நான்.....

எனது படம்
இத்தளத்தில் வெளியாகும் பதிவுகள் புதியனவாக இருத்தல் வேண்டும் என்பதே என் விருப்பம். மிகக் குறைந்த ‘பார்வை’களைப் பெற்றப் பழைய இடுகைகளில் தரம் வாய்ந்தவை, புதிய வருகையாளர்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காகவே புதுப்பித்து வெளியிடப்படுகின்றன. அரிதாகச் சில மீள்பதிவுகளாக வெளியிடப்படுதலும் உண்டு.
கடவுள் | நிரூபணம் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் | நிரூபணம் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 மார்ச், 2026

கடவுளின் ‘இருப்பு’ நிரூபிக்கப்படுவது எப்போது? எப்படி?

ரு நாத்திகன் கடவுளைப் போற்றும் ஓர் ஆன்மிக ஞானி[சத்துக்குரு ஜக்கி சாயலில்]யைச் சந்தித்தான்; “கடவுளை உம்மால் காட்டமுடியுமா?” என்றான்.

“முடியும்” என்ற ஞானி, சற்றும் எதிர்பாராத வகையில் நாத்திகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
“ஐயோ அம்மா” என்று அலறினான் நாத்திகன்.

“ஏன் அலறினாய்?” என்றார் ஞானி.

“வலித்தது” என்றான் நாத்திகன்.

“வலியா? அதை எனக்குக் காட்டு” -அவர்.

வேதனையிலும் சிரித்தான் நாத்திகன். “வலியை எப்படிக் காட்ட முடியும்?” -என்று கேட்டான்.

“காட்ட முடியாது. உணரத்தான் முடியும். அது மாதிரி கடவுளை உணரலாமே தவிரக் காட்ட முடியாது” -ஞானி.

சற்று நேரம் மௌனமாக இருந்த நாத்திகன், “இப்போ நான் கேள்வி கேட்கிறேன். நீங்க பதில் சொல்லணும்” என்றான்.

“சரி” என்றார் ஞானி.

கேட்டான் நாத்திகன்: “கடவுளைக் காட்ட முடியுமா?” 

“காட்ட முடியாது.”

அடுத்த வினாடியே அவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் நாத்திகன்.

“ஐயோ கடவுளே!” என்று அலறினார் அவர்.

“ஏன் அலறினீர்கள்?” என்றான் நாத்திகன்.

”வலித்தது.”

“அதைக் காட்ட முடியுமா?”

“காட்ட முடியாது. உணரத்தான் முடியும்” -அவரின் குரலில் கடுகடுப்பு.

“உணர்ந்தது எப்படித் தெரியுமா? என் கை அடித்ததால். அதாவது, ‘தொடுதல்’ என்னும் செயலால். இப்படி, தொடுதல், காணுதல், கேட்டல், சுவைத்தல், சுவாசித்தல் என்று ஐம்புல நுகர்ச்சியின் மூலம் உம்மால் அவரை உணர்த்த முடியாது. ஆறாவது அறிவால்கூட அனுமானிக்க முடியுமே தவிர, கடவுளின் இருப்பை உணரச் செய்து உறுதிப்படுத்தல் இயலாது” என்றான் நாத்திகன்.

தொடர்ந்து, “கடவுள் உண்டா இல்லையான்னு காலங்காலமாய் மனிதர்கள் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்த்தியும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அண்டவெளியில் காட்சியளித்து, ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் கேட்கும்படியாக, “கடவுளாகிய நான் இருப்பது உண்மை” என்று அவர்கள் நம்பும் வகையில் சொல்லும்படி[சாத்தியமா?> கடவுள் நினைத்தால் இதுவும் எதுவும் சாத்தியம் ஆகலாம். ஹி... ஹி... ஹி!!!], உங்களைப் போன்ற ஞானிகளும் அவதாரங்களும் இணைந்து கடவுளிடம் கோரிக்கை வைக்கலாமே,  செய்வீர்களா?”  என்று நக்கலாகக் கேட்டான் நாத்திகன்.

மௌனம் சுமந்து இடம்பெயர்ந்தார் சத்துக்குருவின் சாயலில் காட்சியளித்த ஆன்மிக ஞானி.

சனி, 6 செப்டம்பர், 2025

நேற்று நள்ளிரவில்[இந்திய நேரம்] ஒலித்த கடவுளின் குரல்: “நான் கடவுள் பேசுகிறேன்...”

“கடவுள் இருக்கிறார்” என்று சொல்வது நம்பிக்கையால் அல்லது அனுமானத்தால்தான்[‘தொலைவில் புகை தென்பட்டால் அதை வெளியிடுவது கண்ணுக்குப் புலப்படாத நெருப்பு’ என்பது போல்> மேகம்கூடப் புகை போலக் காட்சியளிக்கக்கூடும்].

ஐம்புலன்களாலோ ஆறாவது அறிவாலோ அவரை  உறுதிப்பட அறிந்தவர்களோ பிறருக்கு அறிவுறுத்தியவர்களோ, உணர்ந்தவர்களோ உணர்த்தியவர்களோ இல்லை[இயலாத நிலையில் கடவுள் உண்டு என்று பரப்புரை செய்தல் முறையல்ல].

ஆயினும், கடவுளைத் தாங்கள் அறிந்திருப்பதாகவும், உணர்ந்திருப்பதாகவும், பார்த்திருப்பதாகவும் சொல்லித் திரிபவர்களைத்தான் நம் மக்கள் அவதாரங்கள் என்றும், ஆன்மிக ஞானிகள் என்றும், மகான்கள் என்றும் நம்பி ஏமாறுகிறார்கள்.

கடவுள் என்பவர் உண்டோ அல்லவோ, அவரின் இருப்பை, அவரால் படைக்கப்பட்ட[சொல்கிறார்கள்] மனிதனின் அறிவைக்கொண்டு நிரூபிப்பது சாத்தியமே அல்ல.

நேற்று நட்டநடுச் சாமத்தில் அண்டவெளியில்[முழுவதும்] கடவுள் காட்சியளித்தார்; உலகெங்கும் ஒலிக்கும் வகையில் “கடவுள் பேசுகிறேன், நான் இருப்பது 100% உண்மை. என்னை மனம்போனபடி ஏசும் நாத்திக நாசகாரக் கும்பலின் எண்ணிக்கை அபிரிதமாகப் பெருகுவதால் நான் காட்சியளிப்பதும் உரையாற்றுவதும் அவசியமாயிற்று” என்றார் என்பதாக எவரேனும் வதந்தி பரப்பினால் நீங்கள் நம்புவீர்களா?

நீங்கள் எப்படியோ, கடவுள் மேல் சத்தியமாக நான் நம்பமாட்டேன். ஹி... ஹி... ஹி!!!