'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Thursday, October 15, 2015

அறிஞர் அண்ணாவின் ‘மாஜி கடவுள்கள்’ - படித்திருக்கிறீர்களா?

கடவுள்களிலும் மாஜியா?! ஆம்! இங்கல்ல; அயல்நாடுகளில். இந்தப் புண்ணிய பூமியில் மட்டும் புதுப்புதுக் கடவுள்கள் புற்றீசல்களாய்ப் பெருகிக்கொண்டிருந்தாலும் பழசுகளுக்கு ‘மவுசு’ குறையவில்லை! அறிஞர் அண்ணாவின் ‘மாஜி கடவுள்கள்’ நூலிலிருந்து ஒரு சிறு பகுதி.....

இப்பதிவில் என் ‘கைங்கரியம்’ ஏதுமில்லை; வாசிப்பு வசதிக்காகப் பத்திகளில் மிகப் பெரியனவற்றைச் சிறுசுகள் ஆக்கியிருக்கிறேன்; கொஞ்சம் வரிகளுக்கு வண்ணம் சேர்த்திருக்கிறேன்.

#காட்டுமிராண்டிகள் கூட்டத்திலேகூட, இயற்கையாகத் தோன்றிப் பிறகு நடைமுறையாகிவிடும் கட்டுத்திட்டங்கள் சில உண்டல்லவா? அந்த வகையான கட்டுத்திட்டங்கள்கூட, கடவுளர் உலகில் இல்லை எனக் கருதும் விதமாகவே எல்லாக் கடவுள் கதைகளும் உள்ளன.

அக்கதைகளின் மூலம், கெட்டவர் தண்டிக்கப்படுவர்; நல்லவர் ரட்சிக்கப்படுவர் என்றார்கள்: பாவிகளுக்கு நரகம்; புண்ணியவான்களுக்கு மோட்சம் என்றும் சொன்னார்கள்.

கிரேக்கரின் புராணங்களிலும் ரோம் நாட்டவரின் புராணங்களிலும், எலூஷியன் பூந்தோட்டம் என்று மோட்சமும், டார்ட்டாரஸ் என்று நரகமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பாவிகள், இந்தத் டார்ட்டாரசில் எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்பதையும் புராணங்கள் விளக்கியுள்ளன.

சூதாடி, குடியன், காமக்கூத்தாடியவன் ஆகியவர்களை டாட்டாரசில் வாட்டி வதைக்கிறார்கள் என்று கூறிவிட்டு, இதே கெட்ட காரியங்களைச் செய்த கடவுள்களையும் தொழும்படிக் கூறினார்கள். இரண்டும் எப்படிப் பொருந்தும் என்று துளியும் சிந்திக்கவில்ல; சிந்திக்கத் துணிந்தவரைச் சித்ரவதை செய்தார்கள்.

‘நான்முகனுடைய முகத்திலும், தோள், தொடை, காலிலும் மனிதர்கள் பிறந்தனர்’ என்ற ஜாதி விளக்கக் கதையை நம்பிய நாடு நம் நாடு. இந்தக் கதை நையாண்டி செய்யப்படும் நிலைக்கு நாம் வளர எவ்வளவு காலம் பிடித்தது! இன்றும் நையாண்டி செய்வதை, ‘நாத்திகம்’ என்று கூறிக் கண்டிப்பவர்கள் இங்கு ஏராளமாக இருக்கிறார்கள்.

கிரேக்க, ரோம் நாடுகளிலும்கூட, இம்மாதிரிக் கதைகள் படைக்கப்பட்டு மக்களும் நம்பினர்.

முழுமுதல் கடவுள் ‘ஜூவஸ்’ தேவனுக்கு ஒரு நாள் தாங்க முடியாத மண்டைக் குடைச்சல் உண்டானதாம். ஆரம்பமே எப்படியிருக்கிறது பாருங்கள். அவரோ அண்ட பிண்ட சராசரங்களைப் படைத்த ஐயன் - சகல சக்தியும் படைத்த தேவ தேவன். ஆனால், புராணீகன் கூறுகிறான், அவருக்கு மண்டைக்குடைச்சல் நோய் என்று. மண்டைக் குடைச்சல் மகேசனுக்கும் வருகிறது. ஆகவே, நம்மையும் கடவுளையும்விட மண்டைக் குடைச்சல் நோய்தான் மகா சக்தி வாய்ந்தது என்றாகிறது.

மண்டைக் குடைச்சலால் அவதிப்பட்ட மகேசனுக்கு மருந்திட, தேவர் பலரும் முனைந்தனர். வலியைப் போக்க யாராலும் முடியவில்லை. கடவுளர் உலகமே கலங்கியது.

வேதனையில் துடித்த தேவதேவன் ஜூவஸ்,  தன் மகன் ஹீபாஸ்டஸ் என்பானை அழைத்து, “கோடரி கொண்டு என் மண்டையைப் பிள” என்று உத்தரவிட்டார். தனயனும் தந்தை சொல் தட்டாமல் அதைச் செய்து முடித்தான்.
மண்டை பிளந்ததும், உள்ளேயிருந்து வடிவழகுடன் வெளிவந்தாள் ‘அதீனே’ என்ற கடவுள் - குழந்தை வடிவில் அல்ல; பருவ மங்கையாக, சகல அலங்காரத்துடன்! அவள் வெளிவந்ததும் மண்டைக் குடைச்சல் போயே போய்விட்டதாம்!

ஜூவஸூக்கு மண்டைக் குட்டைச்சல் வந்தது போல, இங்கே நம் ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குத் தலைவலி வந்ததாம். பத்து அரைத்துப் போட்டதும் குணமாகிவிட்டதாம். 

கிரேக்க, ரோம் நாடுகளில், ஜூவஸூக்கு  மண்டைக் குடைச்சல் நோய் வந்த கதை வழக்கொழிந்துவிட்டது. அந்தக் கடவுளையும் மக்கள் வணங்குவதில்லை. அவர் ‘மாஜி’ கடவுள் ஆகிவிட்டார்!

இங்கே, ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குத் தலைவலி வருவதும், அவருக்குப் பத்து அரைத்துப் பூசிப் பூஜை செய்வதும் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன!#
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அறிஞர் அண்ணாவின், ‘மாஜி கடவுள்கள்’, பூம்புகார் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு; ஜூலை 1998.
No comments :

Post a Comment