புதன், 18 ஏப்ரல், 2018

சாத்தான் குறித்த கேள்வியும் ஐன்ஸ்டீனின் 'சொதப்பல்' பதிலும்!

ஒரு வகுப்பறை.

''உலகில் உள்ள அனைத்தையும் படைத்தவர் கடவுளா?'' -இது ஆசிரியரின் கேள்வி.

மற்ற மாணவர்கள் மௌனம் சுமக்க, ஒரே ஒரு மாணவன் மட்டும், ''ஆமாம்'' என்றான்.

ஆசிரியர், ''சாத்தானைப் படைத்தவரும் அவர்தானே?'' என்று அடுத்ததொரு கேள்வியையும் முன்வைத்தார்.

ஆசிரியரின் முதல் கேள்விக்குப் பதில் சொன்ன அதே மாணவன், ஆசிரியரின் 2ஆம் கேள்விக்கு நேரடியான பதில் தருவதற்கு மாறாக, ஆசிரியரிடம் கேட்டான்: ''குளிர்நிலை என்று ஏதேனும் உள்ளதா?''

''ஆமாம், குளிர் என்று ஒன்று உள்ளது.''

''மன்னிக்கவும், தங்களின் பதில் தவறானது. குளிர் என்று ஒன்று இல்லை. அது, வெப்பப் பற்றாக்குறையின் விளைவு. சராசரி வெப்பம் குறைவதைத்தான் குளிர் என்கிறோம்'' என்றான் மாணவன்.

இன்னொரு கேள்வியும் கேட்டான்; ''இருள் என்ற ஒன்று இருக்கிறதா?''

''ஆம்'' என்பது ஆசிரியரின் பதில்.

''மன்னிக்கவும். மீண்டும் தவறான பதில் தந்திருக்கிறீர்கள். இருள் என்ற ஒன்று இல்லை. ஒளியின் பற்றாக்குறையைத்தான் இருள் என்கிறோம். அது போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவும் இல்லை. கடவுள் மீது கொண்ட நம்பிக்கைப் பற்றாக்குறையின் காரணமாகத்தான் சாத்தான் இருப்பதாக நினைக்கிறோம்'' என்றான் மாணவன்.

அந்த மாணவன் ஐன்ஸ்டீன் என்று 'உங்கள் பாக்யராஜ் பதில்கள்'[பாக்யா வார இதழ், ஏப்ரல் 20 - 26, 2018] பகுதியில் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர் பாக்யராஜ்.
கடவுள் தொடர்பான ஐன்ஸ்டீனின் பதிலில் நமக்குச் சில சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

''சாத்தானைப் படைத்ததும் கடவுள்தானா?'' என்ற ஆசிரியரின் கேள்விக்கு, ''ஆம்'' அல்லது ''இல்லை'' என்று பதில் தருவது, மாணவப் பருவத்திலேயே அறிவியல் அறிவு பெற்றிருந்த ஐன்ஸ்டீனுக்கு அழகு. அருள்வடிவானவர் எனப்படும் கடவுளால் நன்மைகள் விளைகிறதென்றால், தீமைகள் விளைவது யாரால் என்பன போன்ற கேள்விகளை மனதில் பதிய வைத்து, முறையான ஆய்வுகள் மூலம், ஆதாரங்கள் காட்டி, 'கடவுள் உண்டு; சாத்தான் இல்லை'  என்று நிறுவுவதும் அவர்தம் கடமையாகும்.

[குளிருக்குக் காரணமான நீர், வெப்பத்திற்குக் காரணமான நெருப்பு போன்றவை மட்டுமல்லாது, அனைத்தையும் படைத்தவர் கடவுள் என்று சொல்லப்படுவதால், அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் ஆகிறார் அவர். அவரால் படைக்கப்பட்ட பொருள்களையோ, அவற்றின் செயல்பாடுகளையோ உதாரணமாக்கி அவரின் இருப்பு குறித்து ஆராய்வது ஏற்கத்தக்கது அல்ல].

அதோடுகூட, ஐன்ஸ்டீன் எடுத்தாண்ட ஒப்புமைகளிலும் குழறுபடிகள் உள்ளன.

வெப்பப் பற்றாக்குறை காரணமாகத்தான் குளிர் உணரப்படுகிறது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதை வைத்துக் குளிரே இல்லை என்று சொல்லிவிட இயலாது. வெப்பத்தை வெளிப்படுத்துகிற சூரியனை ஒத்த நெருப்புக் கோளங்கள் இடம்பெறாத இடங்கள் விரிந்து பரந்த வான வெளியில் இருக்கும்தானே? அங்கெல்லாம் குளிர் இருக்கத்தானே செய்யும். அப்புறம் எப்படிக் குளிர் என்ற ஒன்றே இல்லை என்றார் ஐன்ஸ்டீன்?!

வெப்பம் அதிகரிக்கும்போது குளிர் இல்லாமல் போவது போலவே, குளிர் அதிகரிக்கும்போது வெப்பமும் இல்லாமல் போகும் என்பதும் அறியத்தக்கது.

ஒளியின் பெருக்கத்தில் இருள் இல்லாமல் போகலாம். அதனால், இருளே இல்லை என்று ஆகிவிடாது. வரையறைக்குக் கட்டுப்படாத விண்வெளிப் பரப்பில் ஒளி, இருள், குளிர், வெப்பம் என்றிவை[யும்]  இடம்பெற்றுள்ளன. ஒன்று கூடும்போது, அதற்கு எதிர்மறையான தன்மை அல்லது குணம் கொண்ட பிறிதொன்று குறையும் அல்லது அப்போதைக்கு மறையும் என்பதே உண்மை. எதுவும் இல்லை என்று ஆகிவிடாது. எந்தவொரு அளவுகோலுக்கும் கட்டுப்படாத வெளிப் பரப்பில், ஒளி பரவாத இடங்கள் இருந்தே தீரும். அங்கெல்லாம் இருள் படர்ந்து கிடக்கும் என்பதை ஐன்ஸ்டீன் உணரத் தவறியது ஏன் என்று புரியவில்லை.

''குளிர் என்பது இல்லை; இருள் என்பது இல்லை'' என்றெல்லாம் மாணவ விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் குறிப்பிட்டதும் ஏற்கத்தக்கதாக இல்லை.

கடவுள் மீதான நம்பிக்கை குறையாமல் இருந்தால், அதாவது கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்தால் சாத்தான் இல்லை என்பது அறியற்பாலது என்ற அவரின் கூற்றும் ஏற்புடையதன்று. வாழ்வில் தீராத துயரங்களும் என்றும் மாறாத கொடூர நிகழ்வுகளும் நீடிக்கும்வரை சாத்தான் குறித்த எண்ணங்களும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
=================================================================================
பாக்யராஜ் அவர்களின் பதிலில் இடம்பெற்ற மேற்கண்ட உரையாடலை ஆதாரமாகக் கொண்டுதான் இப்பதிவு உருவாக்கப்பட்டது. உரையாடல் இடம்பெற்ற  மூலநூல் எது என்பதை நான் அறிந்திலேன். 

3 கருத்துகள்:

  1. பாவம் தான் சொல்லாத ஒன்றிற்காக ஐன்ஸ்டீன் காமெடி ரைட்டர் பாக்கியராஜாவால் இங்கே கேள்வி குறியவாராகிவிட்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உரையாடல் ஐன்ஸ்டீனின் வாழ்வில் இடம்பெறாதது என்றால், பதிவிட்டதற்காக மிகவும் வருந்துகிறேன்.

      இதை ஒரு பொழுதுபோக்குப் பதிவெனப் புறக்கணியுங்கள்.

      நன்றி...மிக்க நன்றி மதுரைத் தமிழன்

      நீக்கு
    2. நான் அதை வெரிபை பண்ணவில்லை ஆனால் பொதுவாக அறிஞர்களின் படத்தை போட்டு அவர் இப்படி சொன்னார் அப்படி சொன்னார என்று ப்ல நாளிதழ்களில் கட்டுகதை எழுதுகிறார்கள் இதுவும் அதில் ஒன்றாகத்தான் கருதுகிறேன் அவ்வளவுதான் பாக்கியாவில் வந்த செய்தியை நீங்கள் பகிரிந்து இருக்கிறீர்கள் அதற்ககாக மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம் உங்கள் தளத்திற்கு பல முறை வந்து இருக்கிறேன் ஆனால் அதில் கருத்து பெட்டி மூடி இருக்கும் ஆனால் இன்றும் நேற்றும் திறந்து இருந்ததினால் நேரமும் இருந்ததினால் கருத்தை இட்டு சென்றேன்..

      நான் ஈனையம் வருவதும் பதிவுகள் எழுதுவது பொழுது போகிற்காகத்தான்

      நீக்கு