மண்டைக்குள் இருக்கும் நம் மூளை, வெள்ளை மற்றும் க்ரே வண்ணப் பொருளால் ஆனது. நம் உடல் உறுப்புகளைக் கட்டுப்படுத்துவதோடு, நம்மைச் செயல் புரிய வைப்பதும் அதுதான் என்பது நமக்குத் தெரியும்.
மனம்?
''அறிவு சொல்லுது. மனசு வேண்டாம்னு அடம்பிடிக்குதே'' என்பது போல, பேச்சு வழக்கில் அடிக்கடி மனம் என்று ஒன்று இருப்பதாகக் காட்டிக்கொள்கிறோம். ஆனால்.....
அது நம் உடம்புக்குள் எவ்விடத்தில் இருக்கிறது? அதன் வடிவமைப்பு எத்தகையது? என்பன போன்ற கேள்விகளுக்கு நம்மில் எவருக்கும் விடை தெரியாது. 'நம்மில்' என்பதில் உடற்கூற்று அறிஞர்களும், அதாவது விஞ்ஞானிகளும் அடக்கம்.
மூளையைக் கம்ப்யூட்டருடன் ஒப்பிடுகிறார்கள்.
''மூளைதான் ஹார்டுவேர் என்று கொண்டால், அதை இயக்க, சாஃப்ட்வேர் வேண்டும். அது மனம் எனலாம். ஆனால், இரண்டில் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு உடம்பை இயக்க இயலாது; உடல் இயக்கத்திற்கு இரண்டும் தேவை'' என்று சொல்லி, மனம் என்று ஒன்று இருப்பதாக வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ''இதை நிரூபிப்பது அத்தனை எளிதல்ல'' என்று உறுதிபடச் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்வது; எண்ணுவது, எண்ணங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் சேமிப்பது; காதல், பயம், மகிழ்ச்சி, வெறுப்பு, சலிப்பு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது; தன்னுணர்வுடன்[கான்ஷியஸ்] செயல்படுவது என்று எல்லாவற்றிற்கும் தூண்டுதலாக இருப்பவை மூளையில் உள்ள நியூரான்கள்தான் என்கிறார்கள்.
உண்மை இதுவாக இருக்கையில், ''மனம் என்ற ஒன்றின் தேவை என்ன?'' என்னும் கேள்விக்கு இன்றளவும் அறிவுபூர்வமான விடை கிடைத்திடவில்லை என்பது அறியற்பாலது.
மனத்தின் மீதான நம்பிக்கை கி.மு.300இல் வாழ்ந்த அரிஸ்டாட்டில் காலத்துக்கு முன்பிருந்தே இருந்திருக்கிறதாம்.
அரிஸ்ட்டாட்டிலும் பிளேட்டோவும் மனம் என்பது உடம்புக்கு வெளியே உள்ள ஒன்று என்று நம்பினார்களாம். அரிஸ்டாட்டில் தன் நூலில், 'மனிதன் பிறக்கும்போது வெற்றுப் பலகை போல் பிறக்கிறான். அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகள் அவனுள் மனதை உருவாக்குகின்றன' என்று குறிப்பிட்டிருக்கிறாராம்.
இன்றைக்கும் மருத்துவ உலகில், மனம் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ. உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்தித் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன.
ஆய்வுகள் தொடர்கின்றனவே தவிர, இன்றளவும் மனம் என்ற ஒன்று நம் உடலுக்குள் பதுங்கி அல்லது ஊடுருவியிருப்பது உறுதி செய்யப்படவில்லை. எது எப்படியோ.....
நம்மை இயக்குவது மூளையோ மனமோ எதுவாக இருப்பினும் நல்லவை நினைந்து, நல்வினை ஆற்றி இயன்றவரை நல்லவர்களாக வாழ்ந்து முடிப்போம்.
=================================================================================
ஆய்வுகள் தொடர்கின்றனவே தவிர, இன்றளவும் மனம் என்ற ஒன்று நம் உடலுக்குள் பதுங்கி அல்லது ஊடுருவியிருப்பது உறுதி செய்யப்படவில்லை. எது எப்படியோ.....
நம்மை இயக்குவது மூளையோ மனமோ எதுவாக இருப்பினும் நல்லவை நினைந்து, நல்வினை ஆற்றி இயன்றவரை நல்லவர்களாக வாழ்ந்து முடிப்போம்.
=================================================================================
உதவி: 'மூளை', விகடன் பிரசுரம், முதல் பதிப்பு: டிசம்பர், 2016.