ஞாயிறு, 6 மார்ச், 2022

இல்லறம் சிறக்க இரண்டாண்டுத் 'தகுதிகாண் பருவம்'[Probation period]!!!

வாய்ப்பு அமையும்போதெல்லாம், ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்து, பேசிப் பழகினால் மட்டுமே ஒருவரையொருவர் ஓரளவுக்கேனும் புரிந்துகொள்வது சாத்தியமாகும். இந்நிலையில், இருவரும் மனதார விரும்பி மணம்புரிந்தால், அவர்களுடைய குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.

ஆணும் பெண்ணும் இவ்வாறு பழகி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல், ஒரு திடீர் விபத்து போல, 'கணவன்-மனைவி' ஆக 'ஒப்பந்தம்' செய்யப்படுவதால், மிகப் பல குடும்பங்கள் போராட்டக் களங்களாக ஆகிவிட்டன.

கணவன் மனைவியருக்கிடையே, தற்கொலைகள், கொலைகள், விவாகரத்துகள் நாளும் அதிகரித்தவண்ணம் உள்ளன; அன்றாடச் செய்திகளாகவும் ஆகிவிட்டன. போதிய அன்பும் அரவணைப்பும் இல்லாத பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

இந்த அவல நிலையை மாற்றிட அரசு/அரசுகள் அவசரகதியில் திட்டமிட்டுச் செயல்படுதல் வரவேற்கத்தக்கது.

இதற்கென்று தனிச் சட்டம் ஒன்றை இயற்றி, அதை அமல்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்துதல் வேண்டும்.

'புதிதாக மணம் செய்துகொண்டவர்கள், மணம் புரிந்த நாளிலிருந்து 2 ஆண்டுக் கால அவகாசத்தில்[மாறுதலுக்குரியது], நல்ல கணவனாகவோ மனைவியாகவோ வாழ்வதற்கான தகுதி தங்களுக்கு உண்டு என்பதை நிரூபிப்பது கட்டாயம் ஆக்கப்படுதல் அவசியம். குழந்தை பெறுவதும் தடை செய்யப்பட வேண்டும்.

நிறுவனங்களில், 'நிரந்தரம்' என்னும் வகையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், 'தகுதிகாண் பருவம்' என்னும் பெயரில் நிர்ணயிக்கப்படும் கால இடவெளியில்[அரசுப் பணிக்கு  2 ஆண்டுகள்] தாங்கள் தேர்வு செய்யப்பட்ட பணிக்கு முழுத் தகுதி உள்ளவர் என்பதை உறுதிப்படுத்துவது சட்டம் ஆக்கப்பட்டுள்ளது தெரிந்ததே[Probation period means the “trial period” that you serve as a new employee in an organization. It lets both the employee and the employer get to know each other better before the organization can offer him/her a regular or permanent position].

திருமணப் பதிவுத் துறையில் இதற்கென நிபுணர் குழு அமைத்து, முறையான விசாரணயின் மூலம், இரண்டாண்டுக் கால இல்லறத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரிடையே பிரச்சினை ஏதுமில்லை என்று உறுதி செய்து சான்றிதழ் வழங்கிய பிறகே, அவர்களின் திருமணத்தை 'இது உறுதி செய்யப்பட்ட திருமணம்' என்று பதிவு அலுவலகம் பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பின்னர் குழந்தை பெறுவதற்கு அனுமதிக்கலாம்.

தகுதிகாண் பருவத்தை முறையாக நிறைவு செய்ய இயலாமல், தம்பதியர் பிரிய நேர்ந்தால், நம் 'ஒருவன் ஒருத்தி' பண்பாடு என்ன ஆவது என்று எவரும் கவலைப்படத் தேவையில்லை.

மனக்கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ள தம்பதியர் உள்ளவரை கற்பு உயிர்ப்புடன் இருந்துகொண்டுதான் இருக்கும்!

                                            *   *   *   *   *

இது ஒரு முன்னோட்டப்  'பரிந்துரை' மட்டுமே. அரசு, உரிய முறையில் குழு அமைத்து ஆய்வு செய்து முடிவெடுக்கலாம்.

==========================================================================