ஞாயிறு, 11 டிசம்பர், 2022

சறுக்கிய முதல்வரும் சாதித்த மேயரும்!!!!!!

//தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, நிவாரணப் பொருட்களையும் வழங்கிய பின்னர், ‘கன்வே’ காரில் பயணத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் காரின் ‘கன்வே’யில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா தொங்கியபடி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பின் ஐஏஎஸ் அதிகாரியான சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் அவர்களும் கான்வே வாகனத்தில் தொங்கியபடி சென்றார்.

முதல்வரின் பாதுகாப்புக்காக, பாதுகாப்புப் படை வீரர்கள் மட்டுமே தொங்கிவருவது வழக்கம் என்ற நிலையில் சென்னை மேயரே தொங்கிக்கொண்டு சென்றது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது; பலரின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.//

இந்தச் செய்தி தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி ஊடகங்களிலும் வெளியாகி, பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணியிருக்கிறது.

செய்திக்கு எதிர்வினை[பின்னூட்டம்] ஆற்றியவர்களும், வலைப்பதிவர்களும், சமூக ஊடகக்காரர்களும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களைக் கடுமையாகவே விமர்சனம் செய்திருக்கிறார்கள்; விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

சிலரிடமிருந்து கடும் கண்டனங்களும் வெளியாகியுள்ளன.

முதல்வர் என்ற முறையில் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள், அனைத்துத் தரப்பினராலும், “ஆகா! ஓஹோ!!” என்று சிலாகிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும், “பரவாயில்லை” என்று சொல்லும் அளவுக்கு உள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மக்கள் நலனுக்காக ஓய்விலாமல் உழைத்துக்கொண்டிருப்பவர் ஸ்டாலின் அவர்கள்.

உண்மையில், அவருக்குச் சிறிது ஓய்வைத் தருபவை இம்மாதிரிக் கார்ப் பயணங்கள் மட்டுமே. நாள் முழுக்க மேற்கொண்ட அயராத பணிகள் காரணமாகச் சோர்வுற்றிருந்த அவர் சற்றே கண்ணயர்ந்திருப்பார். அந்த நேரத்தில், மேயர் பிரியா காரில் தொற்றிக்கொண்டதை அவர் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, சிறிது கண்ணயரக்கூட நேரமில்லாமல், ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டும் இருந்திருக்கலாம்.

எனவே, ஊருலகம் எப்படியோ, அடியேனுக்கு, ஸ்டாலின் அவர்கள் அறிந்து செய்த தவறு இது என்று எண்ணத் தோன்றவில்லை.

மேலும்.....

பிரியா ஒரு மாநகரத்தின் மேயர் என்றாலும், பொதுப்பணி ஆற்றும் நேரங்களில் தான் ஒரு மேயர் என்பதையே மறந்தவராக இருந்திருக்கலாம்; இந்நாள்வரை ஆண்கள் மட்டுமே ‘கன்வே’யில் பயணித்திருக்கிறார்கள் என்னும் நிலையை மாற்றிச் சாதனை நிகழ்த்தும் உத்வேகம் காரணமாக முதல்வர் பயணித்த காரில் தொற்றிக்கொண்டிருக்கலாம்.

வயதிலும் சிறியவர் என்பதால் இந்தச் செயலை அவர் மிக விரும்பிச் செய்திருக்கவும்கூடும்.

கிடைத்த அரியதொரு வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டார் என்றுகூடச் சொல்லலாம்.

ஆக, முதல்வர் தனக்குரிய கடமையிலிருந்து[காரை நிறுத்தி மேயரை வேறு காரில் பயணிக்கச் செய்தல்] சறுக்கினார் என்று கொண்டாலும், ஒரு பெண்ணாக ஓடும் காரின் ‘கன்வே’யில் மேயர் பிரியா தொற்றிப் பயணித்தது ஒரு வரலாற்றுச் சாதனை என்றே கூறலாம்.

===========================================================================https://tamilminutes.com/maor-priya-in-cm-convey-car/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக