திங்கள், 7 மார்ச், 2022

உக்ரைனில் நடப்பது போரல்ல; கொலைவெறித் தாக்குதல்!!!

போர் என்பது, சமபலம் வாய்ந்த இரு நாடுகளிடையே இடம்பெறும் பலப்பரீட்சை.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 'போர்' என்பது உண்மையாயின், ரஷ்யப் படை உக்ரைனியரின் குடியிருப்புகளைப் பீரங்கிகளால் சுட்டும், ஆயுதக் கிடங்குகள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், எதிரியின் ராணுவ முகாம்கள், விமானத் தளங்கள் போன்றவற்றை ஏவுகணைகளால் தாக்கியும் சேதங்களையும் பேரழிவுகளையும் உண்டுபண்ணுவது போல், உக்ரைனியப் படையினரும் ரஷ்ய நாட்டுக்குள் புகுந்து இவற்றைச் செய்திருப்பார்கள்.

அதற்கான படை பலம் அவர்களுக்கு இல்லை என்பது, பன்னிரண்டு நாட்களுக்கும் மேலாக நடைபெறும் மோதலின் மூலம் அறியப்படுகிறது. 

குடியிருப்பு, ஆடை, உணவுப் பொருள் போன்ற அன்றாடப் பிழைப்புக்குத் தேவையான அத்தனை உடைமைகளையும் விட்டுவிட்டு, உயிர் பிழைத்தால் போதும் என்று, ஏதுமறியாத மழலைச் செல்வங்களுடனும் முதியோர்களுடனும் புகலிடம் தேடி ஓடுகிறார்கள் உக்ரைனியர்கள்[15 லட்சங்களுக்கு மேல்]. இதற்குக் காரணம் ரஷ்யப் படை வீரர்களின் இடைவிடாத கொடூரத் தாக்குதல்.

உக்ரைனிய வீரர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதோடு ரஷ்யாவுக்குள் புகுந்து உக்கிரமாகத் தாக்குதல் நடத்தியிருந்தால், ரஷ்யக் குடிமக்களும் இதே மாதிரியான அவல நிலைக்கு ஆளாகியிருப்பார்கள். ஆக.....

இந்த இரு நாடுகளுக்கிடையே நடப்பது போரே அல்ல. 

பலவீனமான எதிராளி மீது அசுர பலம் கொண்ட ஒருவன் நடத்தும் கொலைவெறித் தாக்குதல் போன்றதே இது.

ரஷ்யருக்குப் பாதிப்பை உண்டாக்குகிற செயலை உக்ரைனிய அரசு செய்திருந்தாலும் அந்த அரசைத் தண்டிப்பதற்கு வேறு வழிகளை ரஷ்யாவால் கையாள முடியும். போர் என்னும் பெயரில் நடத்தப்படும் வெறித் தாக்குதல் நடைபெறக் கூடாத ஒன்று.

இந்த வெறித் தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று; உடனடியாகப் பிற நாடுகள் தலையிட்டுத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.

'தலையிட்டால், அணு ஆயுதப் போர் மூளும்' எனின், நடந்துகொண்டிருக்கும் "உக்ரைனிய - ரஷ்ய மோதலால் உக்ரைனிய மக்கள் படும் சொல்லொணாத் துன்பங்களை நோக்க, அணு ஆயுதப் போரால் உலகம் அழிவதே மேல்" என்று சொல்லத் தோன்றுகிறது.

==========================================================================