திங்கள், 7 மார்ச், 2022

போர் வெறியும் இந்தி வெறியும்!!

உக்ரைனில் போர் நிறுத்தம் செய்யப்படுவதற்கான அறிகுறி ஏதும் தென்படாத சூழலில், பல லட்சம் உக்ரேனிய மக்கள் அகதிகளாகப் புகலிடம் தேடி வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

இச்சூழலில், மருத்துவம் உள்ளிட்ட படிப்புக்காக உக்ரைன் சென்ற மாணவர்களையும், வேலை நிமித்தமாகச் சென்றவர்களையும் அருகில் உள்ள நாடுகளுக்கு வரவழைத்து விமானங்கள் மூலம் மீட்கும் முயற்சியில் இந்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது என்பது செய்தி.

உயிர் பிழைத்து மீளும் ஆசையில், உறைவிட வசதியும், உண்ண உணவும், குடிக்க நீரும் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் அத்தனை மாணவர்களும் இந்தியர்களே.

ஆனால், இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பவர்களுக்கு, அங்குள்ள மாணவர்களில் 'இந்தி' பேசுவோர் மட்டுமே இந்தியர்களாகத் தெரிகிறார்கள். அதன் விளைவு.....

இந்தி பேசத் தெரிந்த வடநாட்டு மாணவர்களை மீட்பதற்கே முன்னுரிமை தருகிறார்கள். இதை அங்குள்ள தமிழ் நாட்டு மாணவர்கள் சொல்வதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன.

அண்மையில் நாடு திரும்பிய, கொடைக்கானலைச் சேர்ந்த 'அனுசியா மோகன்' என்ற மருத்துவ மாணவியும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். "மாணவர்களை மீட்கும் பணியில் வடமாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. அனைத்து அறிவிப்புகளும் இந்தியில் இருந்ததால் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்" என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இந்த இனவெறியர்களின் பாரபட்சமான செயல்பாடு, வடவர் அல்லாத பிற மாநிலத்தவரை, "நாங்களும் இந்தியர்களே" என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயனேதும் உண்டா?" என்று கேட்கத் தூண்டியிருக்கிறது.

அத்துடன், இவர்கள் அங்குள்ள மாணவர்களுடன் தொடர்புகொள்ள 'இந்தியை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்'[ஆங்கிலத்தில் பேசுவதால் மீண்டும் ஆங்கிலேயருக்கு அடிமை ஆகமாட்டோம்] என்பதும் கவனிக்கத்தக்கது.

தொடர்ந்து இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்த 'இந்தி'யர்கள்[இந்தியைப் பயன்படுத்தி நாட்டை ஆள நினைப்பவர்களும், அவர்களுக்குச் சேவகம் செய்யும் இங்குள்ள விபீஷணர்களும்கூட 'இந்தி'யர்களே], இந்தியாவெங்கும் இந்தியை மட்டுமே பயன்பாட்டு மொழியாக்கிடவும் துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 

இந்தி பேசாத மாநில மக்கள் ஒருங்கிணைந்து, இந்த வெறியர்களை எதிர்த்துப் போராடத் தவறினால், இவர்கள் காணும் கனவு நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

==========================================================================

https://www.maalaimalar.com/news/state/2022/03/06154059/3549228/Tamil-News-Kodaikanal-student-says-she-face-racial.vpf   -march 06, 2022 15:40 IST