Jun 10, 2017

மனைவி மனம் ‘நொந்த’ அந்த நாளில்.....

என் பதிவுகளின் முதல் வாசகியான என் மனைவி, உங்களுக்குச் சாமியைத் திட்டுறதே பொழப்பாப் போயிடிச்சி” என்று மனம் சலித்த ஒரு நாளில் அவரை[கடவுளை]த் திட்டாமல் எழுதியது இந்தக் கதை!
றைவி தன் அருகில் வந்து அமர்ந்ததைக்கூடக் கவனியாமல் மோனத்தில் புதையுண்டு கிடந்தார் இறைவன்.

பரிவுடன் அவர் தோள் தொட்டு, செஞ்சடை  வருடி, “ஆழ்ந்த சிந்தனையில் இருக்கீங்க. கொஞ்ச காலமாகவே என்கிட்ட முகம் காட்டிப் பேசுறதில்ல. நான் ஏதும் தப்புப் பண்ணிட்டேனா?” என்று குரலில் வருத்தம் இழையக் கேட்டார் இறைவி.

“நீ பண்ணல. நான்தான் பண்ணிட்டேன்.” -இறைவனின் குரலில் டன் கணக்கில்  சோகம்.

“முழுமுதல் கடவுளாகிய நீங்களா?”

“கோடி கோடி கோடியோ கோடி கோடானுகோடி உயிர்களில் மனுசனுக்கு மட்டும் ஆறாவது அறிவைக் கொடுத்து மாபெரும் தப்புப் பண்ணிட்டேன்.”

‘சொல்லுங்க.”

“நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட நெடுநெடுங்காலமா படைப்புத் தொழில் செஞ்சி ரொம்பவே சலிச்சிப் போனேன். இனி, அதை மனுசன்கிட்ட ஒப்படைச்சுடலாம்னு முடிவெடுத்துத்தான் அவனுக்கு ஆறறிவைக் கொடுத்தேன். ஆறறிவை எனக்குள்ளது போலப் பேரறிவா மாத்தும் திட்டமும் இருந்திச்சி. ஆனா, நான் நினைச்சது எதுவும் நடக்கல; போட்ட திட்டங்களும் வீணாயிடிச்சி.” -‘சோகப்பந்து’ அவர் தொண்டையை அடைக்கப் பேச்சிழந்து நீண்ட பெருமூச்செறிந்தார். 

“உலகில் எல்லா உயிர்களும் சந்தோசமா வாழட்டும்னுதான் படைச்சேன். ஆனா, வலிய உயிர்கள் எளிய உயிர்களைத் துன்புறுத்திட்டே இருக்கு. செத்த பிண்டங்களுக்குப் பதிலா உயிருள்ள ஜீவன்களையே ருசிச்சிச் சாப்பிடக் கத்துகிட்டதுங்க.   அதைத் தடுத்து நிறுத்தி, பலவீனமான உயிரினங்களை மனுசன் காப்பாத்துவான்னு எதிர்பார்த்தேன். அவன் செய்யல. அத்தனை உயிர்களையும் ஒன்னு மிச்சம் வைக்காம அவனே தின்னு செரிக்க ஆரம்பிச்சுட்டான். இதுக்கு என் ஆசீர்வாதம் இருக்கிறதா எழுதிவெச்சிகிட்டுப் பரப்புரை வேறு பண்ணுறான்.”

சிறிய இடைவெளிக்குப் பின்னர் தொடர்ந்தார் இறைவன்: “இந்த ஆறாவது அறிவு வாய்ச்சதுக்கு அப்புறம்தான் அவன் சாவு பத்திச் சிந்தித்தான்; தான் எப்பவும் சாகக் கூடாதுன்னு பேராசைப்பட்டான். எப்பவும் சுகபோகத்திலேயே மிதக்கணும்னு கனவுகள் காண ஆரம்பிச்சான்; சொர்க்கம்னு ஒன்னு இருக்கிறதா கற்பனை பண்ணினான்; செத்த பிறகு அவனை அங்கே சேர்க்க வேண்டி என்னைத் துதி பாடினான்.......”

நீண்டதொரு வெப்பப் பெருமூச்சு வெளிப்பட்டது இறைவனிடமிருந்து.

இறைவி ஏதோ சொல்ல நினைத்தபோது, கை உயர்த்தி அவரின் குறுக்கீட்டைத் தவிர்த்தவர் தொடர்ந்து பேசினார்.

“எனக்குக் கோயில்கள் கட்டி, விழாக்கள் எடுத்து இன்னும் என்னவெல்லாமோ செய்தான்; செய்யுறான்.  நானென்ன இதுக்கெல்லாம் மசிகிற ஆளா!?” -அண்டசராசரங்கள் எல்லாம் அதிரும் வகையில் ஒரு வெடிச்சிரிப்பைப் பிரசவித்தார் இறைவன்.

“தன் மனசு சுத்தம் ஆகணும்னுதானே அவன் உங்களை வழிபடுறான். இதிலென்ன தப்பு?” -குறுக்கிட்ட இறைவி, குரலில் சற்றே ஆவேசம் காட்டினார்.

“மனசு தூய்மை அடையணும்னா மத்த உயிர்கள் துன்பப்படுறதைப் பார்த்து இரக்கப் படணும்; அதுகளுக்கு உதவணும். அதை விட்டுட்டு, என்னைத் துதி பாடினா மனசு சுத்தம் ஆகும்கிறது சுத்தப் பொய்; பித்தலாட்டம்; புருடா; ஏமாத்து வேலை. பிரபஞ்சத்தைப் படைப்பது மட்டுமே என் வேலை. மகான்கள்னு புகழப்பட்ட ஆளுங்க, “கடவுள் படைச்சதையெல்லாம் அவர்தான் பராமரிப்பார்; பாதுகாப்பார். அவர் கருணைக்கடல். கைகூப்பிய மனிதருக்கெல்லாம் கேட்டதைக் கொடுப்பார். அப்படி...இப்படி’ன்னு  கதை கதையா அடிச்சி விட்டுட்டாங்க. என்னைக் கும்பிட்டும் கஷ்டங்கள் தீராதபோது, கண்ட கண்ட கசமாலங்கள் எல்லாம் என்னைத் தாறுமாறாத் திட்ட ஆரம்பிச்சுட்டானுக. அவனுக தாக்குதலிலிருந்து தப்பிக்க எந்தவொரு வழியும் எனக்குத் தென்படல.....”

இப்படியாக, இன்னும் எப்படியெல்லாமோ மனித இனத்தைச் சாடி முடித்த இறைவன் வெகுவாக மனம் சோர்ந்துபோனார்; துவண்டு சரியலானார்.

அவரைத் தாங்கிப்பிடித்த இறைவி, “மனுசங்ககிட்ட இருந்து ஆறாவது அறிவைப் பறிச்சிடப் போறீங்களா?”  என்று சந்தேகம் கிளப்பினார். 

சற்றே மனம் தேறியவராகக் காட்சியளித்த இறைவன், ஒரு மர்மப் புன்னகையை வெளிப்படுத்தினார்; சொன்னார்: “இவனுகளுக்குள்ளே பல இனங்கள்; பல மதங்கள்னு எத்தனை எத்தனையோ பிரிவுகள் இருக்கு; பிளவுபட்டுக் கிடக்குறானுக. ஆதிக்கப் போட்டியில் அடிக்கடி சண்டை போட்டுக்கிறானுங்க. ஆறாவது அறிவைப் பயன்படுத்தி எக்கச்சக்கமா அழிவுக் கருவிகளைக் கண்டுபிடிச்சி வெச்சிருக்கானுங்க. இவனுங்க திருந்தப் போறதில்ல. ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிகிட்டு அவ்வளவு பேரும் அழியப் போறானுக. மனுச இனம் பூண்டற்றுப் போகப்போகுது. ஆறாவது அறிவை நான் பறிக்க வேண்டாம். அதுவாகவே பறிபோயிடும். அழிவும் நிச்சயம்.”

சொல்லி முடித்து வாய்விட்டுச் சிரித்தார் இறைவன்; சிரித்துக்கொண்டே இருந்தார். எல்லையற்று, வெகு பிரமாண்டமாய்ப் பேரதிசயமாய்ப் பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சக்கோளம் கிடுகிடுத்தது; அதிர்ந்து குலுங்கியது; குலுங்கிக் கொண்டே இருந்தது.

***********************************************************************************************************************