'கண்ணுக்கு மை அழகு. கவிதைக்குப் பொய் அழகு. அவரைக்குப் பூ அழகு' என்பார்கள்.
ஒரு கதையைப் பொருத்தவரை, அதன் கரு சொத்தையாக இருந்தாலும் சுவையான 'நடை'யில் எழுதப்பட்டிருந்தால் கவர்ச்சியான கதையாக அது ஆகிவிடுவது உண்டு. எனவே, 'கதைக்கு நடை அழகு' என்றால் அதில் தவறேதும் இல்லை.
அதென்ன 'சுவையான நடை'?
விவரிப்பு எல்லாம் வேண்டாம். எடுத்துக்காட்டாக, மிகப் பழைய 'ராணி' இதழில் வெளியான[25.09.1994] ஒரு சிறுகதையின் தொடக்கப் பகுதியைக் கீழே பதிவு செய்கிறேன். வாசித்தால் 'சு.நடை' என்றால் என்னவென்று நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
#கதை: 'உள்ளூர் மாடுகள்'
வெண்ணிலாவைப் பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து நானும் அப்படியானதொரு தவிப்புக்கு ஆளானேன்.
வெண்ணிலா இந்த நிலவுலகத்து ரதி; பொன் வண்ண ரோஜா; பூரித்துக் குலுங்கும் இளமையின் புகலிடம்.
நானோ?
அழகு விசயத்தில் சராசரிக்கும் கீழே. எனக்கு ஆப்பிரிக்க நிறம்; சோமாலியா உடம்பு; அழகாகப் பிறந்துவிட்ட எவளும் "ஐயோ பாவம்" என்றுதான் என்னை மணக்கச் சம்மதிப்பாள்.
வெண்ணிலா பணக்காரப் பரம்பரையின் பலாக்கனி. நானோ கூலிப் பரம்பரையின் 'வெத்து' வாரிசு.
எனக்குச் சொந்த ஊர் கொக்கராயன்பேட்டை; தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமம். இதற்கு மேல் இந்த ஊரைப் பற்றித் தெரிந்துகொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.
அறுபது கிலோமீட்டருக்கு அப்பால் விசைத்தறிக்குப் பெயர்போன அதிவீரராமப்பட்டணம் போய் வெண்ணிலாவைப் பெண் பார்த்துவிட்டு வந்தேன். ஒரு வாரம் ஆகிறது. வருகிற வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம்.
திடீரென்று என் உள்மூளையில் ஒரு சந்தேகம். அது துக்கிளியூண்டு புள்ளி போல உதயமாகி இப்போது பூதாகரமாக உருவெடுத்து என்னைப் புரட்டியெடுக்கிறது; பதைபதைக்க வைக்கிறது.
அவளின் அப்பன் நாற்பது ஐம்பது விசைத்தறிக்குச் சொந்தக்காரன்; லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிற பெரிய புள்ளி. இந்தப் பண்ணாடைப் பயலை மாப்பிள்ளையாக ஏற்க முன்வருகிறான் என்றால் எங்கேயோ உதைக்கிறதே.
கிளி மாதிரியான தன் பெண்ணை இந்தக் கருங்குரங்கு கையில் ஒப்படைக்கச் சம்மதிக்கிறானே, இது எப்படி?
பண்டம் கெட்டுப்போனதோ?
சுழி பிசகில்லாமல் இருந்தால் மாடு உள்ளூரிலேயே விலை போயிருக்கணுமே? வெளியூர்ச் சந்தைக்கு ஏன் வரணும்?
நான் ஏமாளியா? பணமும் அழகும் காட்டி என்னை ஏமாற்றப் பார்க்கிறார்களா?
இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அங்கலாய்த்துப் புலம்பியது என் அல்பப் புத்தி.
"இல்லை. அப்படியெல்லாம் இருக்காது. வீணாகக் குழம்பாதே. வீடு தேடி வரும் அதிர்ஷ்டத் தேவதையை அடித்து விரட்டிவிடாதே" என்று என் ஆசை மனம் ஆறுதல் சொன்னது.
"வெண்ணிலா பரிசுத்தமானவள்; பத்தரைமாற்றுத் தங்கம்" என்று என்னைத் தேடி வந்து யாராவது தேறுதல் சொல்ல மாட்டார்களா?" என்று ஏங்கினேன்.
என் ஏக்கம் தணியவில்லை; தணிக்கப்படவும் இல்லை.
மாறாக, எனக்குள் சாம்பல் பூத்துக்கிடந்த சந்தேகத் தணலில் அஞ்சல் ஊழியர் தந்துவிட்டுப் போன ஒரு மொட்டைக் கடிதம் நெய் தெளித்தது.
'அள்ளக் குறையாத பணம். அனுபவிக்கத் திகட்டாத அழகுப் பெண் என்றவுடன் வாயைப் பிளந்துவிட்டாயே, பாவம் நீ.
மீண்டும் அதிவீரராமப்பட்டணம் வா. தீர விசாரி. அப்புறம் ஒரு முடிவுக்கு வா. இப்படிக்கு உன் நலம் விரும்பி' என்று எழுதியிருந்தது அந்த மொட்டைக் கடிதத்தில்...#
* * * * *
கதை மிக நீண்டது என்பதால் இத்துடன் நிறுத்தக்குறி இடுகிறேன்[கைவசம் சரக்கு ஏதும் இல்லாதபோது எஞ்சிய பகுதியை இணைத்து வெளியிடும் எண்ணம் உள்ளது].
'நடை'யை வெகு வெகு வெகுவாக ரசித்திருப்பீர்கள்[ஹி... ஹி... ஹி!!!] என்பதால், மிக மிக மிக மகிழ்கிறேன்.
கதையை எழுதியவன் நான்தான் என்பதைத் தன்னடக்கத்துடன் தெரிவிக்கிறேன்!
நன்றி!!
======================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக