அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 22 ஜூன், 2020

பாதி நெருப்பில்! மீதி இருப்பில்!!

தீப்பெட்டியும் தீக்குச்சியும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் எரியும் நெருப்பை அணையாமல் பாதுகாக்க வேண்டிய தேவை மனிதனுக்கு இருந்தது.

அந்த நெருப்பை ‘அக்கினி தேவன்’ ஆக்கி, ‘ஹோமம்’ என்னும் பெயரில் நெய், சமித்து எனப்படும் குச்சிகள், அருகம்புல் போன்றவற்றை நெருப்பிலிட்டு அவனுக்கு அர்ப்பணிப்பதாகச் சொல்லித் தம் பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டார்கள் புரோகிதர்கள். விலை மதிப்புள்ள பொருள்களில் பாதியை நெருப்பில் போட்டு மீதியைத் தம் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்கள். இதர வருமானங்களும் உண்டு.. 

யாகங்கள் பல வகை. பிள்ளைப்பேறுக்கு யாகம். பதவி பெற யாகம். பதவியைத் தக்க வைக்க யாகம். செல்வம் கொழிக்க யாகம். நோய் குணமாக யாகம்[கொரோனா ஒழிய அண்மையில் எடியூரப்பா யாகம் நடத்தியதை நினைவுகூர்க] என்றிப்படி. எதிரிகளை ஒழிக்கக்கூட யாகம்[சத்துரு சம்ஹார யாகம்] நடத்தப்படுவடுண்டு. கொஞ்ச காலம் முன்பு நம்ம ஊர் ராஜா இந்த யாகத்தை நடத்தினார். பலன் என்னவோ பூஜ்யம்.

நெய்யையும் இதர பொருட்களையும் நெருப்பில் கொட்டி, கடவுள் பாஷை என்று கதைக்கப்படும் சமஸ்கிருதத்தில்[பிறவற்றைப் போல இதுவும் ஒரு மொழி] மந்திரங்கள் என்று எதையெதையோ ஓதுவதால் நினைப்பது நடக்குமா? குணப்படுத்துவதற்கு அரிதான நோய்கள் குணமாகுமா?

கொடுமை என்னவென்றால், புரோகிதர்களின் புரட்டு வேலைகளுக்குப் பலியாகும் கூட்டத்தில் பதவியிலிருப்போரும் மெத்தப் படித்தவர்களும்கூட இருக்கிறார்கள்.

சிரார்த்தம் செய்வது இவர்களின் பிழைப்புக்கான இன்னொரு வழி. இங்கே அர்ப்பணிப்பவை எங்கோ இருக்கும் செத்துப்போனவர்களின் வயிற்றை நிரப்பும் என்கிறார் புரோகிதர். அறிவியல் வளர்ச்சி பெற்றுவிட்ட இந்த இருபதாம் நூற்றாண்டிலும், அவர் சொல்வதை நம்புகிறவர்களின் எண்ணிக்கை மிகப் பலவாக இருப்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

சமுதாயச் சீர்திருத்தவாதிகள் பலரும் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது.



=======================================================================
நன்றி: ‘மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை’[அருணன்], நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை.