அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 26 ஏப்ரல், 2018

ஆட்சியாளர்களின் அதீத பக்தியும் சாமியார்களின் 'சல்லாப' புத்தியும்!!

சாமிகளை[கடவுள்]ப் பார்த்தவன் எவனும் இல்லை என்பதால்,  நெடு நெடு தலைமுடியுடன், முகம் முழுக்கத் 'தாடி மீசை' வளர்த்தவனெல்லாம் இங்கே சாமியாராக மட்டுமல்ல, 'சாமி' யாகவும் ஆக முடிகிறது; சம்பாதிக்க முடிகிறது; மனம்போன போக்கில் சல்லாபிக்கவும் முடிகிறது!

நம் ஆட்சியாளர்களுக்குச் சாமியார்களென்றால் அளப்பரிய பயபக்தி. இதன் விளைவு.....

சாமியார்களால் நிர்வகிக்கப்படும் ஆசிரமங்களுக்கு ஏராள சலுகைகள். அங்கே கண்மூடித்தனமான பழக்கவழக்கங்கள், காமக்களியாட்டங்கள், தவறான வழிகளில் சொத்து சேர்த்தல் என்று 'பலவும்' நடக்கும். காவல்துறையோ, வணிகவரித் துறையோ, வருமானவரித் துறையோ கண்டுகொள்வதில்லை.

ஏனைய கடமைகளை மறவாமல் செய்கிறார்களோ  இல்லையோ, அவ்வப்போது இந்தச் சாமியார்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றிட நம்மை ஆள்பவர்கள் தவறுவதே இல்லை.
சிறுமியைப் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ''ஆசாராம் பாபு'[26.04.2018 ஊடகச் செய்தி]வுக்கு இப்போது வயது 77. 

40 ஆண்டுகளாக ஆசிரமம் நடத்தி 10,000 கோடி மதிப்புள்ள சொத்துச் சேர்த்திருக்கிறான் இவன்.  இவனின் ஆசிரமத்தில் தங்கிப் பயின்றுவந்த ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 2013இல் தொடுக்கப்பட்ட வழக்கில் இவனைக் குற்றவாளி என்று ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துத் தண்டனையும் வழங்கியிருக்கிறது.

77 வயதில்தான் இந்தப் போலிச் சாமியார் தண்டிக்கப்பட்டிருக்கிறான். இதற்கு முன்பாக இதுபோன்ற, இதனைவிடவும் கீழ்த்தரமான பல குற்றங்களை நிச்சயம் இவன் செய்திருப்பான். அவற்றிற்கான அத்தனை தண்டனைகளிலிருந்தும் இவன் தப்பியிருக்கிறான. காரணம், நம் ஆட்சியாளர்களின் சாமியார் பக்தி.

ஏற்கனவே, கற்பழிப்புக் குற்றச்சாட்டில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவன்  அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரேதேசங்களில் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தை நடத்திவந்த  50 வயதான சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்23 வயதிலேயே ஆசிரமத்தின் தலைவனாகப் பொறுப்பேற்றவன் இவன். பொறுப்பிலிருந்த 27 ஆண்டுகளில் பல குற்றங்களை இவன் இழைத்திருக்க வாய்ப்புள்ளது. அவற்றிற்கான தண்டனைகளிலிருந்து இவனைத் தப்பிவிட அனுமதித்தது, மேன்மை தங்கிய நம் ஆட்சியாளர்களின் கரை கடந்த  பக்தியுணர்வு.

'கங்காநந்தா தீர்த்தபதா', என்பவன், கேரள மாநிலம், கொல்லம் நகரில் தன்னைக் கடவுளாகக் கூறிக்கொண்டு பரப்புரை செய்தவன். தக்க தருணத்தில் இவனைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தால், இவன் சட்டக்கல்லூரி மாணவி ஒருத்திக்குப் பரிகாரம் செய்வதாகச் சொல்லி  ஏமாற்றி, 5 ஆண்டுகள் அவளைப் பலாத்காரம் செய்தது நடந்திருக்காது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சாமியார் மெகந்தி காசிம். இவன் 7 சிறுமிகளைப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை நீதிமன்றம் இவனுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் குணமாக்குவதற்காகவும் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் சிறப்புப் பூஜை செய்வதாகச் சொல்லிப் பல சிறுமிகளைப் பலாத்காரம் செய்தவன் இவன். முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் பல ஆண்டுகள் இம்மாதிரி ஈனச் செயல்களில் இவன் ஈடுபடுவதற்கான வாய்ப்பு நேர்ந்திருக்காது.

கேரளாவைச் சேர்ந்த சாமியார் சந்தோஷ் மாதவன் என்ற சுவாமி அமிர்தா சைதன்யா. இவன் கடந்த 2009ஆம் ஆண்டு 3 சிறுமிகளைப் பலாத்காரம் செய்த  குற்றத்துக்காக நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டவன்; ஏழைக் குடும்பங்களில் இருந்து சிறுமிகளைப் படிக்க வைப்பதாகக் கூறி அழைத்து வந்து பலாத்காரம் செய்தவன். இம்மாதிரிக் குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகுவதற்கும் குற்றங்கள் நடைபெறுவதற்கும் ஆட்சியாளர்களின் சாமியார்களின் மீதான அளவு கடந்த மதிப்பும் மரியாதையுமே காரணம் ஆகும்.

இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தா  கடந்த 1984ஆம் ஆண்டு திருச்சியில் ஆசிரமம் தொடங்கினான். அந்த ஆசிரமத்தில் பணியாற்றிய ஒரு பெண் பிரேமானந்தா தன்னைப் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாகப் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு நடந்த விசாரணையில், 13 சிறுமிகளைப் பலாத்காரம் செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றான். ஏறத்தாழப் பத்தாண்டுகள் பலாத்காரச் செயல்களில் ஈடுபட்டருக்கிறான். இவனைப் போன்றவர்களின் துணிச்சலான பாலியல் குற்றச் செயல்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது ஆட்சியாளர்களின் மேற்குறிப்பிட்ட  கண்டிக்கத்தக்க போக்குதான் காரணம்.

கர்நாடகத்தில் பிடரி எனுமிடத்தில் ஆசிரமம் நடத்தி வருபவன் சாமியார் நித்யானந்தா. இவன் மீதும் ஏராளமான பாலியல் புகார்கள் உள்ளன. நடவடிக்கை மட்டும் இல்லை. காரணம், மேற்கூறியதுதான்.

மேற்குறிப்பிட்ட சாமியார்கள் எல்லாருமே தொடர்ந்து பல ஆண்டுக்காலம் பலாத்காரச் செயல்களில் ஈடுபட்டவர்கள். ஆனால், புகார்கள் எழுப்பப்பட்ட பின்னரே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

இனியேனும், இம்மாதிரிக் குற்றங்களைத் தடுத்திட....

நாட்டிலுள்ள பல்துறை நிறுவனங்களையும் அமைப்புகளையும் காவல்துறையும் ஏனைய துறைகளும் கண்காணிப்பது போல, ஆசிரமங்களை அல்லது அவை போன்ற பிற அமைப்பகளைக்[எம்மதம் சார்ந்ததாயினும்] கண்காணிப்பதையும், தேவை எனில் சோதனை செய்வதையும் நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
*****************************************************************************************************