வியாழன், 24 செப்டம்பர், 2015

அழிந்துகொண்டிருக்கும் தமிழும் அதிரவைக்கும் தமிழ்ப்பதிவர் திருவிழாவும்!


தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது.....வெகு வேகமாக!

'இந்தக் கல்வியாண்டில், தமிழில் பயின்றவர்களில் மிக மிகக் குறைந்த மாணவர்களே[மூன்று பேர்?} மருத்துவப் படிப்பிற்குத்  தேர்வு பெற்றார்கள்’[காரணங்கள் ஆய்வுக்குரியவை] என்னும் ஒரு செய்தி போதும் இதை உறுதிப்படுத்த.

ஆங்கிலத்தில் படித்தால்தான் பிற மாநிலங்களிலோ பிற நாடுகளிலோ வேலை தேட முடியும்’ என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள். 

இது முழுக்க முழுக்கத் தவறான நம்பிக்கை என்று சொல்லிவிட முடியாது. காரணம், அயல் மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் ஆங்கிலவழிப் படிப்பின் மூலம் வேலை தேடிப் பிழைப்பு நடத்தும் தமி்ழர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

இவர்கள் மிகச் சிறுபான்மையினரே என்பதைப் புள்ளிவிவரங்கள் சேகரித்து வெளியிடுவதன் மூலம் மக்களின் ஆங்கில மோகத்தைக் குறைக்க அரசு முயற்சி செய்யலாம். அம்முயற்சி ஆளுவோரால் ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தும் உண்மை.

போதிய தரமான நூல்களை வெளியிடும் முயற்சியை மேற்கொள்ளாமலே, அறிவியல் கல்வியைத் ‘தமிழில் கற்பிக்க நூல்கள் இல்லை’ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

இம்மாதிரி நூல்களைத் தனியார் புத்தக நிறுவனங்கள் வெளிடுவதும் பொருளாதார ரீதியாக சாத்தியம் இல்லை. 

எது எப்படியோ, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழ்வழிக் கல்வி என்பது வெறும் பகற்கனவாய் ஆகிப்போனது.

இந்த அவல நிலை மாறுமா? 

இணையத்[வலைத்] தமிழ்ப் பதிவர்கள் மனம் வைத்தால் மாறக்கூடும்.

ஆங்கிலம் அறிந்த தமிழ் ஆர்வலர்கள்,  அறிவியல் தொழில்நுட்பம் அறிந்த நண்பர்களுடன் இணைந்து தரமான கட்டுரைகளை இணையத்தில் பதிவு செய்யலாம். சிலரோ பலரோ இணைந்து பிற துறை சார்ந்த கட்டுரைகளை வெளிடுவதும் சாத்தியமே.

எந்தவொரு துறை சார்ந்த தகவலையும் இணையத்தில் தமிழ் வாயிலாகப் பெற இயலும் என்னும் நிலை உருவாகிவிட்டால், போதிய ஆங்கில அறிவு இல்லாத மாணவர்கள்[இவர்களே பெரும்பான்மை] தமிழ்ப் பதிவுகளைத் தேடிப் படித்துப் பயன்பெறுவார்கள்.


தமிழில் கற்பதோடு ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்வதன் மூலம் பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் வேலை தேடிக்கொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொள்வார்கள். காலப்போக்கில், பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் இது புரிந்துவிடும்.

அதன்பின்னர் பெற்றோர்களிடமும் பிள்ளைகளிடமும் தமிழ்மொழியைக் கொண்டுசேர்க்கும் முயற்சி தேவையற்றுப்போகும். அவர்களாகவே தாய்மொழியாம் தமிழின் அவசியத்தைப் புரிந்துகொண்டு அதைத் தேடி வருவார்கள்.

இந்நிலை உருவானால், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழைப் பயிற்றுமொழியாக்கும் முயற்சியில் அரசு தயங்காமல் ஈடுபடக்கூடும்

‘பல்வேறு துறைகளில் ஆற்றல் உள்ளவர்களை அந்தந்தத் துறை சார்ந்து தமிழில்  எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும் என்பதைச் சந்திப்பின் முக்கிய  குறிக்கோளாகக் கொள்ளலாம். இணையத்தில்  தமிழின் பங்களிப்பை அதிகமாக்க வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் தகவல்களைத்  தமிழில் தேடிப் பெற முடியும் என்ற நிலை உருவாக வேண்டும். பொழுதுபோக்கு மட்டுமல்லாது அறிவியல் கலை, பண்பாடு, வரலாறு, வாழ்வியல் , அரசியல், ஆய்வுகள்  என்று எல்லாத் தளங்களிலும் இப்போதுள்ளதை விடப் பல மடங்கு அதிக அளவில் உள்ளடக்கம் காணக் கிடைக்க வேண்டும். இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டை எந்த அளவுக்கு அதிகரிக்க முடியுமோ அந்த அளவுக்கு அதிகரிப்பதற்கு அடித்தளமாக வலைபதிவர் சந்திப்பைப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் எனபது தமிழை நேசிக்கும் பலரது விருப்பம் என்றால் மிகையாகாது’.....‘புதுக்கோட்டையில் மையம் கொண்டுள்ள புயல்என்னும் தலைப்பிலான தன் பதிவில்  டி.என்.முரளிதரன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.

‘இம்மாதிரி நிகழ்வுகளைப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்; வலைப்பதிவர் கையேட்டை நூலகங்களில் சேர்ப்பதன் மூலம் இளைஞர்களை வலைப்பதிவுகள் பற்றி அறியச் செய்யலாம்’ என்பதான கருத்துகளை முன்வைத்திருக்கிறார் மதுரைத் தமிழன் அவர்கள்.

‘இணையத்தில் பொழுதுபோக்குபவர்கள் எல்லாம் கணினித் தமிழால் நாளைய உலகைப் புரட்டிப் போடுபவர்கள் எனும் எண்ணத்தை நாம் போட்டி அமைப்பாளர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்’ என்கிறார் அ.பாண்டியன் அவர்கள்.

'பிறமொழிகளுடன் ஒப்பிடும்போது இணையத்தில்  சொந்தமாகத் தமிழில் தட்டச்சு செய்து ஒரு செய்தியை வெளியிடுபவா்களைவிட காப்பி, பேஸ்ட் செய்து வெளியிடுபவா்களே அதிகமாக உள்ளனா். அதனால் பிற மொழிகளுக்கு இணையாக விக்கிப்பீடியா போன்ற தளங்களில் தமிழ்க்கட்டுரைகள் குறைவாகவே உள்ளன' என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் முனைவர் குணசீலன் அவர்கள்.

இவர்கள் தவிர இன்னும் பல பதிவர்களும் தங்களின் உயரிய கருத்துகளை முன்வைத் திருக்கிறார்கள்.

அனைத்து ஆலோசனைகளையும் மனதில் இருத்திப் பதிவர் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்க முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஒருங்கிணைப்பாளர் நா.முத்துநிலவன் அவர்களும், திண்டுக்கல் தனபாலன் அவர்களும், விழாக் குழுவினரும். அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

'தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்' என்னும் அமைப்புடன் இணைந்து போட்டிகளை அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க செயல்.
இது, தமிழ்வழிக் கல்வியின்மீது  கவனம் செலுத்தத் தமிழ்நாடு அரசைத் தூண்டும்; தமிழில் தரமான பதிவுகள் வெளிவரக் காரணமாகவும் அமையும்.

எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக, புதுக்கோட்டையில் தமிழ்ப்பதிவர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற அனைவரும் மனப்பூர்வமாக வாழ்த்துவோம்.
வாழ்த்துகள். நன்றி.
=====================================================================================================================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக