அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 26 ஜூன், 2020

கத்தி ஏந்து பெண்ணே! மனசில் ‘கெத்து’ம் வேணும்!!

#.....தங்கை சொன்ன சொல்லுக்கு மறுப்புச் சொல்லாமல் உடனே தலையாட்டிய அங்கம்மா, அடுத்த சில நிமிடங்களிலேயே தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். “கடையைக் காலி பண்ணிட்டா உனக்கும் அம்மாவுக்குமே மூனு நேரச் சோத்துக்கு வழியில்ல. நான் வேற உனக்குச் சுமையா இங்க இருக்கணுமா?” என்றாள்.

“வேற என்ன பண்ணுவே?” -வேணி கேட்டாள்.

“உள்ளூர்ல இருந்தா என் புருசன் தொல்லை பண்ணுவான். எதுனாச்சும் வெளியூர் போயிக் கூலிநாழி செஞ்சி பொழச்சுக்கிறேன்.”

“தனியாவா போறே?”

“செல்லம்மா என் அம்மா மாதிரி லட்சணமா பொறந்துட்டா. அவளை அடையறதுக்கு நான் நீன்னு போட்டி போடுறானுக. நான் அப்பா மாதிரி, கட்டக்கறுப்பா, மண்ட மூக்கும் தூக்குன பல்லுமாப் பொறந்துட்டேன். எங்க போனாலும் என்னை எவனும் சீந்த மாட்டான்” என்றாள் அங்கம்மா.

ஒரு வெடிச் சிரிப்பை வெளிப்படுத்தினாள் வேணி.

“ஏன் வேணி சிரிக்கிறே?”என்று வினவினாள் அங்கம்மா.

"முட்ட முட்டத் தண்ணி அடிச்சுட்டும் போதை மாத்திரையை முழுங்கிட்டும் பொம்பள நெனப்போடு அலையுற காலிப்பசங்க பொம்பள அழகா இருக்காளா இல்லையான்னெல்லாம் பார்க்குறதில்ல. அவனுகளுக்கு வெறியைத் தணிச்சிக்க ஒருத்தி வேணும். அவ்வளவுதான். நீ பஸ் ஏறிப் போனா, அதிலிருந்து இறங்குனதும் இறங்காததுமா உன்னை அலேக் பண்ணிட்டுப் போக ஓநாய்ங்க காத்திருக்கும். ரயில் ஏறிப் போனீன்னா, நீ ஒத்தப் பொம்பளைன்னு தெரிஞ்சி, இறங்குறதுக்குள்ளயே  கக்கூஸ் ரூமுல அடைச்சி நாசம் பண்ணி ஓடுற ரயிலிலிருந்து தூக்கி வீசிட்டுப் போயிடுவானுக. இன்னொரு வாட்டி இப்படிச் சொல்லிடாதே” என்றாள் வேணி.

“நாடு இவ்வளவு மோசமாவா இருக்கு?”

“இதைவிடவும் மோசம். வசமா மாட்டிகிட்டாக் கட்டுன புருசனையே கட்டிப் போட்டுட்டு அவன் கண் முன்னாலையே ஒருத்தியைக் கூட்டணி அமைச்சிக் கெடுத்துடுறானுக. கொஞ்ச நாள் முந்தி நியூஸ் பேப்பர்ல படிச்ச சமாச்சாரம் இது. தண்ணியடிச்சுட்டுப் பொம்பளை சுகத்துக்குத் தெரு நாயா அலைஞ்ச நாலு குடிகாரனுங்க நடைபாதையில் படுத்திருந்த அறுபது வயசுக் கிழவியைத் தூக்கிட்டுப் போயி மானபங்கப்படுத்தியிருக்கானுக. அதிர்ச்சியில் கிழவி பரலோகம் போய்ச் சேர்ந்துட்டா. நிராதரவா இருக்கிற ஒருத்தி கொஞ்சம் லட்சணமாவும் இருந்துட்டா அவள வாழ விடமாட்டானுக. அது போகட்டும், நம்ம பிரச்சினையைப் பேசுவோம்.....” என்று சொல்லி, செல்லம்மாவின் முகம் பார்த்து ‘நீ சொல்லு’ என்பதாகச் சைகை செய்தாள் வேணி.

“ஒரு திட்டம் வெச்சிருக்கேன்” என்றாள் செல்லம்மா. அதை அறியும் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள் அங்கம்மாவும் வேணியும்.

“அத்தியப்பனுக்குச் சொந்தமான இந்த இடத்தைக் காலி பண்ணிட்டுத் தள்ளுவண்டிக் கடை போட நினைக்கிறேன். காபி பலகாரத்தின் தரம் குறையாம பார்த்துகிட்டா நிறையவே வாடிக்கையாளருங்க வருவாங்க. கும்பல் சேருறதைப் பொருத்து அப்பப்பக் கடையை இடமாற்றம் செய்துக்கலாம்” என்றாள் செல்லம்மா.

“தள்ளுவண்டிக்கு மாறிட்டா, எனக்கு ரெண்டாந்தாரமா வந்துடுன்னு அங்கம்மா புருசன் சொல்லுறதை நிறுத்திடுவாரா? செந்தில் உனக்குத் தூது அனுப்புறதை விட்டுடுவானா? ‘இது எட்டாக்கனி’ன்னு அத்தியப்பன் தன் மனசைப் பக்குவப்படுத்திட்டு உன்னைத் தொந்தரவு பண்ணாம ஒதுங்கிடுவாரா?” என்று ஒன்றன்பின் ஒன்றாகக் கேள்விக் கணைகளை வீசினாள் வேணி. “இதெல்லாம் நடக்கவே நடக்காது” என்று பதிலும் சொன்னாள்.

"தள்ளுவண்டிக் கடை போட்டீன்னா, உன் கிட்ட வந்து நின்னு, ‘ஒரு காப்பி குடு’ன்னு சொல்லிட்டுக் கைலிக்குள்ள கையை விட்டுகிட்டு நிப்பானுக தறுதலைங்க. ஒரு நாள் சண்டைபோட்டு விரட்டலாம். தினம் தினம் இப்படி வந்து அசிங்கம் பண்ணுறவனுகளோட எத்தனை நாளைக்கு மல்லுக் கட்ட முடியும்? இது மாதிரியான காலிப்பசங்களோட அடாவடித்தனத்தைத் தடுக்க, வெளியில் தெரியும்படியா இடுப்பில் ஒரு கத்தி செருகிக்கோணும். அதோட, மனசில் அவனுகளை எதிர்த்துப் போராடுறதுக்கான ‘கெத்து’ம் இருக்கணும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் செல்லம்மாவின் உயிர்த்தோழி வேணி......#
=============================================================

‘செல்லம்மா தேவி’ என்னும் என் புதினத்திலிருந்து[கிண்டில் வெளியீடு] தேர்வு செய்து வெளியிட்டது இப்பதிவு.