நாம் அனைவரும் கடவுளின் அவதாரங்கள். ஆக, நாம் எல்லோருமே கடவுள்தான்!!

பல பிறவிகள் எடுத்து, வறுமைத் துன்பம், நோய்த் துன்பம், பகைத் துன்பம் என்று எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும் நமக்கு மரணம் என்பது எப்போதும் இல்லை; கோடிகோடி கோடியோ கோடி யுகங்களுக்குப் பிறகேனும்
 கடவுளுடன் ஐக்கியமாகப் போகிறோம் என்பதை நினைத்து ஆனந்தக் கூத்தாடலாம்!

ஆயினும், சில சந்தேகங்கள்................................................

இக்கணம் வரை நாம் [நான் ஆகிய பரமசிவம்] எத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறோம்?

இனி எடுக்கப் போகும் பிறவிகளைக் கணக்கிட இயலுமா?

ஒவ்வொரு பிறவியிலும் நாம் சுமந்த பாவங்கள் அதிகமா,புண்ணியங்களா?

பாவங்களின் அளவு அதிகரித்துக் கொண்டே போனால் கடவுளுடன் ஐக்கியமாவது ஒரு போதும் முடியாமல் போகும்தானே?

பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் அதிகரிக்க அவர் கருணை காட்டுவாரா?

ஒரு வேளை, கடவுளுடன் ஐக்கியமானால், அதன் பிறகு ஆன்மாவின் செயல்பாடுகள் என்னவாயிருக்கும்? அப்புறம் எப்போதும்... வரையரையற்ற நீ...........ண்..........ட....
நெடு...நெடு...நெடு...நெடுங்காலத்துக்கும் சும்மா இருப்பதுதானா? அதுவே
பேரானந்தமா?

 இவ்வினாக்களுக்கெல்லாம் விடை காண்பதற்கு நம் அவதாரங்கள் உதவி செய்ய வேண்டும்.

செய்வார்களா?

எப்போது?

அவர்களின் பதிலுக்காகப் பேரார்வத்துடன் காத்திருப்போம்!

**********************************************************************************

















இப்பதிவைப் படிக்கத் தொடங்கும் நண்பர்களுக்கு ஓர் அன்பான 




















                

2 கருத்துகள்:

  1. //உயிரும் ஆன்மாவும் ஒன்று என்று சொல்லிக் குழப்புகிறார்கள்//

    தொன்று தொட்ட காலம் முதல் கடவுள் என்ற பிம்பம் பரிணாம வளர்ச்சி அடைந்தே வருகிறார் .. நம் சந்தேகங்கள் கடவுள் என்ற பிம்பத்தை விட பெரிதாகும் பொழுது அவரை பூதாகரமாய் வளர்த்து எடுக்கிறார்கள்...
    உயிரும் ஆன்மாவும் வேறு என்றும்... ஆன்மா உயிரின் உயிர் என்று கிளம்பி விட்டனர்.. இது உங்கள் தகவலுக்கு...

    http://yananwritings.wordpress.com/2011/11/06/food-soul/

    இந்த வாதத்தை வெல்ல என் ஒருவனால் முடியாது என்று நினைக்கிறேன்... நீங்களும் கை கோர்த்தால் அருமையாக இருக்கும்.. எனக்கு பதில் கிடைத்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  2. தகவலுக்கு நன்றி ஜீவா.
    தொடர்ந்து சிந்திப்போம்.

    பதிலளிநீக்கு