மனிதர்களின் அதிகபட்ச வயது 100.
விதிவிலக்காகச் சிலர் நூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்ந்தார்கள்; வாழ்கிறார்கள்.
மனிதராகப் பிறந்த அனைவருக்குமே மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ ஆசைதான்[விடுபடவே இயலாத பெரும் துயரங்களுக்கு உள்ளாகிறவர்கள் விதிவிலக்கு].
அது இன்றல்ல, என்றென்றும் நிறைவேறாத ஆசை.
எவ்வளவு சிறப்பாக உடல் நலம் பேணினாலும் எப்போது மரணம் தம்மை ஆரத்தழுவும் என்பது எவருக்கும் தெரியாது.
மரணம் குறித்துக் கவலைப்படுவது வளரிளம் பருவத்தில் இல்லையென்றாலும், வயது ஆக ஆக அவ்வப்போது கவலைப்படுவதும், முதிர்பருவத்தில் அடிக்கடி கவலைப்படுவதும் தவிர்க்கவே இயலாதவை.
ஓய்வில்லாமல் உழைப்பது, பொதுத் தொண்டில் ஈடுபடுவது, கண்ட கண்ட கடவுள்களிடம் சரணாகதி அடைவது என்று எது எதற்கெல்லாமோ நம் நேரத்தைச் செலவழித்து மரண பயத்தை அண்டவிடாமல் விரட்டியடிக்க முயன்றாலும் அதில் முழு வெற்றி என்பது சாத்தியமே இல்லை.
உழைத்துச் சோர்ந்து ஓய்வெடுக்கும்போதும், நோயுற்று மன உளைச்சலுக்கு உள்ளாகும்போதும், வயது முதிர்வால் செயலிழந்து துவண்டு கிடக்கும்போதும் மரண பயத்தின் அளவு அதிகரிக்கும்.
ஆகவே, அதனோடு போராடி வெல்வது என்பது சாத்தியமே இல்லை.
அது சாத்தியம் இல்லையென்றாலும், மரண பயத்தால் ஏற்படும் வேதனையைக் குறைப்பது சாத்தியம்தான்.
வெற்றி காணும்போதெல்லாம், ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்காமல், அடுத்தடுத்து எதிர்கொள்ளவிருக்கும் சிறு சிறு தோல்விகளால்[மரணத்துடனான போராட்டத்தில் நாம் பெறும் தோல்வியோடு ஒப்பிடும்போது, இவற்றின் பாதிப்பு சற்றேனும் குறைவுதான்] ஏற்படும் வலியைத் தாங்குவதற்கு நம்மைப் பழக்கப்படுத்தலாம்; மனதில் வலிமை சேர்க்கலாம்.
தொய்வில்லாமல் தொடரும் முயற்சியாலும் பயிற்சியாலும் மரண பயத்தை நினைத்து அஞ்சுவதும், மரணத்தறுவாயில் பெரும் அல்லலுக்கு உள்ளாகி அலறித் துடித்துப் புலம்பி அழுவதும் வெகுவாகக் குறையும் என்று நம்பலாம்.
எதிர்பார்க்கும் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, ‘நல்ல நம்பிக்கை’யால் எவ்வகையிலும் தீமை விளையாது என்பது உறுதி!