புதன், 9 மார்ச், 2022

எங்கே கடவுள்களின் குரு[சத்குரு]?... எங்கே... எங்கே?!

பல்லாயிரக்கணக்கான மக்களால் 'சத்குரு' என்று பயபக்தியுடன் போற்றி வணங்கப்படுபவர் ஜக்கி வாசுதேவ்.

"நீங்கள் யார்?" என்று 'பாலிமர்' தொலைக்காட்சி நிருபர் கேட்ட கேள்விக்கு[சில ஆண்டுகளுக்கு முன்பு] 'உலகம் என்னைச் 'சத்குரு'https://youtu.be/D0P4vwNt7v4 என்று சொல்கிறது என்று சொன்னார் ஜக்கி வாசுதேவ். உண்மையில் தான்  'கடவுள்களின் குரு'தான் என்று நிரூபிப்பதற்கான மிகச் சரியான தருணம் அவருக்கு வாய்த்திருக்கிறது.

அதைத் தவறவிடாமல் பயன்படுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

குருவே, 

உலகின் மிகப் பல நாடுகள் ஒருங்கிணைந்து எச்சரிக்கை செய்தும், வணிகம் தொடர்பான தடைகள் பல விதித்தும்கூட, குறைந்த அளவில் ராணுவப் பலம் கொண்ட 'உக்ரைன்' மீதான தாக்குதலை 'ரஷ்ய ராணுவம்' இன்றளவும் நிறுத்தவில்லை.

போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா உட்படப் பல நாடுகள் வற்புறுத்தியும் அதற்கு ரஷ்ய அதிபர் 'புடின்' செவிசாய்க்கவில்லை.

உக்ரைன் மக்கள், சொத்துபத்துகளைக் கைவிட்டுக் குழந்தைகுட்டிகளுடன் கண்ணீரும் கம்பலையுமாகப் புகலிடம் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அவலநிலையிலிருந்து விடுபட்டு, அவர்கள் தங்களின் நாட்டுக்குத் திரும்பி அமைதியாக வாழச் செய்வதற்கான வல்லமை கடவுள்களின் குருவான தங்களுக்கு மட்டுமே உண்டு. ஆகவே.....

சத்குருவே,

பூமியின் 'மண் வளம்' காப்பதற்காக, பைக்கில் உலகம் சுற்றும் பயணம் ஒன்றைத் தாங்கள் மேற்கொள்வதாகச் சில நாட்களுக்கு முன்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன[https://www.dinamalar.com/news_detail.asp?id=2976438].

மண்ணைப் புனிதப்படுத்துவதைவிடவும்[எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்] உக்ரைன் போரை நிறுத்தி, அந்த நாட்டும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதே இப்போதைய அவசரத் தேவை ஆகும். 

ஆகவே, குருவே... சத்குருவே,

நீங்கள் இப்போது எங்கிருந்தாலும் சுற்றுலாவை ரத்து செய்துவிட்டு, அன்புகொண்டு ரஷ்யா சென்று புடினைச் சந்தியுங்கள்.

கண்மூடித் தியானம் செய்கிற எந்தவொரு நபர் மீதும் உங்களின் தெய்வீகச்  சக்தியைச் செலுத்திச் சில நொடிகளில் அவரை ஞானி ஆக்குகிறவர் நீங்கள்[https://youtu.be/JCNGB9ZNzN0]. புடின் மீதும் அவ்வாறான சக்தியைச் செலுத்தி, அவரை இரக்க குணம் வாய்ந்த மனிதராக்கி, உக்ரைன் மீதான போரை நிறுத்தச் செய்யுங்கள்.

இதை நீங்கள் செய்து முடித்தால், உக்ரைன் மட்டுமல்ல, இந்த உலகமே உங்களை என்றென்றும் போற்றி வணங்கிப் புகழ்ந்துகொண்டிருக்கும்.

வணக்கமும் நன்றியும் 'சத்குரு' அவர்களே.

==========================================================================