இன்று காலை, காய்கறி அங்காடியில் கத்தரிக்காய் பொறுக்கிக் கொண்டிருந்தபோது என் காதில் விழுந்த உரையாடல் இது. கொஞ்சமும் கற்பனை கலக்காமல், கேட்டதைக் கேட்டவாறே பதிவு செய்திருக்கிறேன்.
“சரசு, உன்னைத்தான் புள்ள பார்க்கணும்னு இருந்தேன். நீ வேலை செய்யுற வீட்டில் எவ்வளவு சம்பளம் தர்றாங்க?” -காய்கறி வாங்க வந்த இளம் வயதுப் பெண்ணிடம் கேட்டாள் கடைக்காரி.
“பத்தாயிரம்” என்றாள் சரசு என்னும் அந்த இளசு.
“என்ன வேலை?”
“அழுக்குத் துணிகளை மிசின்ல போட்டுக் காய வைச்சுட்டு, பாத்திரம் கழுவி, வீடு துடைச்சி, எல்லாருக்கும் டிபன் செஞ்சி குடுக்கணும். அப்புறம், மத்தியானத்துக்குச் சமைச்சு வைச்சுட்டுக் கிளம்பிடுவேன். ராத்திரிக்கு வீட்டு அம்மாவே ஏதும் செஞ்சுக்குவாங்க.”
“என் எதிர்த்த வீட்டு மருந்துக் கடைக்காரர் வீட்டுக்கு நம்பிக்கையான வேலைக்காரி கிடைக்கலியாம். அவர் சம்சாரம் விசாரிக்கச் சொல்லிச்சி. கிழவன் கிழவி ரெண்டு பேர்தான். பசங்க பொண்ணுங்க எல்லாம் வெளியூர்ல இருக்காங்க. மாசம் பன்னிரண்டாயிரம் தருவாங்க. வந்துடேன்.” -கடைக்காரி.
“ஊஹூம்.”
“ஏண்டி, ரெண்டாயிரம் ரூபா அதிகம் வருது. மருந்துக் கடைக்காரர் வீட்டுக் காசு கசக்குமா?”
“அதில்லம்மா. இப்ப வேலை செய்யுற வீட்டை விட்டுட மனசில்ல.”
“ஏனாம்?”
“பெரியவங்களும் சரி சிறுசுகளும் சரி, வாங்க போங்கன்னு எனக்கு மரியாதை குடுத்துத்தான் பேசுவாங்க. ரெண்டு நாள் சொல்லாம நின்னுட்டாலும் உடம்பு சுகமில்லியான்னு கேட்பாங்களே தவிர, ஏன் வரலேன்னு எரிஞ்சி விழ மாட்டாங்க. சாப்பிட்ட எச்சில் தட்டுகளைத் தண்ணியில் அலசிட்டுத்தான் கழுவ வைப்பாங்க. வீட்டு வேலையைத் தவிர வேறே வேலை எதுவும் தரமாட்டாங்க. வருசம் தவறாம சம்பளத்தையும்....”
குறுக்கிட்டாள் கடைக்காரி, “போதும்டி. வேலைக்காரிய இத்தனை கவுரவமா நடத்துற குடும்பத்தை வேற எங்கயும் பார்க்க முடியாது. நீ குடுத்து வெச்சவடி.”
=======================================================================