சனி, 21 ஏப்ரல், 2018

நம்ம ஊர்ப் பொதுஜனங்களின் யோக்கியதை!!!

சென்னை அண்ணா நகர்.

வயிற்றுவலியால் துடிக்கிற பெண்ணை அழைத்துவருவதாகச் சொல்லிச் சென்ற ஒரு நபருக்காக, இரவில் தன் மருத்துவமனையில் காத்திருக்கிறார் மருத்துவர் அமுதா.

சில நிமிடங்களில் அவன் வருகிறான்...பெண்ணுடன் அல்ல; கையில் கத்தியுடன். அவனின் முகத்தை மறைத்திருக்கிறது கைக்குட்டை. மருத்துவரை அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு ஓடுகிறான்.

அறையிலிருந்து வெளியே வந்து, நகை பறிக்கப்பட்டதைச் சொல்லி மருத்துவர் அலற, அலறல் ஓசை கேட்டு ஏ.சி.மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் சூர்யா, திருடன் ஓடுவதைக் கவனிக்கிறான்; கூச்சல் கேட்டுத் திரண்டிருந்த பொதுஜனங்களை, ''அதோ ஓடுறான் திருடன். வாங்க விரட்டிப் பிடிக்கலாம்'' என்று அழைக்கிறான்.

நம்ம பொதுஜனங்களில் ஒருவர்கூட அவனின் அழைப்பைக் கண்டுகொள்ளவில்லை; அவர்களில் கணிசமானவர்கள் தத்தம் செல்ஃபோன் கேமராவில், அந்த அரிய காட்சியை வீடியோ எடுக்கிறார்கள்.

சிறுவன் சூர்யா திருடனை விரட்டுகிறான். அவனோ.....

இவனின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, தங்கச் சங்கிலியின் ஒரு பகுதியை மட்டும் துண்டித்துக் கீழே எறிந்துவிட்டு ஓடுகிறான்.

புத்திசாலி சூர்யா, தரையில் கிடக்கும் சங்கிலியைக் காலால் இடறி, லாவகமாகப் பிடித்து எடுத்துக்கொண்டு கள்வனை நெருங்குகிறான்.

அவன் இவனைக் கல் எடுத்துத் தாக்குவதற்கு முயல, இவனோ அவன் முகத்தில் கனமானதொரு குத்து விடுகிறான். நிலைகுலைந்து தரையில் சாய்ந்து விழுகிறான் திருடன். பறிக்கப்பட்ட நகை மீட்கப்படுகிறது.

சென்னைக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், சிறுவனைப் பாராட்டிச்  சான்றிதழ் வழங்கியதோடு ஊடகங்களுக்கும் இது குறித்துத் தெரிவிக்கிறார்.

தமிழ் நாளிதழ்களில் ஒன்றான காலைக்கதிர்[20.04.2018] இச்செய்தியை விரிவாக வெளியிட்டிருந்தது.

இதை உங்களில் பலரும் ஊடகங்களின் வழியாக அறிந்திருக்கக்கூடும்.

பொதுமக்களின் சுயநலப் போக்கு குறித்த, சிறுவனின் மனவருத்தம் மறத்தற்கரிய ஒன்று.

அவன் சொல்கிறான்[பதிவின் முக்கிய நோக்கமும் இதைப் பதிவு செய்வதுதான்].....

தொட்டதுக்கெல்லாம் பொதுஜனம் பாதிக்கப்படுவாங்கன்னு குரல் கொடுக்கிறோமே, அந்தப் பொதுஜனத்தின் யோக்கியதை இதுதாங்க!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவர் 'ஜோதி', மேற்கண்ட வீடியோவைத் தனிப்பதிவாக வெளியிட்டிருக்கிறார். இந்நிகழ்வின் முக்கியத்துவம் கருதி இப்பதிவு வெளியிடப்படுகிறது.