தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Nov 25, 2016

வெங்காய விதி!!!

ஆகம விதிகளை மீறினால் ஆபத்து நேருமா? யாருக்கு?  ஆளுபவருக்கா, நாட்டுக்கா, கடவுளுக்கா?! கொஞ்சம் யோசனை பண்ணுங்கய்யா.

#திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் 108 வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11.30 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். இந்த நேரத்தில் மட்டும்தான் கோயிலில் மூலவருக்கு 5 கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. அந்த நேரத்தில் மற்ற யாக பூஜைகள், அதுவும், நல்ல நேரம் பார்த்துதான் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி.

ஆனால், கோயில் நடை சாத்தப்பட்ட பிறகு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில்  ஆகம சாஸ்திர விதிமுறைகளை மீறி மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோயில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, கூடுதல் ஆணையர் கவிதா,  ஜோதிடர் ஒருவர், பட்டாச்சாரியர்கள் ஆகியோர் கோயில் நடையில் உள்ள சிறிய பாதையைத் திறந்து கோயிலுக்குள் சென்று யாக சாலை பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் நலம்பெற வேண்டி இந்தப் பூஜை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவில் 3 மணிவரை கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது.

கோயிலில் ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோயில் நடையைத் திறந்தது உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது மட்டுமின்றி நாட்டுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று பட்டாச்சாரியார்கள் தெரிவித்தனர்#

மேற்கண்டது, சற்று முன்னர் இன்றைய தினகரன்[25.11.2016] நாளிதழில் நான் படித்த செய்தி.
இதைப் படித்தவுடன் என் மனத்திரையில் ஓடிய எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

கடவுள் உண்டு என்று சொன்னவர்கள் மனிதர்கள். கோடி கோடியாய்ப் பணத்தையும் உடல் உழைப்பையும் வீணடித்துக் கோயில்களைக் கட்டியவர்களும் இவர்களே. தாங்களே எழுதி வைத்துக்கொண்ட வேத ஆகமங்களின் பெயரால்,  இன்ன இன்ன நேரத்தில் இன்ன இன்ன விதமாய்ப் பூஜைகள் நடத்தவேண்டும்; இன்ன இன்ன நேரத்தில்தான் கோயிலைத் திறக்க வேண்டும்; சாத்த வேண்டும் என்றெல்லாம் விதிகள் செய்ததும் இவர்களே. இந்த விதிகளை மீறுபவர்களும் இவர்களே.

இந்த விதி மீறல்களால் தலைவர்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளையும் என்று அபாயச் சங்கு ஊதுவோரும் இவர்களே.

என்ன கூத்துடா இது!

கடவுளின் பெயரால் இவர்கள் நடத்தும் கூத்துகளால் தலைவர்களுக்குக் கேடு விளையுமோ இல்லையோ, மக்களின் சிந்திக்கும் அறிவு சிதைக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை சீரழியும் என்பது சர்வ நிச்சயம்.
***********************************************************************************************************************