புதன், 11 ஏப்ரல், 2018

உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்களால் பயன் ஏதும் உண்டா?

'காவிரி நீர்' வழக்குத் தொடர்பான விசாரணையின்போது[09.04.2018], 'ஸ்கீம்' குறித்து நடுவணரசு மிகவும் தாமதமாக 'விளக்கம்' கேட்டதைச் சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
''ஆகா...உள்நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துவிட்டது'' என்று நம் அரசியல் தலைவர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். நீங்களும் நானும்கூட மகிழ்ந்தோம்.

கொஞ்சம் யோசித்தபோது.....

'உச்ச நீதிமன்றம் இவ்வாறு கண்டனம் தெரிவிப்பதால் பயன் ஏதும் உண்டா? அதாவது, அடுத்தடுத்துத் தெரிவித்தால், அக்கண்டனங்களால் நடுவணரசுக்கு ஏதும் பாதிப்பு உண்டா?' என்னும்  கேள்வி என்னுள் எழுந்தது.

'உண்டு' என்றால் நடுவணரசு தண்டிக்கப்பட வேண்டும். 

இது சாத்தியம் எனின்,  தண்டனையை வழங்குவது யார்?

குடியரசுத் தலைவர்தானே?

உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையைக் கலைத்திட குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கலாம்; வாய்ப்பு அமையுமெனின், பிறிதொரு கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பளிக்கலாம். அது சாத்தியப்படவில்லையெனில், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் புதிய தேர்தலுக்கு ஆணை பிறப்பிக்கலாம்[சட்ட ரீதியான பிற நடவடிக்கைகள் குறித்து எனக்கு ஏதும் தெரியாது].

குடியரசுத் தலைவரின் ஆணைக்கு ஆளும் கட்சி  கட்டுப்படுதல் வேண்டும். மறுத்தால் நடுவணரசுக்குரிய முழு அதிகாரத்தையும்[முப்படையையும் நிர்வகித்தல் உட்பட] குடியரசுத் தலைவர், தம்வசப்படுத்துவதன் மூலம் சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கையை எடுக்கலாம்.

ஆக, உச்ச நீதிமன்றம் என்னும் உச்ச அதிகாரம் படைத்த அமைப்பானது, தன் உத்தரவை நடுவணரசு நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தும்போது, அல்லது உத்தரவைக் கிடப்பில் போடும்போது அது தெரிவிக்கும் கண்டனம் அத்தியாவசியமானது என்பதும், அந்தக் கண்டனத்திற்கு உரிய பயன் விளைதல் முக்கியம் என்பதும் தெளிவாகிறது.  பயனேதும் விளைவதில்லை எனின்.....

அது தெரிவிக்கும் கண்டனங்கள் எல்லாமே வெற்றுச் சடங்குகள் என்றாகிவிடும்.
=================================================================================
முக்கிய குறிப்பு:

இந்திய அரசியல் சட்டம் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாதவன் நான். ஆர்வம் காரணமாக என்னுள் எழுந்த சந்தேகத்தைப் பதிவு செய்திருக்கிறேன். அரசியல் சட்ட அறிவு வாய்த்தவர்கள் இது குறித்துப் பதிவு எழுதினால் என் போன்ற பலருக்கும் அது பயன் தருவதாக அமையும். நன்றி.