சனி, 18 மார்ச், 2023

தண்ணீரில் தோன்றிய தெய்வம்!... உலகில் இதுவரை நிகழாத அதிசயம்!?!?!


‘தண்ணீரில் தோன்றிய தெய்வம்’ என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டு[காணொலியும் வெளியாகியுள்ளது] பக்திமான்களை ஆனந்தக் கண்ணீரில் மிதக்கச் செய்துள்ளது ‘தினத்தந்தி’ நாளிதழ்.

கடவுள் நம்பிக்கை இல்லாத ‘நாத்திகப் பதர்’ ஆகிய நான் தலைப்பை வாசித்ததும் மனம் திருந்தி, “ஆகா, தண்ணீரிலிருந்தொரு தெய்வம் வெளிப்பட்டதா?” என்று மெய்சிலிர்த்தேன்[தினத்தந்திச் செய்தி உண்மையாக இருக்கும் என்னும் நம்பிக்கையில்].

அது ஆணா, பெண்ணா?

யாமறிந்த பல்லாயிரம் தெய்வங்களில் அது எதுவாக இருக்கும்?

எம்பெருமான் சிவபெருமானா, காக்கும் கடவுள் கண்ணபிரானா, முருகனா, அண்ணாமலையானா, உண்ணாமுலையம்மனா, இலக்குமியா, கலைவாணியா, கடவுள்களின் கடவுளான அதியோகி சிவனா என்றிப்படிக் கேட்டுக் கேட்டு[அடிமனதில் அல்லாவும் கர்த்தரும்கூடத் தோன்றி மறைந்தார்கள். ஹி... ஹி... ஹி!!!] உடனடியாக விடை அறியும் ஆர்வத்துடன் விரிவான செய்தியை வாசிக்கத் தொடங்கினேன்.

வாசிப்புக்கிடையே மேற்கண்டவர்களில் எவரும் இல்லை; அதிசயம் நிகழ்த்திய அந்த அகில உலகப் பிரபலம் ‘விநாயகப் பெருமான்’ என்பது தெரியவந்தது.

தண்ணீரில் தோன்றிய, அந்த அழுக்குப் பிள்ளையாரை[அம்மையின் அழுக்கில் அவதரித்தவர்] முதலில் காணும் பேறு பெற்றவர்கள் பற்றி அறியும் ஆர்வத்துடன் வாசிப்பைத் தொடர்ந்ததில், கீழ்க்காணும் தகவல்களை அறிய முடிந்தது.

//கடலூர் அருகே ஆதிவராகநல்லூரைச் சேர்ந்த கல்யாணசுந்தரமும் சுபாஷ் என்பவரும் அங்குள்ள வாய்க்காலில் மீன்பிடிப்பதற்காகத் தண்ணீரை இறைத்துள்ளனர். 

அப்போது அங்கு புதைந்த நிலையில் இருந்த பிரமாண்டக் கருங்கல் விநாயகர்[சிலை என்று குறிப்பிடவில்லை தினத்தந்தி] அவர்களுக்குக் காட்சி அளித்துள்ளார். 

இந்தச் செய்தி, சுற்றுவட்டார மக்களிடையே பரவ, அவர்கள் விநாயகரைச் சுத்தம் செய்து சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். 


இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் விநாயகர் சிலையை மீட்டு ஆய்வு செய்துவருகின்றனர்[‘ஆய்வு நிகழ்த்தியபோது விநாயகப்பெருமான் மாயமாய் மறைந்துவிட்டார்’ என்னும் செய்தி சில நாட்களில் வெளிவரும். காத்திருங்கள் பக்தர்களே]//


காலங்காலமாய் இங்கு இருக்கிற முட்டாள்கள் போதாதென்று, புத்தம்புதிய முட்டாள்களை உருவாக்குவதில் தினத்தந்தி[தினமலரை மிஞ்சும் வகையில்]ஆற்றியுள்ள பணி மகத்தானது!



https://www.thanthitv.com/latest-news/cuddalore-vinayagar-in-water-173991

===========================================================================================