வேலை கேட்டு வந்த சிறுவனிடம், “டேபுள் கிளீன் பண்ணனும். தரையைக் கூட்டித் துடைக்கணும். சொல்ற வேலையை முகம் சுழிக்காம செய்யணும். என்ன?” என்றார் ஓட்டல் உரிமையாளர் செல்வம்.
“சரிங்கய்யா.”
“எந்த ஊரு?”
“கீரனூருங்க. அப்பா செத்துப் போயி ஆறு மாசம் ஆச்சு. அம்மாவுக்குக் கூலி வேலை. அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடும். ஒரு தங்கச்சிப் பாப்பாவும் இருக்கு. அம்மாவுக்கு ஒத்தாசை பண்ணனும்னு பிளஸ் டு படிப்பைப் பாதியிலேயே விட்டுட்டு வேலை தேடி வந்தேன்” என்றான் சிறுவன்.
“பாதியில் ஓடிட மாட்டியே?”
“மாட்டேங்க.”
“இங்கேயே தங்கிக்க. மூனு வேளையும் வயிறாரச் சாப்பிட்டுக்கோ. சம்பளம் எவ்வளவுன்னு அப்புறம் சொல்றேன்” என்றார் செல்வம்.
“ஐயா வந்து.....”
“தயங்காம சொல்லுப்பா.”
“நம்ம கடையில் மதியச் சாப்பாடு எவ்வளவுங்க?”
“அம்பது ரூபா.”
“எனக்குக் காத்தாலயும் ராத்திரியும் சாப்பிட்டாப் போதும். என் மதியச் சாப்பாட்டுக்கான அம்பது ரூபாயை மாசச் சம்பளத்தோட சேர்த்து நீங்களே என் அம்மாவுக்கு அனுப்பிடுங்கய்யா.”
மனம் நெகிழ்ந்தார் செல்வம். “ரொம்பப் பாசம் உள்ள புள்ளயா இருக்கே. மதியம் பட்டினி கிடக்க வேண்டாம். சாப்பிட்டுக்கோ. நான் உனக்குத் தரப்போற சம்பளத்தோட கண்டிப்பா அம்பது சேர்த்து அனுப்பிடுறேன். ரொம்பப் பசியோட இருப்பே. போய்ச் சாப்பிடு” என்று பரிவுடன் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் செல்வம்.
=============================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக