செவ்வாய், 24 ஏப்ரல், 2018

இவர்கள் வளர்ப்பது 'இந்தி'யை மட்டும்; இந்தியாவை அல்ல!!!

சீனா சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ''சீனர்கள் இந்திமொழி கற்க வேண்டும்'' என்று வற்புறுத்தியிருக்கிறார். இந்தியாவில் இந்தியைத் தவிர வேறு மொழிகளே இல்லையா?!
'இந்திய சீன உறவில் இந்தி மொழியின் பங்களிப்பு' என்னும் தலைப்பில் சீனாவில் நேற்று[23.04.2018] கருத்தரங்கு நடைபெற்றதாம்['தி இந்து' 24.04.2018]. அதில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார்.

இந்திதான் இந்தியாவின் 'உயிர் மொழி', 'உயர் மொழி' என்றால் இந்தியாவில் இந்தி பேசுகிறவர்கள் மட்டுமே உயர்வானவர்களா? மற்றவர்கள் நாலாந்தர, ஏழாந்தரக் குடிமக்களா?

இந்தி மொழி கற்ற சீன மாணவி ஒருவர் இந்தியா வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளாராம். அதற்கான ஏற்பாட்டை உடனே செய்யுமாறு அங்குள்ள இந்தியத் தூதருக்கு ஆணை பிறப்பித்தாராம் அமைச்சர். சீனாவில் உள்ள இந்தி பேசும் மேலும் 25 மாணவ மாணவிகளை இங்கு அனுப்பி வைக்கும்படிப் பரிந்துரை செய்திருக்கிறாராம்.

''சீனாவில், தமிழ் கற்ற அல்லது பிற இந்திய மொழி கற்ற மாணவர்கள் உள்ளனரா?'' என்று விசாரிக்கும் பரந்த மனம் அமைச்சருக்கு இல்லாமல் போனது ஏன்?

சீனர்கள், சீனாவில் திரையிடப்படும் இந்தி மொழிப் படங்களை, 'சப் டைட்டில்' மூலம் புரிந்துகொள்ள முயற்சிக்காமல், இந்தியைக் கற்றுக்கொண்டு படம் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார் மாண்புமிகு அமைச்சர்.

இந்தி தவிர மற்ற இந்திய மொழிப் படங்கள் சீனாவில் திரையிடப்படுவது உண்டுதானே? ''தேவைப்படும் பிற இந்திய மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்'' என்று சொல்லும் பெருந்தன்மை அம்மையாருக்கு இல்லை.

செல்லும் இடங்களில் எல்லாம், வாய்ப்பமையும் நேரங்களில் எல்லாம் இந்தி வளர்க்கும் நடுவணரசின் நடவடிக்கைகளைத்   தமிழர்களாகிய நாம் மட்டுமே அவ்வப்போது கண்டித்துக்கொண்டிருக்கிறோம்; போராடுகிறோம். மற்ற மொழிக்காரர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அது எதிர்காலத்தில் எத்தகைய விபரீத விளைவுகளை உண்டுபண்ணும் என்பதை அவர்கள் அறியாமலிருப்பது ஆச்சரியம்.

நம் மக்களைப் போலவே, இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற மாநில மக்களுக்கும் 'சொரணை' பிறக்காதவரை.....

இந்தி வெறியாட்டத்தை மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------