வெள்ளி, 14 அக்டோபர், 2022

கொலைகாரன்[பகவல் சிங்] எழுதிய கலக்கல்[?] 'ஹைக்கூ' கவிதை!!!

'கேரளாவில் இரண்டு பெண்கள்[இருவருமே தமிழ்ப் பெண்கள்?] கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொன்று அவர்களின் [நர]மாமிசத்தைச் சமையல் செய்து சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களில் ஒருவர் 'பகவல் சிங்' என்பது பலரும் அறிந்ததே.

'பகவல் சிங், பேஸ்புக்கில் வெகு சுறுசுறுப்பாக இயங்குபவர். 60 வயதான இவர் இவர் வாழும் பகுதியில் சமூக சேவகராகவும் கண்ணியமான நபராகவும் மக்கள் மத்தியில் வலம்வந்துள்ளார். நாட்டு வைத்தியராகவும் செயல்பட்டுள்ளார். 'சிபிஎம்' கட்சியில் உறுப்பினராக இல்லை என்றாலும் கட்சிப் பணிகளில் ஈடுபடுபவர்' என்பவை இவர் குறித்த கூடுதல் தகவல்கள்.

பொதுவுடைமை['சிபிஎம்']க் கட்சியின் மீது ஈடுபாடு உள்ள ஒருவர் [சற்றேனும்] சிந்தித்துச் செயல்படக்கூடியராக இருப்பார் என்பது உறுதி.

இந்தப் 'பகவல் சிங்' பொதுவுடைமைக் கொள்கையாளர் என்பதோடு, ஹைக்கூ கவிதைகளையும் அதிகமாகத் தனது வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள எழுத்தாளராகவும் அறியப்பட்டுள்ளார். இவரது முகநூல் பக்கம் முழுவதுமே ஹைக்கூ கவிதைகளால் நிறைந்துள்ளது. இவருக்கு முகநூலில் 1,100க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர் என்கிறது 'இந்து தமிழ்'. https://www.hindutamil.in/news/crime/882329-kerala-human-sacrifice-killers-facebook-posts-just-days-after-womens-torture-murder-2.html -வெள்ளி, அக்டோபர் 14 2022

பணக்காரன் ஆகும் பேராசையில், மந்திரவாதியான 'ஷஃபி'யின் மீது நம்பிக்கை வைத்து இரு பெண்களை 'நரபலி' கொடுத்துள்ளார் என்பது முற்றிலும் முரண்பாடான நிகழ்வாகத் தெரிகிறது. 

நரபலி நிகழ்வுக்குப் பிறகு, மலையாளத்தில் இரண்டு கவிதைகளைப் பகிர்ந்துள்ளார் 'பகவல் சிங்' என்பது நம்மைப் புருவம் உயர்த்த வைக்கிற செய்தி[இந்து தமிழ்]. கீழ்க்காண்பது கடைசியாக அவர் வெளியிட்ட கவிதையாம்.

'ஓர் உலை. கொல்லனின் மனைவி வேலையில். அவள் உடல் வளைந்திருந்தது.'

இது, பொருளற்ற வெறும் சொற்சேர்க்கை மட்டுமே' என்று சொல்லும் வகையில் இல்லை.

'உலை'... நரபலிக்கான இடம்[பகவல் சிங் வீடு].

கொல்லனின் மனைவி, உலை நெருப்பை ஊதுவதற்கான சக்கரத்தைச் சுற்றும் வேலையைச் செய்வது போல, கொலையாளிகளின் ஏவலுக்கிணங்க அம்மணக் கோலத்தில் பெண்[கள்]செயல்[படுத்தப்]பட்டார் என்று கொள்ளலாம்.

உறுதியான இரும்புத் துண்டங்களை நெருப்பில் காய்ச்சித் தட்டி, அரிவாள், வேல் என்று விரும்பிய முறையில் மாற்றம் செய்வது போல, பலி கொடுக்கப்பட்ட பெண்[கள்] துண்டு துண்டாக வெட்டப்பட்டு உருமாற்றம் செய்யப்பட்டார் என்பதை, 'வளைந்திருந்தது' என்னும் சொல் குறிப்பதாகப் பொருள்கொள்ள முடிகிறது.

ஓரளவுக்குப் பொருத்தமாகப் பொருள்கொள்ளும் வகையில், 'பகவல் சிங்' எழுதிய சொற்றொடர் அமைந்திருப்பதால் இதை, ஒரு ஹைகூ கவிதை என்று அரை மனதுடனேனும் ஒப்புக்கொள்ளலாம்.

இது முழுமையான கவிதையோ இல்லையோ, கொலை செய்து முடித்த சில நாட்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கவிதை எழுதினார் என்பது உலகில் நடைபெறாத ஓர் அதிசயம் என்று சொல்லத் தோன்றுகிறது!


மந்திரவாதி 'ஷபி'யுடன் தகாத உறவுகொண்டிருந்த பகவல் சிங் மனைவி 'லைலா'வின் வற்புறுத்தலால்தான் 'சிங்' இச்செயலில் ஈடுபட்டிருப்பார் என்று சிங்கின் உறவினர்கள் கூறுகிறார்கள் என்பதான செய்தியும் நாளிதழில் வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

[நடுவிலிருப்பவர் மந்திரவாதி முகம்மது 'ஷஃபி']
=========================================================================