தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு பேசி... வாழ்ந்த...வாழும் தமிழ் மன்னர்களோ மக்களோ, ‘தமிழன்’ என்னும் உணர்வுடன் ஓர் இனத்தவராக ஒரு போதும் ஒன்றுபட்டு வாழ்ந்ததில்லை!!!
மாறாக, சேரர் குடியினர், சோழர் குடியினர், பாண்டியர் குடியினர், வேளிர் குடியினர் என வேறு வேறு குடியினராகப் பிரிந்தும், பிளந்தும், பகைத்தும் நின்றனர். தமக்குள்ளே போரிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் அடுதலும் தொலைதலுமாக இருந்தனர்.
இவர்கள் வாழ்வில் சமயங்கள் ஊடுருவிய பிறகு சைன மதத்தார் எனவும், பௌத்த மதத்தார் எனவும், சைவ மதத்தார் எனவும், வைணவ மதத்தார் எனவும் மத அடிப்படையில் பிரிந்து நின்றனர்.
இவர்கள் வாழ்வில் சமயங்கள் ஊடுருவிய பிறகு சைன மதத்தார் எனவும், பௌத்த மதத்தார் எனவும், சைவ மதத்தார் எனவும், வைணவ மதத்தார் எனவும் மத அடிப்படையில் பிரிந்து நின்றனர்.
பிற்காலத்தில், இவர்களே இசுலாமியர், கிறித்தவர் என மாறுபட்டு வாழ்ந்தனர்.
பல்லவர் காலம் தொடங்கிச் சாதிப் பிரிவுகள் வலுப் பெற்றன. தமிழ் மக்கள் அனைவரும் பல்வேறு சாதிப் பாகுபாடுகளில் புதையுண்டனர்.
ஐரோப்பியரின் வரவும் உறவும் ஏற்பட்ட பிறகு காரல் மார்க்ஸ் கருத்து இங்கு பரவியது. சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய பொதுவுடைமை நாடுகளின் செல்வாக்கும் இணைந்து கொண்டது. இதன் விளைவாக, வர்க்க அடிப்படையில் மேல்தட்டு, நடுத்தட்டு, அடித்தட்டு என்று மக்கள் பிரிந்தனர்.
வெள்ளைக்காரனிடமிருந்து காப்பியடித்துக் கற்றுக்கொண்ட கட்சிவழி அரசியல் ஒன்றிப் பரவிய பிறகு அதே தமிழ் மக்கள் வேறு வேறு கட்சியினாராய்ப் பிரிந்தனர்.
இப்படிப் பிரிந்து வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்ட இவர்கள், தமிழர் என எக்காலத்தும் ஒன்று திரண்டு, தமிழினத்தின் தன்மானம் காக்கப் போராடியதில்லை என்பது என்றும் நீங்காத வேதனை தரும் உண்மை.
ஒரு மதத்தார் மறு மதத்தார்க்கும், ஒரு சாதியார் மறு சாதியார்க்கும், ஒரு கட்சியார் மறு கட்சியாருக்கும் குழி தோண்டிக் கொள்கின்றனர். அவர்கள் தோண்டிய குழியில் இவர்களும், இவர்கள் தோண்டிய குழியில் அவர்களும் என அனைத்துப் பிரிவுத் தமிழருமே விழுந்து மடிகின்றனர்.
புறச்சக்திகளின் தலையீடு இல்லாமலே தமக்குள் அடித்துக்கொண்டு அழிகின்றனர்.
தமிழினத்திற்கு இழிவு நேரும்போது ஒன்று பட்டுப் போராடும் போர்க்குணம்
இல்லாததால்தான், தமிழன் பல்வேறு வந்தேறிகளுக்கும் அடிமையாக வாழ்ந்திருக்கிறான்; வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர் ஆண்ட காலம் 147 ஆண்டுகள் [1801-1947] ஆகும்.
330 ஆண்டுகள் இந்தியா முழுமையும் ஆண்ட டில்லி சுல்தானியர் தமிழகத்தை மட்டும் ஆண்ட காலம் சுமார் 50 ஆண்டுகள்.
விஜய நகர ஆந்திர நாயக்கர்கள் தமிழகத்தை ஏறத்தாழ 250 ஆண்டுகள் [1572-1736] ஆண்டிருக்கிறார்கள்.
{மதுரை நாயக்கர் வழி வந்த நாயக்கர்கள் தஞ்சையை 1532 முதல் 1765 வரை [233 ஆண்டுகள்] ஆண்டிருக்கிறார்கள்]
தஞ்சையை மராட்டியர் ஆண்ட து 179 ஆண்டுகள் [1676-1855].
ஆர்க்காட்டைத் [சென்னை] தலைநகராகக் கொண்டு வட தமிழ்நாட்டை இசுலாமிய நவாப்புகள் ஆண்டது 110 ஆண்டுகள் [1710-1820].
இவ்வாறாக, ஒரு காலத்தில், இமயத்தில் நம் கொடி நட்டு, கடாரம் வென்று [இது சோழர் காலம். அப்போதும் அந்தத் தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்] பெரும் நிலப்பரப்பை ஆண்ட தமிழினம் குற்றேவல் புரியும் இனமாக மாறிப்போனது மறுக்க முடியாத...நம்மால் மறக்க இயலாத கசப்பான வரலாற்று உண்மை........
..........தமிழனின் ‘அடிமைப் புத்திக்கு’க் காரணங்களாய் அமைந்தவை பல. அவற்றுள் தலையாயது ‘மத நம்பிக்கை’.
தமிழன் பின்பற்றிய மதங்கள் அனைத்தும் [புத்த மதம் விதிவிலக்கு] விதியையும் அடுத்தடுத்த பிறவிகளையும் நம்பியவை. நிகழ்கால வாழ்வில் தாம் படும் துன்பங்களுக்குக் கர்மாவும் கடவுளுமே [சமணம், கடவுளை மறுத்து ஆன்மாவை முதன்மைப்படுத்துகிறது. புத்தர், கடவுள் பற்றி ஏதும் சொல்லவில்லை] காரணம் என்று எண்ணியவை.
‘மனிதப் பிறப்பின் இலக்கு, இறைவன் திருவடியைச் சேர்தலே’ என்று வலியுறுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டவை.
இவை, தமிழ், தமிழர் என்ற எல்லைகளைக் கடந்து, மதத்தை அவன் மனதில் புதைத்து தமிழ் உணர்வையும் தமிழன் என்னும் இன உணர்வையும் மழுங்கடித்துவிட்டன.
இவ்வாறு, இன உணர்வு மழுங்கடிக்கப்பட்டதாலேயே மிக எளிதாக மற்ற இனத்தவர்க்குத் தமிழன் அடிமை ஆகிப்போனான்.
கல்விக் கூடங்கள் நிறுவுவதையும் கல்வியின் மீதான பற்றுதலை வளர்ப்பதையும் விடுத்து, கோயில்களை எழுப்புவதிலும், பக்தியை வளர்ப்பதிலும் தமிழ் மன்னர்கள் காட்டிய அக்கறையும் கூட அவர்களின்...அவர்களைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் இனப்பற்று மழுங்குவதற்குக் காரணமாய் அமைந்துவிட்டது.
3ஆம் நூற்றாண்டு தொடங்கித் தமிழகத்தின் மீது பிற இனத்தவரால் பல்வேறு படையெடுப்புகள் நிகழ்ந்த போதெல்லாம், தமிழ் நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களிடமிருந்து போதிய எதிர்ப்பு இல்லாத காரணத்தால், போருக்குச் சற்றும் தொடர்பில்லாத பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
மிகக் கடுமையான மதமாற்றங்கள் வாள் முனையில் நிகழ்த்தப்பட்டன.
குழந்தைகளைக் கடத்திச் சென்று மதமாற்றம் செய்வதும், கோயில் சிலைகள் உடைக்கப்படுவதும், சிலைகள் கடத்தப்படுவதும் நிகழ்ந்தன. இத்தனை கொடுமைகளையும், ஆயிரக்கணக்கில் மக்கள் மடியும் வகையில் பஞ்சங்கள் ஏற்பட்டதையும், உயிரைக் கொள்ளை கொள்ளும் நோய்களின் தாக்குதல்களையும் தாம் நம்பும் மதங்களும் கடவுளும் ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்பதைச் சிந்திக்கத் தவறிவிட்டனர் தமிழ் மக்கள்.
எல்லாவற்றிற்கும் தம் கர்ம வினையே காரணம் என்பதை நம்பிய அவர்கள் எல்லை கடந்த பக்தி என்னும் சகதியிலிருந்து மீண்டெழும் முயற்சியில் ஈடுபடவே இல்லை.
ஆக, எல்லாம் மதங்கள் பார்த்துக் கொள்ளும்; கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற அபிரிதமான நம்பிக்கையே தமிழினம் தொடர்ந்து அடிமைப்பட்டுக் கிடந்ததற்கான...கிடப்பதற்கான காரணமாய் அமைந்துவிட்டது.
* * *
இது ஒரு ‘மீள் பதிவு.
*****************************************************************************************************************************************************
தமிழறிஞர், டாக்டர் க.ப. அறவாணன் [மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்] அவர்கள் எழுதிய, ‘தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?’ என்னும் நூலிலிருந்து [தாயறம் பதிப்பகம், திருச்சி. முதல் பதிப்பு:டிசம்பர் 2002] தொகுக்கப்பட்டது இப்பதிவு.
அறிஞர் அறவாணன் அவர்களுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக