திங்கள், 25 மே, 2020

“கடவுள் ஒரு ‘பேப்பர் வெயிட்’ மாதிரி”... கவிப்பேரரசு வைரமுத்து!

#இந்தியக் கலாச்சாரத்தில் கோயில் என்பது ‘கடவுளின் பங்களா’ மட்டுமல்ல; பொருளாதார வாழ்வின் மையம்.

நிர்மாணிக்கும்போது அது[கோயில்] தொழிற்சாலை; நிர்மாணித்த பிறகு அது ஒரு வங்கி.

பாடசாலையும் அதுவே; ஆபத்தான காலங்களில் ஆயுதச் சாலையும் அதுவே; நீதிமன்றமும் அதுவே; வருவாய் திரட்டும் நிறுவனவும் அதுவே; கடவுள் பீடமும் அதுவே; சமுதாயத்தின் கலைக்கூடமும் அதுவே.

இந்த நிறுவனங்களின் மீது எந்தவொரு விமர்சனமும் விழக்கூடாது என்றுதான் கடவுள் என்னும் கருத்தாக்கத்தை அதன் மீது தூக்கி நிறுத்தினார்கள்.  இது, காகிதங்கள் பறக்காமலிருக்க, ‘பேப்பர் வெயிட்’ வைப்பது மாதிரி.

கோயிலில் இயங்கிவந்த நிறுவனங்கள் காலப்போக்கில் ஒவ்வொன்றாய்க் கழன்றுபோன பின்னும் பணமும் பக்தியும் மட்டும் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றன கடவுள் என்னும் கருத்தாக்கத்தை.

கோயில் கடவுளோடு சம்பந்தப்பட்டது என்பதைவிடப் பொருளாதாரத்தோடுதான் அதிகம் சம்பந்தப்பட்டது. பொருள் வசதியற்ற பல கோயில்கள் புதர்மண்டிக் கிடப்பதே இதற்குச் சாட்சி
=============================================================
‘இந்தியக் கலாச்சாரத்தில் கோயிலுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?’ என்னும் வாசகர் கேள்விக்கு வைரமுத்து அளித்த பதில் இது[கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள், 26.11.2007 குமுதம் வார இதழ்].

கவிப்பேரரசுவின் இந்தக் கருத்தாக்கம் வெளியாகி ஏறத்தாழ  13 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆண்டாள் குறித்த அவரின் கருத்தைப் பிரச்சினை ஆக்கிச் சுகம் கண்ட பக்தகோடிகள், கடவுளைப் ‘பேப்பர் வெயிட்’ என்று சொல்லலாமா என்று கேட்டுப் புதியதொரு போராட்டத்தைத் தொடங்கவும்கூடும். அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது.....

‘பேப்பர் வெயிட் மாதிரி’ என்றுதான் கவிப்பேரரசு சொல்லியிருக்கிறார்; ‘கடவுளே ஒரு பேப்பர் வெயிட்தான்’ என்று சொல்லவில்லை. 

இங்கே பேப்பர் வெயிட் என்பது வெறும் உவமை மட்டுமே. கடவுள் உவமேயம். உவமை ஒருபோதும் உவமேயம் ஆகிவிடாது.....

“போதும் நிறுத்தியா” என்று வாசிப்போர் பலரும் முணுமுணுக்கக்கூடும் என்பதை மானசீகமாக உணர்வதால் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

நன்றி.