புதன், 24 ஜூன், 2020

‘சுவரெழுத்து’ சுப்பையா என்றொரு அதிசயச் சுயமரியாதைக்காரர்!!!

இது, நீங்கள் தேடிக் கண்டறிந்து வாசிக்கக் கிட்டாத மிக அரிய வரலாற்றுக் குறிப்பு. தவறாமல் வாசியுங்கள்.

சுவரெழுத்து சுப்பையா பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாதவர். ஆனாலும், அறிவாயுதத்தின் வீரியம் அவருக்குத் தெரிந்திருந்திருக்கிறது. மயிலாடுதுறையில் வசித்து வந்தாலும் அவருக்கென்று வீடோ, குடும்பமோ இருக்கவில்லை. கழகத் தொண்டர் ரெங்கசாமியின் டீக்கடையில் தங்கிக்கொண்டு அங்கே கிடைப்பதை உண்டு வாழ்ந்திருக்கிறார். சதா சர்வ காலமும் சுயமரியாதைக் கொள்கையை நெஞ்சில் தாங்கிக்கொண்டு தன்னைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்திருக்கிறார். உடனிருந்த தோழர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட திருமணத்திற்கு அவர் சம்மதிக்கவில்லை.
21.jpg

சுப்பையா ஒரு கட்டத்தில் திருமணத்திற்கு ஒப்புதல் தந்திருந்தார். தோழர்களும் அவருக்காக நிதி திரட்டியிருக்கிறார்கள். கூரை வீடு, கொஞ்சம் தட்டுமுட்டுச் சாமான்கள் வாங்க அந்த நிதியைப் பயன்படுத்தச் சொல்லி தந்திருக்கிறார்கள். ஆனால், சுப்பையாவோ அந்தத் தொகை முழுவதையும் பிரச்சாரத்துக்குச் செலவழித்துவிட்டுக் கல்யாணத்திற்குக் கல்தா கொடுத்திருக்கிறார்.

அவர் சுவரில் எழுதிக்கொண்டிருக்கையில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டாராம். அவரை அடிக்க வந்தால்கூட அடியை வாங்கிக்கொண்டே, எழுத நினைத்ததை எழுதி முடிப்பாராம். ஒருமுறை ஒரு பிராமணர் வீட்டுச் சுவரில் எழுதிக்கொண்டு இருந்திருக்கிறார். அந்த வீட்டுக்காரர் குச்சியால் தட்டி ‘‘யாரைக் கேட்டு என் வீட்டுச் சுவரில் எழுதுகிறாய்’’ எனக் கேட்க,  ‘‘யாரைக் கேட்டு ராமானுஜர் பிரசாரம் செய்தார்?’’ என்றிருக்கிறார்.

பிறிதொருமுறை நாகை புராட்டஸ்டன்ட் தேவாலயச் சுவரில் ‘தேவனின் ஆலயத்தை வியாபார ஸ்தலமாக்காதே’ என்ற பைபிள் வாசகத்தை ஒரு பக்கமும், ‘கோயில் திருடர்களின் குகை’ என்ற காந்தியின் வாசகத்தை இன்னொரு பக்கமும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். விஷயமறிந்த வைதீகர்கள் கொதித்தெழ, பிரச்னை பெரிதாகிவிட்டதாம். ‘பைபிளில் சொல்லியிருப்பதுதானே... காந்தியால் எழுதப்பட்ட வாசகம்தானே’ என்று விவாதப் புரட்சி செய்து கழகத் தோழர்கள் அவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

மூட நம்பிக்கைகளிலிருந்து மக்கள் முற்றாக வெளியேற பெரியார் நடத்திவந்த கருத்துப் புரட்சிக்கு, சுப்பையா போன்றோர் உதவியிருக்கிறார்கள். குப்பைத் தொட்டியைக் காட்டி, ‘‘இதிலே எதையாவது எழுதுங்கள்’’ என்றால், ‘புராணங்களை இதிலே போடு’ என்று எழுதும் நெஞ்சுரத்தோடு சுப்பையா செயல்பட்டிருக்கிறார். எது பக்தி? எது பித்து? என்பதை உணர்ந்தவராக அவர் இருந்ததால்தான், ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என்ற ராமலிங்க வள்ளலாரை ஆதரித்திருக்கிறார்.

அன்றைய காங்கிரஸ் பேச்சாளர்களில் சிலர் பெரியாரைத் தரக்குறைவாகப் பேசியபொழுது அவரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் விவாதிக்கக் கூப்பிட்டிருக்கிறார். ‘முடியாது’ என்று முரண்டு பிடித்தவர்களோடு மோதவும் துணிந்திருக்கிறார். இன்றைக்குக்கூட நாம் தலைவர்கள் கொள்கையோடும், தொண்டர்கள் கொள்கைக்காகவும் வாழவேண்டும் என விரும்புகிறோம்.

அவ்வகையில், வரித்துக்கொண்ட கொள்கைக்காக வாழ்வதே வாழ்க்கையின் நோக்கம் என்று எத்தனையோ சுப்பையாக்கள் தங்களை இழந்திருக்கிறார்கள். தியாக வாழ்வை மேற்கொண்ட அவர்களுக்கு மணிமண்டபங்களோ மகுடாபிஷேகங்களோ தேவையில்லை. குறைந்தபட்ச நினைவுகூரல். அதுகூட கிடைப்பதில்லை என்பதுதான் சோகம்.

 சுப்பையா தன் வாழ்வையே சுவர் எழுத்துக்காக அர்ப்பணித்தவர். புகைப்படம் எடுக்கக்கூட விரும்பாதவர். ‘‘எதற்கு புகைப்படம்? பின்னால் மாலை போடவா!’’ எனக் கேட்டு முகங்காட்ட மறுத்திருக்கிறார்.

தீவிரமான திராவிடக் கழகத் தொண்டரான சுவரெழுத்து சுப்பையா செய்துவிட்டுப் போயிருக்கும் காரியங்கள் போற்றுதலுக்குரியன. தனி ஒரு மனிதனாகத் தமிழகத் தெருக்கள் முழுக்க பகுத்தறிவுப் பிரசாரம் செய்திருக்கிறார். ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்ற வாசகம் நமக்குள் பதிய அவரே காரணம். ‘நெற்றியில் திருமண், நெஞ்சிலே களிமண்’ என்றும், ‘விஞ்ஞானி கண்டது விரைவு ராக்கெட், அஞ்ஞானி கண்டது விபூதிப் பாக்கெட்’ என்றும் அவரே சுயமாக முழக்கங்களை உருவாக்கினார். அவர் கலர் வில்லைகளைப் பயன்படுத்தவில்லை.

நெடுஞ்சாலைகளில் உருகும் தாரையே மண்ணெண்ணெயைக் கலந்து மையாக்கியிருக்கிறார். தூரிகையைத் தேடவில்லை. தன் கைவிரலில் துணியைக் கட்டிக்கொண்டு சுவர்களில் எழுத்துருக்களைக் கொண்டுவந்திருக்கிறார்! பெரியார் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கிறார் என்றால் முதல் நாளே அந்த ஊருக்குப் போய் தெரு முழுக்க எழுதுவார்; ‘மெகாபோன்’ மூலம் விளம்பரப்படுத்தியும் இருக்கிறார். மக்கள் பெருமளவு கூட்டத்தில் கலந்துகொண்டால், ‘நேற்று சுப்பையா வந்தாரா?’ என்று பெரியாரே கேட்கும் அளவுக்கு அவரது பணி இருக்கும்.

உயரமான சுவர்களில் ஒற்றையாளாக ஏறி ஏணியிலிருந்து எத்தனையோ முறை கவிழ்ந்திருக்கிறார். ‘‘யாரையாவது உதவிக்கு வைத்துக்கொள்ளக் கூடாதா?’’ என்று தோழர்கள் கேட்டதற்கு, ‘‘ஆளுக்கொரு வேலை செய்தால்தான் அதிக வேலை செய்ய முடியும்’’ என்றிருக்கிறார். அப்படித்தான் சென்னையில் ஒருமுறை சுவர் விளம்பரம் செய்துகொண்டிருக்கையில் காவல் துறையினர் வந்திருக்கிறார்கள். யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவரைக் கைது செய்தவர்கள், விசாரிக்காமல் தார்ச்சட்டியைத் தலையில் கவிழ்த்திருக்கிறார்கள்.

யாரிடமும் எந்த உதவியும் கோர விரும்பாத சுப்பையா அமைதியாக இருந்திருக்கிறார். அதன் விளைவாக அவர் கண்பார்வை மங்கி இறுதியில் பார்வையே போய்விட்டது. அப்போதும்கூட ஒற்றைக் கண்ணால் தன்னுடைய சுவர் விளம்பரத்தைத் தொடர்ந்திருக்கிறார். பெரியார் மீது அவர் கொண்டிருந்த மரியாதையும் மக்களை அறியாமை அழுக்கிலிருந்து மீட்டெடுக்க அவர் கொண்டிருந்த ஆவேசமும் அளப்பரியன.

ஏன் இத்தனைப் பாடுகளையும் ஒருவர் இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்? எல்லோரையும் போல வாழ எண்ணாமல் எதையாவது சமூகத்திற்குச் செய்யவேண்டும் என எண்ணுகிறார்? பெரியாரின் தத்துவார்த்த கொள்கைகளைப் பிரசாரம் செய்வதே வாழ்நாள் கடமையாகக் கருத அவரை எது உந்தித் தள்ளியது? ‘இருக்கும் வரை பிறருக்கு உதவியாகவும், இறந்தபிறகு காக்கை குருவிக்கு இரையாகவும் இருங்கள்’ என்றார் பெரியார். அதை அட்சரம் பிசகாமல் செய்ய நினைத்தவர் சுப்பையா.

அதனால்தான், மயிலாடுதுறை ரயில் பாதையில் மரித்துக் கிடந்த அவர் உடலைக் காக்கை, குருவிகள் கொத்தித் தின்றன. கழகத் தோழர்களுக்குக்கூட செய்தி தாமதமாகவே தெரிந்திருக்கிறது. தோழர்கள் தகவலறிந்து போவதற்குள் ரயில்வே நிர்வாகமே அவரை அடக்கம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 
=======================================================================
‘யுகபாரதி’யின்‘ஊஞ்சல் தேநீர்’ என்னும் தலைப்பிலான, அவரின்[குங்குமம் வார இதழில் வெளியான] தொடர் கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டது. கவிஞருக்கு நன்றி.