வியாழன், 14 மார்ச், 2013

ஆன்மா எங்கே...எங்கே...எங்கே??? [ஒரு பக்க ஆன்மிகக் கதை!!]

எச்சரிக்கை! இந்தப் பதிவைப் படித்தால் 100% உங்கள் நிம்மதி பறி போகக்கூடும்!!

கதையின் தலைப்பு:           சில கேள்விகள்

ழக்கம்போல அன்று மாலை, திரு.வி.க.பூங்காவில் காற்று வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு அறிமுகமே இல்லாத ஒரு நடுத்தர வயது ஆள் என்னருகே வந்து அமர்ந்தார்.

நான் பார்த்தும் பார்க்காதது போல் நோட்டமிட்டதில், அந்த ஆள் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது புரிந்தது.

நான் சற்றும் எதிர்பாராத வகையில், “ஆன்மா பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றார்.

“எனக்கு எதுவும் தெரியாது” என்றேன் நான்.

"எதுவுமே தெரியாதா?” மிதமிஞ்சிய வியப்புடன் கேட்டார்.

”தெரியலேன்னா என்ன நஷ்டம்?” இது நான்.

“ஆன்மா, அழிவில்லாதது. அழிஞ்சி போற உடம்பிலிருந்து விடுதலையாகிப் புதிய புதிய பிறவிகள் எடுக்கும்; நம்ம கர்ம வினைக்கேற்ப இன்பதுன்பங்களை அனுபவிச்சிட்டே இருக்கும். இது புரிஞ்சாத்தான், நாம் ஒவ்வொரு பிறவியிலும் நல்ல காரியங்கள் செஞ்சி புண்ணியம் சேர்த்துப் பிறவிகளிலிருந்து விடுதலை பெற்று, இறைவன் திருவடியில் ஐக்கியம் ஆக முடியும்.”

“’ஆன்மா’ன்னு ஒன்னு இருக்கிறதை எப்படி நம்புறது?” கேட்டேன்.

“நான் சொல்றேன்” என்றவர், என்னுடைய கையைப் பற்றி, ”இந்தக் கை யாருடையது?” என்றார்.

“என்னுடையதுதான்.”

“இந்தக் கால்?” என் காலைத் தொட்டார்.

“அதுவும் என்னுடையதுதான்.”

“தலை உங்களுடையது. உள்ளே இருக்கிற மூளை?”

சலிப்புடன், “என்னுடையதே” என்றேன்.

எழுந்து, எனக்கு எதிரே நின்று, “இந்த உடம்பு?” என்றார்.

எரிச்சலுடன்,  ”என்னுடைய உடம்புதான்” என்றேன்.

“இப்படிச் சொன்னது யாரு?”

“நான்தான்.”

“என் கை, என் கால், என் மூளை, ’என் உடம்பு’ன்னெல்லாம் நீங்க சொல்றதிலிருந்தே உங்களுடைய அங்கங்களும் ஒட்டு மொத்த உடம்பும் வேறு; நீங்க வேறுன்னு புரியுதில்லையா?.” சொன்னது யார்னு கேட்டப்போ, ‘என் வாய்’னு சொல்லாம, ‘நான்’னு சொன்னீங்க இல்லையா, அந்த ‘நான்’தான் ஆன்மா.”

நான் சற்றே யோசித்தேன்.

“என் கன்னத்தில் ஒரு அறை விடுங்க”என்றேன்.

அவர் குழப்பமாகப் பார்த்தார்.

“நான் சொன்னதைச் செய்யுங்க.”

அவர் நோகாமல் என் கன்னத்தில் ஓர் அறை விட்டார்.

“என் கன்னத்தில் அறைஞ்சது யாரு.”

“நான்தான்.”

“அந்த ‘நான்’ ஆன்மாதானே?”

“ஆமா.”

“யாருடைய ஆன்மா, என்னோடதா இல்ல.....”

அவர் அவசரமாகக் குறுக்கிட்டார்; “என்னோட ஆன்மா.”

”என்னோட ஆன்மான்னு ’நீங்க’ சொல்றதால நீங்க வேறு; உங்க ஆன்மா வேறுன்னு ஆகுது. அப்புறம் எப்படி நான் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்னுன்னு சொல்றீங்க.”

” என்னங்க நீங்க, ‘என் ஆன்மா’ன்னு சொல்லாம எப்படிப் புரிய வைக்கிறது?”

“அதையேதான் நானும் சொல்றேன், இந்த உடம்பு யாருதுன்னு கேட்டீங்க. என் உடம்புன்னு சொன்னேன். அப்படிச் சொன்னதால, உடம்பு வேறு நான் வேறுன்னு ஆயிடாது. மூளையை உள்ளடக்கிய ஒட்டு மொத்த உடம்புதான் நான். நான் உங்களோட வர்றேன்னு சொன்னா, என்னுடைய உடம்பு வருதுன்னுதான் அர்த்தமே தவிர, என் ஆன்மா வருதுன்னு அர்த்தமில்ல. மூளையை உள்ளடக்கிய ஒட்டு மொத்த உடம்பைத்தான் ‘நான்’னு சொல்றோம். உடம்பு அழிஞ்சா, நான் கிற உணர்வும் அழிஞ்சி போகுது. அவ்வளவுதான். ஆன்மா அது இதுன்னு ஏன் குழப்புறீங்க?”

‘ஆன்மா இருக்குன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“பெரியவங்க சொல்லியிருக்காங்க; ஆன்மிகவாதிகள் சொல்லியிருக்காங்க; அவதாரங்கள் சொல்லியிருக்காங்கன்னு உங்க மாதிரி ஆட்கள் சொல்லிச் சொல்லிச் சொல்லியே மக்களை முட்டாள்கள் ஆக்கிட்டிருக்கீங்க.” வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்துச் சொன்னேன்.

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுப்பா. நம்ம முன்னோர்களை அவமதிச்சதா ஆகும். நிதானமா கேளு. உனக்குப் புரியும்படியா விளக்கிச் சொல்றேன்.”

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். ஆளை விடுங்க. என் பெண்டாட்டி காணோமேன்னு பார்த்துட்டிருப்பா. எனக்கும் பசிக்குது.” சிமெண்ட் இருக்கையிலிருந்து எழுந்தேன்.

“போகாதே, இரு. நான் சொல்றதை......” என் கைகளை இறுகப் பற்றினார் அவர்.

“விடுங்க.” மல்லுக் கட்டினேன்.

அவர் பிடியைத் தளர்த்தவே இல்லை.

“விடுய்யா...என்னை விடு...விடு...விடு...” அலறினேன்.

என் அலறல் நீடித்தபோது..........

“ஏங்க, எதுவும் கனவு கண்டீங்களா? “ என்று கேட்டு, யாரோ என் தோள்களைப் பற்றி உலுக்குவதை உணர முடிந்தது.

அந்த யாரோ என் அருகில் படுத்திருந்த என் மனைவிதான்.

“கனவுதான். பூங்காவில் காத்து வாங்கிட்டிருந்தப்போ, நாலு தடியனுங்க, ‘உங்களுக்குக் கருத்தடை ஆப்ரேஷன் செய்யப் போறோம்னு என்னைக் குண்டுக் கட்டாத் தூக்கிட்டுப் போனாங்க. என்னை விட்டுடுங்கடான்னு அலறினேன்” என்றேன், அவளையும் குழப்ப வேண்டாம் என்ற நல்லெண்ணத்துடன்.

“எழுபது வயசான உங்களுக்குக் கருத்தடை ஆப்ரேஷனா?” என்று கேட்டுச் சிரித்தாள் 66 வயதான என்னவள்.

நானும் சிரித்து வைத்தேன்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




























10 கருத்துகள்:

  1. நல்ல வேளை, ஒ.ப.கதைங்கறதால கொஞ்சம்தான் குழப்பிவிட்டிட்டீங்க.

    அடிக்கடி தொடர்ந்து எழுதினால்தானே சீக்கிரம் 1000 கதைகள் வரும்? குயிக் சார்!

    பதிலளிநீக்கு
  2. Excellent.

    ஆன்மா என்றால் என்னவென்றே தெரியாமல், நிறையப்பேர் ஆன்மாவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய வாதம் அருமை.

    கடைசியாக.....ஆன்மா என்றால் எனக்கும் தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. alien,

    இந்நாள்வரை, ’ஆன்மா’ இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை என்பதே என் கருத்து.

    ஆன்மா பற்றி, ஏற்கனவே இரண்டு பதிவுகள் எழுதித் தமிழ்மணத்தில் இணைத்து [பார்வையாளர் எண்ணிக்கை மிகவும் குறைவு], சில காரணங்களால் ‘draft' இல் சேர்த்து வைத்திருக்கிறேன்.

    இன்னும் சிறப்பாக வடிவமைத்துப் பின்னர் வெளியிடும் எண்ணம் உள்ளது.

    சற்றே கால தாமதம் ஆகலாம்.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஆன்மா பற்றிய அழகான விளக்கம்! அருமையான கதை! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. ஹா...ஹா...ஹா! அட்டகாசமான கதை!

    அருமையான விளக்கம். ரசித்தேன் சார்!

    பதிலளிநீக்கு