Jan 2, 2015

வாசல் இங்கே! சொர்க்கம் எங்கே? [ஓர் ஆன்மிகப் பகுத்தாய்வுப் பதிவு]

'வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் நேற்று[01.01.2015] ‘சொர்க்க வாசல்’ திறக்கப்பட்டது’ - இந்தச் செய்தி, நாளிதழ்கள் அனைத்திலும், இன்று வெளியாகியுள்ளது.

‘ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், “ரெங்கா...ரெங்கா...” கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.’ - இதுவும் பத்திரிகைச் செய்திதான்.

திருச்சிராப்பள்ளி ஸ்ரீரெங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசலை மிதித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் லட்சக்கணக்கில். நாடு முழுவதும் இவர்கள் கோடிக்கணக்கானவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவர்கள் அத்தனை பேரும் சொர்க்கம் புகுவது சர்வ நிச்சயமா?

இவர்களில் நற்செயல்கள் புரிந்து புண்ணியம் சேர்த்தவர்கள் எத்தனை பேர்? பாவ மூட்டைகளைச் சுமந்து திரிபவர்களின் எண்ணிக்கை என்ன?

‘பாவம் செய்தால் நரகம்; புண்ணியம் செய்தால் சொர்க்கம்’ என்று முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனதெல்லாம் பொய்யா? வெறும் கற்பனையா?

100% மனிதர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களின் வாசல்படியை மிதித்தால் சொர்க்கம் புகலாம் என்று யாரோ சிலர் சொல்லிப் போக, கோடானு கோடிப் பேர் அதை நம்பி, இரவெல்லாம், கால்கடுக்க வரிசையில் நிற்பது நம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது.

எல்லையில்லாமல் விரிந்து பரந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்ச வெளியில் எங்கோ ஒரு புள்ளியில் அது இடம்பெற்றிருக்கலாம் எனினும்.....

அதை நம்புகிறவர்கள், ஆயுளில் ஒரு முறை சொர்க்க வாசலை மிதித்தால் போதாதா? ஆண்டுதோறும் மிதித்து வருகிறார்களே, அது ஏன்? அவர்கள் யோசிக்கத் தயாராய் இல்லை.

ஸ்ரீரெங்கம் ரெங்கநாதரைத் தரிசனம் செய்த பக்தகோடிகளே,  ஒன்று கவனித்தீர்களா?

‘நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ரத்தினக் கற்களால் ஆன திரு ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டு ரத்தின அங்கியில் புறப்பட்டு வருவது கண்கொள்ளாக் காட்சி....’ என்று பத்திரிகைகள் எழுதுகின்றன.

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள..... ரத்தின அங்கியில் ஸ்ரீரெங்கநாதர்!!!

‘கடவுளைப் புலன்களால் அறிய முடியாது; உணரத்தான் முடியும். அவன், அவனாக, அவளாக, அதுவாக, எதுவாகவும் இருப்பான்; அவனாக, அவளாக, அதுவாக, எதுவாகவும் இல்லை. எனவே, கடவுள் இருப்பதை உணர்வதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. உணர முடியாதவர்கள், உருவ வழிபாட்டின் மூலம் அவனின் அருளைப் பெற முயல்வதில் தவறில்லை’ என்றெல்லாம் ஆன்மிகவாதிகள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வதில் உண்மை இருப்பதாக நம்புகிறவர்கள். சிலை வடிவில் ரெங்கநாதர் போன்ற கடவுள்களை வணங்குகிறார்கள்.

ஆனால், இந்த ரெங்கநாதர்களின் சிலைகளைக் கோடிகோடியாய்ப் பணம் செலவு செய்து அலங்கரிப்பது அறிவுடைமை ஆகுமா?

கடவுள்களை இம்மாதிரி ஆடம்பரப் பிரியர்களாக ஆக்கியவர்கள் யார்?

அவர்களின் உள்நோக்கம் என்ன? அடைந்த பயன்கள் என்ன?

சொர்க்கம் புக ஆசைப்படும் பக்த கோடிகள் இவை பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை. இவர்களை முழு மூடர்கள் என்றோ, செம்மறியாட்டுக் கும்பல் என்றோ நான் ஒருபோதும் இழித்துரைக்க மாட்டேன். மிக்க பணிவுடன் நான் சொல்ல விரும்புவது..........

“கடவுளை நம்புவது உங்கள் விருப்பம். சுய சிந்தனையுடன் வழிபடுவது உங்கள் கடமை.”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++