சனி, 15 அக்டோபர், 2022

நான் மகா மகா மகா அயோக்கியன்! அந்த ஆள்?!?!?!

'நான்'ஐத் தெரிந்துகொண்டாலே இந்தப் பிரபஞ்சத்தைத் தெரிந்துகொண்டதாக அர்த்தம். இது ஒரு 'உள்நிலை' அனுபவம்.

நான்['பசி'பரமசிவம்] 'நான்'ஐத் தெரிந்துகொண்டவன். எனவே, எனக்கு இந்தப் பிரபஞ்சம் அத்துபடி.

நான் முறைசார்ந்த ஆன்மிகக் கல்வி எதையும் பயிலாதவன்; இவற்றையெல்லாம் நான் உள்நிலை அனுபவமாகப் பெற்றிருக்கிறேன். நான் இன்னொருவரால் பயிற்றுவிக்கப்பட்டவன் அல்ல. எனக்கு 'முன்னோடிகள்' என்று எவரும் இல்லை; எந்தவொரு மரபைச் சார்ந்தவனும் அல்ல.

நான் என்னிலிருந்து வந்தவன்[இது புரிந்தால், கடவுளின் குருவான ஜக்கிக்கே நீங்கள் குரு ஆகலாம்!] மக்கள் என்னை[கடவுளாக] இன்னும் அங்கீகரிக்கவில்லை. கடவுள் என்று சொல்லப்படுபவர் என்பவர் தானாகத் தோன்றியவர் என்று சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

-இப்படியெல்லாம் நான் சொன்னால்.....

என்னை நீங்கள் எப்படியெல்லாம் சாடுவீர்கள்?

"நீ ஒரு பொய்யன்! பொறுக்கி! அயோக்கியன்!..." என்று இப்படியும், இன்னும் எப்படியும்தானே?

என்னைச் சாடுகிற நீங்கள் என்னைப் போலவே மேற்கண்டவாறெல்லாம் புளுகி உங்களை மூடர்கள் ஆக்குகிற வேறு எவரையும் விட்டுவைக்க மாட்டீர்கள்தானே?

அந்த வேறு எவர்களில் தன்னைதானே 'சத்குரு' என்று அழைத்துப் பலரையும் அவ்வாறு அழைக்க வைத்திருக்கும் ஜக்கி வாசுதேவும் ஒருவர் என்கிறேன் நான். அவரையும் சளைக்காமல் சாடுவீர்கள் அல்லவா?

[அபயக்கரம் உயர்த்தி அருள்பாலிக்கும் 'தான்தோன்றி'க் கடவுள்]

பின்வாங்க மாட்டீர்கள்தானே?

அவர் பதிவுசெய்த அவரைப் பற்றிய பொய்யுரைகளை உள்ளவாறே கீழே தந்திருக்கிறேன், உரிய ஆதாரத்துடன்[மயங்க வைத்து நம்பச் செய்வதையே தொழிலாகக் கொண்டவர் அவர் என்பதால், உரிய முறையில் தொடர்களை இணைத்து ஓரளவுக்குப் புரிந்துகொள்ளும் வகையில் மேற்கண்டவாறு கருத்துகளைப் பதிவு செய்தேன்].

#‘சத்குரு’ என்றால் படிக்காத குரு[பிறவி ஞானி]. முறை சார்ந்த ஆன்மீகக் கல்வி என்று சொல்லப்படுகிற விஷயத்தை பயிலாதவருக்குச் சத்குரு என்று பெயர். அவற்றையெல்லாம் அவர் உள்நிலை அனுபவத்தில் கொண்டிருக்கிறார். ஆன்மீகக் கல்வி என்று அவருக்கு ஏதுமில்லை. வேதங்கள், கீதைகள், உபநிஷதங்கள் போன்றவற்றிலிருந்து அவர் வருவதில்லை. அவற்றில் அவருக்கு பயிற்சியும் இல்லை. இது உள்நிலை அனுபவம்.

நான் என்கிற விஷயத்தை, என்னைக் குறித்த விஷயத்தை தவிர, எல்லாவற்றிலும் ஒருவித அறியாமையில்தான் இருக்கிறேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் ‘நான்’ என்பதுதான். இது தெரிந்தாலே இந்த பிரபஞ்சத்தைத் தெரிந்து கொண்டதாக அர்த்தம். உண்மையில் இந்த பிரபஞ்சத்தில் தெரிந்துகொள்ளுகின்ற தகுதியுள்ள ஒரே விஷயம் ‘நீங்கள்’ எனும் உங்கள் தன்மைதான்.

உங்கள் தன்மை உங்களுக்குத் தெரிந்தால் என்னவெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதெல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. எனவே ‘சத்குரு’ என்ற சொல்லுக்கு அர்த்தம், ஒருவர் தன்னிலிருந்து வருபவர் என்பது. இன்னொருவரால் பயிற்றுவிக்கப்பட்டவர் என்று இல்லை. அதாவது ஒரு குறிப்பிட்ட மரபிலேயிருந்து வருபவர் அல்ல சத்குரு என்பவர். அவர் தன்னிலிருந்து தோன்றியவர்.

ஒரு மரபினுடைய உறுதுணை அவருக்கு இருந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட பாரம்பரியத்தை அவர் சார்ந்திருக்க மாட்டார். அதனால், அவருக்கு முன்னோடிகள் என யாரும் இல்லை என்பதனால்தான் இந்தச் சமூகத்தில் அவரை[தான்தோன்றிக் கடவுளாக] அங்கீகரிப்பதற்கு நீண்டகாலம் ஆகிறது#

========================================================================ஆதாரம்: https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/kadavulgal-irunthum-pasi-pattini-aen  உடனடியாக இதை நகல் எடுத்துச் சேமித்திடுங்கள்.