தேடல்!


Oct 9, 2015

நவக்கிரகக் கடவுள்களின் அவதாரக் கதைகள்! [ஜோதிடப் பிரியர்களுக்கு!!]

“ஜோதிடம் ஓர் அறிவியல் கலையே” என்று  வாதிடும் இன்றைய ஜோதிடர்கள் பலரும், நவக்கிரகங்களைக் கடவுள்களாக உருவகித்தே ஜாதகம் கணித்துப் பலன் சொல்லுகிறார்கள். 

நவக்கிரகங்கள் கடவுள்களா?

இந்தக் கடவுள்களின் அவதாரம் பற்றிய வேதபுராணக் கதைகளை இங்கே தொகுத்திருக்கிறேன். படித்து முடித்து, இவர்களெல்லாம் கடவுள்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

சூரியன்
இந்தக் கடவுள், காசியப முனிவருக்கும் ‘அதிதி’ என்கிற பெண்ணுக்கும் மகனாகப் பிறந்ததால், ‘ஆதித்தன்’[சூரியனின் வேறு பெயர்] என்ற பெயரைப் பெற்றான் [பாரதம்]. அதிதி 12 சூரியன்களைப் பெற்றதாகவும்  ஒரு சூரியனே மாதந்தோறும் வேறு வேறு கோலம் பூணுவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

[சூரியன் தோன்றுவதற்கு முன்பே காசியபர் போன்ற மானுடர்கள் தோன்றியது எப்படி என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கு?]

மார்க்கணடேய புராணம் சொல்லும் இன்னொரு கதை.....

இருள் மயமான இந்த அண்டத்தைப் பிரமன் பிளந்தான்[எதற்கு?]. அப்போது ‘ஓம்’ என்ற ஒலி உண்டாயிற்று. அந்த ஒலியிலிருந்துதான் சூரியன் தோன்றினான். 

[கற்பனையானவை எனினும் மேற்கண்ட கதைகள் சுவாரசியமானவை என்பதில் சந்தேகமில்லை].


சந்திரன்
வில்லிபுத்தூரார் சொல்கிறார்: “எங்கள் இறைவனாகிய திருமாலின் இருதயத்திலே பிறந்தவன் இவன்; நாள்தோறும் வானில் உள்ள நட்த்திர மங்கையரைக் கூடிக் குலபுபவன்.....”

இவனின் பிறப்பை விவரிக்கும் இதனினும் சுவையானதோர் அதிசயக் கதை.........

‘அத்திரி’ என்னும் பெயர் கொண்ட முனிவர் தவம் செய்துகொண்டிருந்தபோது, அவரிடமிருந்து வெளிப்பட்ட ‘விந்தணு’அவரின் உள்ளுறுப்புகள் வழியாக மேல் நோக்கிச் சென்று அவரின் கண் வழியாக வெளிப்படலாயிற்று.

அதனைக் கண்ணுற்ற இந்திரன், ஒரு பெரிய யோகியின் விந்தணு வீணாவதைத் தவிர்க்க, அதைத் தன் கரங்களில் ஏந்திப் பக்குவமாய் ஒரு பாத்திரத்தில் சேமித்துத் தன் [இந்திர]விமானத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தான். அவ்விந்தணுவே காலப்போக்கில் சந்திரனாய் உருக்கொண்டது.


செவ்வாய்
‘அங்காரகன். எனப்படும் செவ்வாய்க்கு, ‘மங்களன்’, ’ ‘குஜன்’ முதலான வேறு பெயர்களும் உண்டு.

சிவபெருமான் உமையம்மையைப் பிரிந்திருந்த காலத்தில், ஒரு நாள், அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து வேர்வை வெளிப்பட்டுப் பூமியில் விழுந்தது. அந்த வியர்வையே பின்னர் சந்திரனாக உருவெடுத்தது. இவனை நிலமகள் வளர்த்து ஆளாக்கினாள். என்றிவ்வாறாகப் புராணங்கள் கதைக்கின்றன.

[மனித உயிர்கள் தோன்றுவதற்கு விந்தணு தேவைப்படுகிறது. ஆனால், தேவர்களின் பிறப்புக்கு வெறும் வியர்வையே போதும் போலிருக்கிறது!]

பாரத்துவாச முனிவரின் விந்தணுவிலிருந்து சந்திரன் தோன்றினான் என்பதும் மற்றுமொரு புராணக்கதைதான்!


புதன்
‘தாரை’ என்பவள் குருபகவானின் மனைவி. இவள் சிலகாலம் சந்திரனின் அழகில் கிறங்கி மயங்கி, அவனுடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்தாள்; கருவுற்றாள்.

கருவுற்ற நிலையில் மீண்டும் குருபகவானோடு இணைந்து இல்லற இன்பம் துய்க்கலானாள். இந்நிலையில் புதனைப் பெற்றெடுத்தாள்.

‘குழந்தை யாருக்குப் பிறந்தது?’ என்ற ஐயம் பலருக்கும் எழவே, “இக்குழந்தைக்குச் சந்திரனே தந்தையாவான்” என்று அறிவித்தாளாம் தாரை.

[தேவருலகில் எந்த அளவுக்குப் பெண்ணுரிமை போற்றப்பட்டிருந்தது பார்த்தீர்களா?]

இந்த உண்மையைப் பலரும் அறியும் வகையில் பிரமதேவனேஅறிவிப்புச் செய்ததாகவும் புராணங்கள் சொல்லுகின்றன.


பிருகஸ்பதி [எ] வியாழ பகவான்
தேவர்களுக்கெல்லாம் ஆசானாக விளங்கிய ‘குரு’வைத்தான் இவ்வாறு அழைப்பார்கள். இச்சொல்லுக்கு ‘அறிவில் சிறந்தவன்’ என்பது பொருள்.

பிரமதேவனின் பிரியத்திற்குரிய புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவரின் மகன் இவன். தாய் பெயர் சிரத்தா தேவி.

பிருகஸ்பதி பொன் வண்ண மேனி கொண்டவராம். நான்கு திருக்கரங்களை உடையவராம்.


சுக்கிரன்
இவர் பிருகு முனிவரின் திருமகனாக உதித்தவர்; அசுரர்களின் குரு.

முழுமுதல் கடவுளான சிவபெருமானின் திருவயிற்றில் தங்கியிருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த அதிசயப் பிறவி இவர்! இயல்பான தன் உடலிலிருந்து வெளி்யேறி, அந்தணன், அரசன், வேடன், மலைப்பாம்பு என்று பல உருவங்கள் பெற்று அலைந்து திரிந்து ஞானம் பெற்று, காலனின் ஆணையால் அசுரர்களுக்குக் குருவானான் என்பது கதை.


சனி
இவன் சூரியனின் மகனாவான்.

சூரியன், சஞ்ஞிகை என்பாளை மணந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றான்.
சூரியனிடமிருந்து வெளிப்பட்ட சூட்டைத் தாங்கும் சக்தியில்லாத சஞ்ஞிகை, தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி அங்கே விட்டுவிட்டுத் தன் தந்தையிடம் சென்றாள்.

அந்த நிழல் பெண்ணுடன்  சூரியன் புணர்ந்ததால் பிறந்தவனே ‘சனி’ ஆவான்.


ராகு & கேது
‘விப்பிரசித்தி’ என்னும் அசுரனுக்கும் ‘சிம்ஹிகை’ என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு.

அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்ததால் கிடைக்கப் பெற்ற அமுதத்தை அசுரர்கள் பருகுவதைத் தடுக்க நினைத்தார் திருமால். மோகினியாக வடிவெடுத்து, இனிமையாகப் பேசி, எல்லோரையும் வரி்சையில் அமரச் சொன்னார். வரிசையில் முந்துவதற்கு அசுரர்கள் முண்டியடித்த நிலையில் தேவர்களுக்கு மட்டும் அமுதம் வழங்கினார். இதைக் கண்ணுற்ற ராகு, தேவ உருக்கொண்டு அமுதம் பெற்றுப் பருகினான். உண்மை வெளிப்பட்டபோது, திருமாலின் சக்ராயுதத்தால் அவன் தலை துண்டிக்கப்பட்டது.

தலையுடன் இரண்டு கைகளும் சேர்ந்து விழுந்தன.மற்றொரு பகுதி ஒரு தேசத்தில் விழுந்தது. அமுதம் பருகிய காரணத்தால் ராகு சாகாமல் இரு வேறு உருவங்களில் ராகுவாகவும் கேதுவாகவும் வளர்ந்தான்.

இவன் சூரிய சந்திரர்கள் மீது பகை கொண்டு அவர்களைப்பீடிக்கத் தொடங்கினான். கிரகணம் என்பது இதுதான்.

உண்மையில், ராகு கேது என்னும் பெயர்களில் கிரகங்கள் இல்லை. இவற்றைச் ‘சாயாக் கிரகங்கள்’ என்று சொல்லி ஜோதிட வல்லுநர்கள் சமாளிக்கிறார்கள்.
*****************************************************************************************************************************************************