அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 19 மார்ச், 2023

அம்மா தெய்வம்! அப்பா?![ஒரு நெடுங்கதையின் ‘கரு’ இங்கே குறுங்கதையாக]


வனுக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்து அவனுடைய அப்பாவும் அம்மாவும் பாசத்தைப் பகிர்ந்துகொண்டதையோ, நேசத்துடன் உறவாடியதையோ அவன் பார்த்ததில்லை.

அவர்களுக்கு அவன் மட்டுமே வாரிசு; செல்லப்பிள்ளைதான். ஆனால், சொல்லிக்கொள்ளும்படியான சந்தோசங்களை அவன் அநுபவித்ததில்லை.

இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள், ஒரு கட்டத்தில் அது மோதலில் முடியும்.

தாக்குதல் நடத்துபவர் அப்பாதான். அம்மா நடத்தியது வெறும் தற்காப்பு யுத்தம் மட்டுமே.

அப்பா அம்மாவின் கன்னத்தில் அறைவார். அம்மா அரண்டுபோய் அடுத்த அறையை எதிர்கொள்ளத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வார்.

அவர் ஒரு கையோங்கிக் குத்தவரும்போது, இவர் தன் முதுகைக் கேடயம் ஆக்குவார்.

அவர் எட்டி உதைத்தால் இவர் தட்டுத்தடுமாறி மல்லாக்க விழுவார். மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு, “குடிகார நாயே, அடிடா, அடிச்சி என்னைக் கொல்லுடா” என்று ஏகவசனத்தில் திட்டித் தீர்ப்பார்; அழுவார். அப்புறம் அரைமணி நேரம்போல ஒப்பாரிவைத்து ஓய்ந்துபோய்க் கட்டாந்தரையில் கண்மூடிக் கிடப்பார்.

‘குடிகார நாயே’ என்று அம்மா சொன்னது உண்மைதான். அப்பா ஒரு குடிகாரன்தான். எப்போதிருந்து அவர் குடிக்க ஆரம்பித்தார் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. 

மற்ற நேரங்களில் அவர் குடித்திருப்பதே தெரியாது. ஆனால், அம்மாவை அடி, உதை என்று புரட்டி எடுத்தபிறகு அவர் தவறாமல் குடிப்பதை அவன் பார்த்திருக்கிறான். 

குடித்துக் குடித்துப் போதை தலைக்கேறி, தரையில் சரிந்து விழுவார்.

குடிப்பதற்கு முன் சிறிது நேரம் தன் நாட்குறிப்பில் ஏதோ எழுதுவதையும், எழுதி முடித்து அதைத் தனக்கேயான ஒரு பெட்டிக்குள் வைத்துப் பூட்டுவதையும் அவன் கவனித்திருக்கிறான். அம்மாவைப் பற்றி அந்த நாட்குறிப்பில் எழுதியிருப்பாரோ என்று சந்தேகப்பட்டதுண்டு. வாய்ப்புக் கிடைத்தால் அதில் எழுதியிருப்பதை வாசித்துப்பார்க்க அவன் ஆசைப்பட்டதும் உண்டு. அதற்கான வாய்ப்பு மட்டும் கிட்டவே இல்லை.

சண்டை முடிந்து, ஒருபுறம் அம்மா மயங்கிக்கிடப்பதையும். இன்னொரு பக்கம் அப்பா உருண்டு புரள்வதையும் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குள் இனம்புரியாத கவலை சூழும். அதைப் போக்கிக்கொள்ள வழியே இல்லையா என்று ஏங்குவான்.

அவன் அழுவான். அந்த அழுகை அம்மாவுக்காகவா, அப்பாவுக்காகவா, தனக்காகவா என்றெல்லாம் அவன் யோசித்துப் பார்த்ததில்லை.

அவன் சிறுவனாக இருந்தபோது, “ஏன்ப்பா அம்மாவை அடிக்கிறீங்க?” என்று கேட்க நினைத்ததுண்டு. ஆனால், அவரின் ஆஜானுபாவான தோற்றம் கேட்கவிட்டதில்லை.

“அப்பா ஏன்மா உன்னை அடிக்கிறார்?” என்று அம்மாவிடம் அவன் கேட்டதுண்டு. 

“உன் அப்பன் என்னைத் தேவடியாள்கிறான். அவுசேரிங்கிறான். கல்யாணத்துக்கு முந்தியே அண்டை வீட்டுக்காரனோடு கள்ள உறவு வெச்சிருந்தேன்கிறான்...” என்றிப்படி ஏதேதோ சொல்லுவாள் அம்மா. சொல்லி அவனைக் கட்டிப்பிடித்து அழுவாள்.

அவன் ஆளாகிப் பள்ளிப்படிப்பு முடித்துக் கல்லூரியில் காலடி வைத்தபோது, அம்மா சொன்ன அந்த உறவுகள் தகாத உறவுகள் என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால், அவளிடம் அப்பா சொன்ன தவறான உறவெல்லாம் அவளுக்கு இருந்ததா என்று கேட்டதில்லை.

படக்கூடாத வேதனைகள் எல்லாம் பட்டுப் பத்து மாதம் சுமந்து பெற்றவளிடம் அப்படிக் கேட்பதற்கு மகனின் மனம் இடம்தருமா?

அப்பாவுடன் சண்டை நடந்து இரவுபகலாய்த் தான் பட்டினி கிடந்தபோதும், மறவாமல் பெத்த மகனுக்குச் சோறூட்டிச் சீராட்டி வளர்த்தவளை, அவன் உடம்புக்கு ஒன்று என்றால், தன் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருந்தவளைச் சந்தேகப்பட முடியமா? கேள்வி கேட்க முடியுமா?

முடியவே முடியாது. 

ஆனால், அப்பாவிடம் இதே கேள்விகளைக் கேட்டிருக்கிறான்.

அப்போதெல்லாம், “உன் அம்மா உனக்கு எப்போதும் நல்ல அம்மாதான். இனியும் அவளைப் பத்தி ஏதும் கேட்காதே. நல்லாப் படிச்சி நல்ல உத்தியோகம் தேடிக்கப்பாரு” என்று சொல்வதோடு பேச்சை முடித்துக்கொள்வார்.

அவ்வப்போது இல்லையென்றாலும், எப்போதாவது, “எப்படிப் படிக்கிறாய்? எஞ்ஜினீயரா டாக்டரா என்னவாக விருப்பம்?” என்று கேட்பதோடு சரி. எவ்வளவு நேரம் படிக்கிறான், எவ்வளவு மதிப்பெண் வாங்குகிறான் என்பது பற்றியெல்லாம் அவனிடம் விசாரித்ததேயில்லை.

+2வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காகக்  கோபப்படவில்லை; ஓசைப்படாமல் ஒரு தனியார் கல்லூரியில் நன்கொடை கொடுத்துக் கணினிப் பட்டப்படிப்பில் அவனைச் சேர்த்துவிட்டார்.

நல்ல அம்மாவும் நல்ல அப்பாவும் வாய்த்ததில் அவன் ரொம்பவே பெருமைப்பட்டான்.

ஆனால், அவர்கள் இருவரும் நல்ல கணவனாகவும் நல்ல மனைவியாகவும் இல்லையே என்பதுதான் அவனின் நீங்காத கவலையாக இருந்தது.

ஆயிற்று, கால ஓட்டத்தில் அப்பாவுக்கு இப்போது அறுபது வயது. திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, “இனி கடவுள் கருணை காட்டினால்தான் உண்டு” என்று மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், அப்பா வீட்டில்  படுத்தபடுக்கையாக இருந்தார்.

நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. அவ்வப்போது கண் திறந்து பார்த்தார். ஏதோ சொல்ல முயல்வது போல் தெரியும். முடியாமல் கண்மூடிவிடுவார்.

அவன் எந்நேரமும் அவர் அருகிலேயே இருந்தான். அம்மாவும்தான்.

அன்று மாலை மயங்கும் நேரம்.

அப்பா கண்விழித்தார். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு அவரின் உதடுகள் அசைந்தன. “பெட்டியைத் திறந்து டைரியை எடுத்து வா” என்று சொன்னதோடு, சாவி இருக்கும் இடத்தையும்  விவரித்தார்.

அவன் நாட்குறிப்பை எடுத்துவந்து அவரிடம் காட்டினான்.

அவர் தீப்பெட்டியை உரசுவதுபோல் சைகை காட்டி, நாட்குறிப்பை எரித்துவிடும்படிச் சொன்னார்.

அவரின் கண் முன்னாலேயே, அதை எரித்துச் சாம்பலாக்கினான் அவன்

அவர் கண்மூடினார். முகம் முழுக்க மரண அமைதி படர்வது தெரிந்தது.

அம்மா அவனின் தெய்வம். அப்பா தெய்வமோ அல்லவோ, அவர் ஓர் உன்னதமான மனிதர் என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது.

===========================================================================================